காயல்பட்டினம் நகர்மன்றத்தின் ஜனவரி மாதத்திற்கான சாதாரண கூட்டம், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், நகர்மன்றக் கூட்டரங்கில் ஜனவரி 20ஆம் தேதி காலை 11.30 மணிக்கு நடைபெற்றது.
12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகுவைத் தவிர மற்ற அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், மொத்தமிருந்த 30 கூட்டப் பொருட்களுள் முதல் ஏழு பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படாததால், அவற்றை ஒத்தி வைத்ததுடன், இதர 23 கூட்டப் பொருட்கள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருட்களும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் வருமாறு:-
பொருள் எண் 01 முதல் 07 வரை:
இந்த 7 கூட்டப் பொருட்களும் நிதி தொடர்பானவையாக இருக்க, அவற்றுக்கான சார்பு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் அவற்றை ஒத்தி வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருள் எண் 08:
அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருள் எண் 09:
அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருள் எண் 10:
குறைந்த ஒப்பந்தப் புள்ளியை அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருள் எண் 11:
அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருள் எண் 12:
குறைந்த ஒப்பந்தப் புள்ளியை அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருள் எண் 13:
அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருள் எண் 14:
அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருள் எண் 15:
ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருள் எண் 16:
அரசு ஆவணங்களில் உள்ளபடி தெருப்பெயரிட்டே அனைத்து தெருக்களிலும் தெருப்பெயர்ப் பலகை நிறுவப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான தெருப்பெயர்களைத் திருத்த வேண்டுமெனில், அந்தந்தப் பகுதி மக்களின் கோரிக்கையைப் பெற்று, நகர்மன்றத்தில் விவாதித்த பின் மேல் நடவடிக்கைக்கு முனையலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருள் எண் 17:
கூட்டத்தின் துவக்கத்திலேயே அவர்களது மரணத்திற்காக அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தியதோடு, இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
பொருள் எண் 18:
நகராட்சி வாகனத்திற்கு டீசல் ஊற்ற முறைகேடாகக் கணக்கு காண்பித்தமைக்காக - TN69 9148 என்ற எண் கொண்ட வண்டியின் வாகன ஓட்டுநருக்கு மட்டும் பணி கால நீட்டிப்பு செய்ய வேண்டியதில்லை என்றும், அவரைத் தவிர்த்து அனைவருக்கும் கால நீட்டிப்பு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு, 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் ஆகிய இருவர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பொருள் எண் 19:
பொருள் எண் 20:
பொருள் எண் 19, 20 ஆகியன குறித்து உறுப்பினர்கள் சிலர் நீண்ட வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, பொருள் எண் 19 - கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியில் புதிய சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், பொருள் எண் 20 - தீவுத்தெருவில் புதிய சாலை அமைக்க ஆதரவு தெரிவித்தும் குரலெழுப்பினர். விவாதம் நிறைவுக்கு வராமல் போகவே, பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரிக்கைப் படி அவற்றை ஒத்திவைத்து தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
பொருள் எண் 21:
அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருள் எண் 22:
அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருள் எண் 23:
அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருள் எண் 24:
புல எண் 392/5ஐ பரிசீலிக்கத் தேவையில்லை என்றும், நகராட்சிக்குச் சொந்தமான வேறிடங்களைப் பரிசீலிக்குமாறும் 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி வலியுறுத்திப் பேசினார்.
இதுவரை பரிசீலிக்கப்பட்ட இடங்களுள் இதுவே சிறந்த இடமாக வட்டாட்சியர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரிடமிருந்து கடிதம் பெறப்பட்டதாலேயே இக்கூட்டப் பொருளை தான் முன்வைத்துள்ளதாகவும், அச்சப்படும் அளவுக்கு பயோகேஸ் திட்டம் பாதுகாப்பற்றது அல்ல என்றும் படத்துடன் விளக்கி, ஆற்காடு நகரில் அமைக்கப்பட்டுள்ள பயோகேஸ் திட்டத்தை யாரும் நேரில் சென்று பார்க்கலாம் என்றும் நகர்மன்றத் தலைவர் கூறினார்.
எந்த இடத்தையும் போய்ப் பார்க்க வேண்டியதில்லை என்றும், மெஜாரிட்டியே முடிவு என்றும் துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் கூறினார்.
எனினும், புல எண் 392/5ஐ இத்திட்டத்திற்கு பரிசீலிக்கக் கூடாது என உறுப்பினர் இ.எம்.சாமியும், அவருக்கு ஆதரவாக துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், உறுப்பினர்களான ஏ.கே.முஹம்மத் முகைதீன், கே.ஜமால் உள்ளிட்டோரும் கூறினர்.
மயானத்திற்குள் இத்திட்டம் அமைக்கப்படுவதை தான் அன்று எதிர்த்தது போல இன்றும் எதிர்ப்பதாகவும், இதே புல எண் 392/5இல் மயானம் அல்லாத பகுதியில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் பிரச்சினை என்ன என்றும் 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கேள்வியெழுப்பினார்.
அம்மாவின் திட்டம் இது என்பதால் வேண்டுமென்றே இதைத் தடுக்க முயற்சி செய்யப்படுவதாக 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் கூற, திட்டத்தைத் தாங்கள் எதிர்க்கவில்லை என்றும், புல எண் 392/5இல் வரவேண்டாம் என்றே கூறுவதாகவும் துணைத்தலைவர் கூறினார்.
பெரும்பான்மை உறுப்பினர்கள் அதை ஆதரிக்கவே, அதனடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“இத்திட்டத்தை எதிர்ப்பது என முடிவு செய்துவிட்டீர்கள்... உப்புச்சப்பில்லாத காரணத்தைக் கூறி எதிர்க்கிறீர்கள்...” என உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கூறினார்.
பொருள் எண் 25:
அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருள் எண் 26:
அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருள் எண் 27:
அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருள் எண் 28:
மின் மோட்டாரை மாற்றியமைக்க அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருள் எண் 29:
அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருள் எண் 30:
அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத் துளிகள்...
கூட்டத்தின் முழுமையான அசைபடப் பதிவைக் காண கீழ்க்காணும் படத்தின் மீது சொடுக்குக!
துவக்கமே விவாதக் களமானது...
பொதுவாக ஒரு கூட்டத்தில், அக்கூட்டத்திற்கான பொருள் (அஜெண்டா) குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட வேண்டும். அதன் பின்னர், தலைவரின் அனுமதியைப் பெற்று இதர அம்சங்கள் குறித்து கருத்து தெரிவிக்கவோ, விவாதிக்கவோ செய்யலாம் என்பது மரபு. நகர்மன்றக் கூட்ட சட்ட விதிகளும் இதையே தெரிவிக்கின்றன.
இவ்வாறிருக்க, இக்கூட்டம் துவங்க ஆயத்தமானபோதே - தெருக்களில் நிறுவப்பட்டுள்ள பெயர்ப்பலகை குறித்துப் பேசி, விவாதக் களமாக்கினார் - 11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன். அதைத் தொடர்ந்தார் 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன்.
இந்நிகழ்வின் அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
‘மெகா’ சாபம்...
தெருக்களுக்கான பெயர்ப்பலகை குறித்த விவாதித்து முடிக்கப்பட்ட சில நிமிடங்களில், 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் எழுந்து பேசினார்.
நகராட்சிக்கென்றே ஒரு அமைப்பு துவங்கப்பட்டுள்ளதாகவும், நகர்மன்ற உறுப்பினர்களை தவறாகக் குற்றஞ்சாட்டுவதாகவும் கூறிய அவர், “உருப்பட மாட்டானுவோ! நாசமாப் போவானுவோ!!” என்று சாபமிட்டார்.
இந்த விவாதத்தில், 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா, 03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
3 கேள்விகள்...
கூட்டப்பொருள் அல்லாத இதர அம்சங்கள் குறித்து உறுப்பினர்களுக்குக் கேள்விகள் எதுவுமிருப்பின், அவற்றை தனித்தாளில் முன்னரே எழுதிக்கொடுக்க வேண்டுமென்பது விதி. அதனடிப்படையில், 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி 3 கேள்விகளை எழுத்துப்பூர்வமாகக் கேட்டிருந்தார். நகர்மன்றத் தலைவர் அவற்றுக்கு தனது விளக்கத்தை அளித்தார்.
இந்நிகழ்வின் அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
இறந்தோருக்கு இரங்கல்...
அண்மையில் காலமான நகராட்சி நிர்வாகத்துறை திருநெல்வேலி மண்டல இயக்குநர் மோகன், காயல்பட்டினம் நகராட்சியின் துப்புரவுப் பணியாளர் பெருமாள் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வின் அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
17ஆவது வார்டு உறுப்பினர் உள்ளிருப்புப் போராட்டம்...
கூட்டப்பொருளை வாசிக்க - நகராட்சி அலுவலர் நிஸார் ஆயத்தமானபோது அவரை இடைமறித்து, பொதுமக்களுள் ஒருவருடன் நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வு குறித்து 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் பேசத் துவங்கினார்.
நகராட்சிக்குத் தொடர்பில்லாத விவகாரங்கள் குறித்து நகர்மன்றக் கூட்டத்தில் பேச வேண்டிய அவசியமில்லை என நகர்மன்றத் தலைவர் கூறினார். எனினும், எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் உறுப்பினர் அஜ்வாத் தொடர்ந்து பேசி முடித்த பின், அந்நிகழ்வைக் கண்டித்து தான் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவதாக அறிவித்து, இருக்கையை விட்டும் எழுந்து, கூட்டரங்கின் ஒரு ஓரத்தில் தரையில் அமர்ந்தார்.
இந்நிகழ்வின் அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
சிறிது நேரத்தில், கூட்டத்தில் கலந்துகொண்டோருக்கான தொகையை நகராட்சி ஊழியர் ஒருவர் உறையில் வைத்து உறுப்பினர்களிடம் வினியோகித்துக் கொண்டிருந்தார். உள்ளிருப்புப் போராட்டத்திலிருந்த உறுப்பினர் அஜ்வாத் தனக்கும் தொகை வேண்டும் என்று கேட்க, “போராட்டம் நடத்துவோருக்கு பணம் கொடுக்கலாமா?” என 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கேள்வியெழுப்பினார்.
தொகையைப் பெற தொடர்ந்து அவர் முயற்சித்த நேரத்தில், கூட்டத்தில் கலந்துகொள்வோருக்கே பணம் கொடுக்கப்பட வேண்டுமென்றும், உள்ளிருப்புப் போராட்டம் நடத்துபவருக்கு கொடுக்கலாமா, கூடாதா என்பது குறித்து கூட்டத்தின் நிறைவில் கேட்டறிந்து கொடுக்கலாம் என்றும் நகர்மன்றத் தலைவர் கூறினார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய துணைத்தலைவர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யுமாறும், வர வேண்டிய பணம் தானாக வரும் என்றும் உறுப்பினர் அஜ்வாதை நோக்கிக் கூறினார்.
நகராட்சி அலுவலர் நிஸார் கூட்டப்பொருளை வாசிக்க முனைந்தபோது, அவர் கையிலிருந்த கூட்டப்பொருளைப் பறித்து தன் கையில் வைத்துக்கொண்டு, “இந்தக் கூட்டம் நடக்கக் கூடாது” என்று உறுப்பினர் அஜ்வாத் கூறினார்.
இந்நிகழ்வின் அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
இதுகுறித்து நீண்ட நேரம் விவாதம் சென்றது. ஒரு கட்டத்தில், இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் சில கருத்துக்களைக் கூறியபோது, “நீங்கள்லாம் ஆதரவா வந்தா தப்பிப்பியோ... அல்லது எனக்கு நேர்ந்ததுதான் உங்களுக்கும் நேரும்” என்று உறுப்பினர் அஜ்வாத் கூறினார்.
இந்நிகழ்வின் அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
இதுகுறித்தே நீண்ட நேரம் விவாதம் சென்றுகொண்டிருந்த நிலையில், அதனை முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி, “நீங்க எவ்வளவு நேரம் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப் போறீங்க?” என உறுப்பினர் அஜ்வாதிடம் கேட்க, “ஒரு மணி நேரம்” என்று அவர் கூற, “ஒரு மணி நேரம் கழித்து கூட்டத்தில் அமர்ந்த பின் பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறி, பிரச்சினையை முடித்து வைத்தார்.
இவ்வாறாக விவாதங்கள் நிறைவடைந்த பின், கூட்டப்பொருட்கள் வாசிக்க உறுப்பினர்கள் வழிவிட்டனர்.
ஒத்திவைப்புத் தீர்மானத்தால் பயனில்லை...
01 முதல் 07 வரையிலான செலவுக் கணக்கு குறித்த கூட்டப்பொருட்களுக்கு, உரிய ஆவணங்கள் நகராட்சி நிர்வாகத்தால் இணைக்கப்படாததால், அப்பொருட்களை ஒத்திவைக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதுகுறித்து கருத்துக் கூறிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், வெறுமனே ஒத்திவைப்புத் தீர்மானங்களை நிறைவேற்றிக் கொண்டிருப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை என்றும், முறையான ஆவணங்களை சமர்ப்பிக்காததற்காக மேலதிகாரிகளுக்கு குற்றச்சாட்டை எழுத்தில் அனுப்பி வைக்குமாறும் நகர்மன்றத் தலைவரைக் கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஒத்திவைத்த கூட்டப் பொருளை அடுத்து நடைபெறும் கூட்டத்திற்கான கூட்டப் பொருளுடன் இணைத்து வைக்க வேண்டும் என்பது விதி. இவ்வாறிருக்க, “அவற்றை மீண்டும் மீண்டும் கூட்டப் பொருளில் ஏன் சேர்க்க வேண்டும்?” என துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் கேள்வியெழுப்ப, விதிப்படி அது செய்யப்பட வேண்டும் என அவருக்குக் கூறப்பட்டது.
இந்நிகழ்வின் அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
அப்பா, அம்மாகிட்ட சண்டை பிடிப்போமா...?
செலவுக் கணக்குக்கான ஆவணங்கள் இணைக்கப்படாததால் அப்பொருட்களை ஒத்தி வைக்கவும், நகராட்சி நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்யவும் பேசப்பட்ட நேரத்தில் குறுக்கிட்டுப் பேசிய நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார், “அப்பா, அம்மா கிட்ட சண்டை போடுவோமா...?” என்று கேட்டார். அதற்கு விடையளித்துப் பேசிய நகர்மன்றத் தலைவர், “நகர்மன்றம் வேறு, நகராட்சி வேறு” என்று கூறினார்.
இந்நிகழ்வின் அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
தொடர்ந்து பேசிய அவர், இதுவரையுள்ள நகராட்சியின் நிதிநிலையறிக்கை (பட்ஜெட்) போலல்லாமல், வரும் 2014-2015 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்தேனும் நகர்மன்றத்தில் சிறப்புக் கூட்டம் நடத்தி விவாதித்து, முறைப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்நிகழ்வின் அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
தலவாணிமுத்துவுடன் ஒப்பந்தம் ஏன்...?
கூட்டப்பொருள் 10 குறித்து விவாதித்துக்கொண்டிருந்தபோது, ஒப்பந்தக்காரர் தலவாணிமுத்துவைக் குறைகண்டதால், அவரை எடுக்கவே கூடாது என அனைவரும் அடம்பிடித்த நிலையில், இன்று மட்டும் அவருக்குக் கொடுக்க முனைவது ஏன்? என 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கேட்க, அவர் தற்போது ஒழுங்காக வேலை செய்வதாக துணைத்தலைவர் கூறினார்.
முரண்பாடாகப் பேசக்கூடாது என உறுப்பினர் ஜஹாங்கீர் கூறியபோது, “மெஜாரிட்டி முடிவே முடிவு” என்று துணைத்தலைவர் கூறினார். அவரது கருத்தை வரவேற்று 03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள், 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால் ஆகியோர் பேசினர். “எந்த நேரத்திலும் எதுவும் நடக்கும் என்பதற்கு ஆதாரம் இவர்தான்” என உறுப்பினர் ஜஹாங்கீரை சுட்டிக்காட்டி 02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா கூறினார்.
தான் யாரிடமும் கை நீட்டிப் பணம் பெற்றதில்லை என்றும், எனவே தனக்கு சரியெனப்பட்டதை ஆதரித்தும், தவறெனப்பட்டதை எதிர்த்துமே அன்றும், இன்றும் பேசி வருவதாகவும், சில உறுப்பினர்களைப் போல “காசு தந்தா வா, காசு தராட்டி போ” என்ற தொணியில் தான் பேசுவதில்லை என்றும் உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கூறினார். “இன்னும் சில காலமே பதவியில் இருப்போம் என்றும், அதற்குப் பிறகு அல்லாஹ்வுக்கு பதில் கூற வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறினார்.
இதுகுறித்து 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி கூறுகையில், தலவாணிமுத்துவிடம் ஒப்பந்தம் கொடுக்கக் கூடாது என ப்ளாக் லிஸ்ட் பண்ணப்படவில்லை என்றும், எனவே ஏற்கனவே உள்ளதையும், தற்போதுள்ளதையும் இணைத்துப் பேச வேண்டாம் என்றும் கூறினார். “அப்படியானால், அன்று ஏன் அவர் வேண்டாம் என நிறுத்தப்பட்டார்?” என உறுப்பினர் ஜஹாங்கீர் கேட்க, “அப்படிச் செய்தால்தான் அவன் வால்வு தொட்டியைப் போடுவான் என்று கருதிதான் அவ்வாறு செய்யப்பட்டது...” என்று துணைத்தலைவர் கூறினார்.
அதற்கு மகிழ்ச்சி தெரிவித்த உறுப்பினர் ஜஹாங்கீர், ஒப்பந்தக்காரர் மீரான் ஒருவழிப்பாதை சாலை வேலையை செய்யாமல் இழுத்தடித்தபோது மட்டும் - தன் வார்டு பிரச்சினை என்பதால் ஒன்றும் பேசாத நிலையில் தற்போது பேசுவதாக துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீனிடம் கூறினார்.
ஒருவழிப்பாதைப் பணிகள் நிற்க உறுப்பினர் ஜஹாங்கீர்தான் காரணமென்றும், அவர்தான் பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருப்பதாகவும் துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் கூறினார். அதற்கு ஆதாரமிருந்தால் தருமாறு உறுப்பினர் ஜஹாங்கீர் கேட்டார். இவ்வாறாக இந்த விவாதம் சென்றுகொண்டிருந்தது.
இந்நிகழ்வின் அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
கிழக்கு கடற்கரை சாலை...
கிழக்குக் கடற்கரை சாலை தொடர்பாக தான் அளித்த கோரிக்கை கூட்டப்பொருளில் சேர்க்கப்படாதது ஏன் என 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன் கேள்வியெழுப்பினார். அதற்கு விடையளித்த நகர்மன்றத் தலைவர், காயல்பட்டினம் வழியே கிழக்குக் கடற்கரை சாலை அமைய நகர்மன்றத்தினரால் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள் குறித்து கூறியதோடு, கிழக்கு கடற்கரை சாலை காயல்பட்டினத்தில் எந்த வழியாக அமையப்பெறும் என்பதற்கான வழித்தட வரைபடம் இல்லை என்றும், எனவே கூட்டப்பொருளில் சேர்க்கப்படவில்லை என்றும் கூறினார்.
இந்நிகழ்வின் அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
டீசல் முறைகேடு செய்த ஓட்டுநர்...
நகராட்சி வாகனத்திற்கு டீசல் ஊற்ற முறைகேடாகக் கணக்கு காண்பித்தமைக்காக - வாகன ஓட்டுநருக்கு மட்டும் பணி கால நீட்டிப்பு செய்ய வேண்டியதில்லை என்றும், அவரைத் தவிர்த்து அனைவருக்கும் கால நீட்டிப்பு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு, 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் ஆகிய இருவர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பலர் ஒரே வாகனத்தை ஓட்டிக்கொண்டிருக்க, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநரின் பெயரை தீர்மானத்தில் கொண்டு வராவிட்டால் பயனில்லை என்று நகர்மன்றத் தலைவர் கூறினார். அதற்கு 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கனவே உள்ள கூட்டப் பொருட்களில் அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தால் தற்போதும் குறிப்பிடுவதில் தவறில்லை என 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கூறினார். உறுப்பினர் பத்ருல் ஹக் தொடர்ந்து குறுக்கிடவே, “இந்த தீர்மானத்தை நீ எதிர்த்துவிட்டாய்... எனவே ஆதரவு தெரிவித்து நிறைவேற்றப்படும் தீர்மான வாசகம் குறித்து கவலை கொள்ள வேண்டிய அவசியம் உனக்கில்லை” என உறுப்பினர் ஜஹாங்கீர் கூறி, அவரை அமரச் சொல்லவே, அவர் வாய்மூடி இருக்கையில் அமர்ந்தார்.
இந்நிகழ்வின் அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
கற்புடையார் பள்ளி வட்டத்திற்கு நோ! தீவுத்தெருவுக்கு ஓகே!!
கூட்டப்பொருள் 19இல் கற்புடையார் பள்ளி வட்டம் பகுதிக்கும், 20இல் தீவுத்தெருவிற்கும் புதிய சாலைகள் கேட்டு, அந்தப் பகுதிகளை உள்ளடக்கிய 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி கோரிக்கை வைத்திருந்தார்.
கற்புடையார் பள்ளி வட்டம் பகுதிக்கான சாலை குறித்து விவாதித்த - துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சிலர், பல்வேறு காரணங்களைக் கூறி, அங்கு புதிய சாலை அவசியமற்றது என்ற கருத்தில் பேசினர்.
அவரவர் பகுதிகளுக்கு உறுப்பினர்கள் புதிய சாலை கேட்டபோது யாரும் குறுக்கீடு செய்யாத நிலையில், தன் பகுதிக்கு மட்டும் குறுக்கீடு செய்வதேன் என உறுப்பினர் ஜெ.அந்தோணி கேட்டார். அதற்கு, “மெஜாரிட்டிதான் முடிவு” என்றும், “மெஜாரிட்டி இருந்தால் பண்ணிட்டுப் போங்க” என்றும் துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் ஆகியோர் கூறினர்.
அடுத்தடுத்த கூட்டங்களில், நகர்மன்றக் கூட்டத்திற்கு முன்பாகவே ஒரு கூட்டம் நடத்தி, எந்தப் பொருளுக்கு ஒப்புதலளிப்பது, எதற்கு அளிப்பதில்லை என முற்கூட்டியே முடிவெடுத்துவிட்டு வருவோம்... நம்மதானே மெஜாரிட்டி? மீட்டிங்கை நம்ம நடத்துவோம் இனி!” என உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் மேலும் கூறினார்.
தீவுத்தெருவிற்கான சாலை குறித்த கூட்டப் பொருள் 20 குறித்து – விவாதிக்காமலேயே அவர்கள் ஆதரவளித்தனர். அப்போது எழுந்து பேசிய நகர்மன்றத் தலைவர், இரண்டாவது பைப்லைன் குடிநீர் திட்டத்திற்காக சாலைகளைத் தோண்ட வேண்டியிருப்பதால், ‘நிதிநிலையைக் கருத்திற்கொண்டு முன்னுரிமை அடிப்படையில் செய்யலாம்’ என்ற வாசகமிட்டு இதுவரை நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் தீர்மானமியற்றப்பட்டு வருவதாகவும், தற்போதைய கோரிக்கை - அது கற்புடையார் பள்ளி வட்டம் ஆனாலும் சரி; தீவுத்தெருவானாலும் சரி! அதற்கும் அவ்வாறே நாம் தீர்மான வாசகம் எழுத வேண்டும் என்றும் கூறினார்.
“மங்களவாடியில், CRZ பகுதியாக இருந்தும் சாலை போடப்பட்டுள்ளதே? என் பகுதி மயான சாலையை மட்டும் CRZ என்று கூறி புறக்கணிப்பதேன்?” என உறுப்பினர் ஜெ.அந்தோணி கேட்க, “அது எம்.எல்.ஏ. நிதியில் போடப்பட்ட சாலை என்றும், அந்த வார்டு கவுன்சிலர் இல்லை என்பதால், அந்த வார்டு குறித்து பேசக்கூடாது என்றும் துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் ஆகியோர் பேசினர்.
CRZ பகுதியில் புதிய சாலைதான் அமைக்க இயலாதே தவிர, ஏற்கனவே இருக்கும் சாலையில் புதிய சாலை அமைக்கலாம் என ஏற்கனவே உறுப்பினர் அந்தோணியிடம் கூறியதாக நகராட்சி திட்ட உதவி அலுவலர் செந்தில்குமார் கூறினார்.
நிறைவில், கூட்டப்பொருட்கள் 19, 20 இரண்டையும் ஒத்திவைத்து தீர்மானமியற்றுமாறு பெரும்பான்மை உறுப்பினர்கள் கூற, அதனடிப்படையில் தீர்மானமியற்றப்பட்டது.
இந்நிகழ்வின் அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
அதுக்குத்தான் எங்க கூட இருக்கனும்ங்கறது...
கூட்டப்பொருள் 19, 20 ஆகியவற்றுக்கு ஒத்திவைப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் கூட்டரங்கை விட்டும் வெளியில் சென்று விட்டு, சிறிது நேரம் கழித்து மீண்டும் திரும்பினார் உறுப்பினர் ஜெ.அந்தோணி. அப்போது, சட்டத்திற்குப் புறம்பாக வீட்டுத்தீர்வை ரசீது பெற்றுள்ளதாக அவர் மீது உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் குற்றச்சாட்டைக் கூறி, அதுகுறித்து விளக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், “அதுக்குத்தான் எங்க கூட இருக்கனும்ங்கறது...” என்று உறுப்பினர் அந்தோணியை நோக்கிக் கூறினார். “உங்க கூட இருந்தா தப்பு சரியாகி விடுமா?” என்று உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் எதிர்கேள்வியெழுப்பினார்.
இந்நிகழ்வின் அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
கள உதவி:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முந்தைய கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |