இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில் வாக்களிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவது தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் அனைத்துக் கல்லூரி முதல்வர்களுடன், மாவட்ட தேர்தல் அலுவலரும் - மாவட்ட ஆட்சியருமான ம.ரவிக்குமார் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் இன்றைய இளம் வாக்காளர்கள் வலுவான ஜனநாயகத்திற்கு பெருமளவில் பங்கேற்க வேண்டும். “உங்கள் வாக்கு, உங்கள் எதிர்காலம்”. அதை சரியாகப் பயன்படுத்த வேண்டும். ஜனநாயகத்தை மதித்து, மறவாமல் ஏப்ரல் 24 அன்று வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்.
மாவட்டம் முழுவதும் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் கிராமங்கள்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கிராமப் பகுதிகளில் வாழும் இளைஞர்கள் - கிராம மக்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துக் கூறி, அனைவரும் வாக்களித்து, தங்கள் கிராமம் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவிகித முழுமை பெற்ற கிராமமாகத் திகழ அனைவரும் பாடுபட வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) புரூஸ், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்துகொண்டனர். |