“ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இடம் பெற்றிருந்த தி.மு.க. தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது? என கேள்வி கேட்கும் ஜெயலலிதா அம்மையாரே, நீங்கள் முதல்வராக இருக்கும் இந்த மூன்றாண்டு காலத்தில் ஒருமுறையாவது தமிழகத்தின் நன்மைக்காக பிரதமரை சந்தித்து வாதாடியது உண்டா?”’ என, தூத்துக்குடியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் என்.பி.ஜெகனை அறிமுகப்படுத்துவதற்காக தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்திருந்த பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்றுள்ளது. தி.மு.க.வுடன் நாங்கள் உறவு கொண்டிருப்பதற்குக் காரணம் சிறுபான்மையினரின் தனித்தன்மைகளைக் காப்பதில் தி.மு.க. எப்போதும் முன்னணியில் இருக்கிறது; சிறுபான்மையினருடைய உரிமைகளைக் காப்பதோடு மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கான பல்வேறு நன்மைகளையும் தந்தவர் கலைஞர் என்பதால்தான்.
பா.ஜ.க.வை பிரதிபலிக்கும் அ.தி.மு.க
கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கியதோடு மட்டுமல்லாமல், நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணைய பரிந்துரையை ஏற்று மத்தியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க நாங்கள் வலியுறுத்துவோம் என்பதை தங்களுடைய தேர்தல் அறிக்கையிலும் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளது தி.முக.
பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதை மிகக் கடுமையாக எதிர்த்ததோடு அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தைக் கொண்டு வராமல், தனியார் சட்டங்களை காப்பாற்ற வேண்டும் என்பதையும் தி.மு.க. தனது கொள்கையாகக் கொண்டிருக்கிறது.
ஆனால், அ.இ.அ.தி.மு.க. இதற்கு நேர்மாற்றமான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி, அது பிரபல நாளிதழ்களில் 8 கால தலைப்பாக வெளிவந்தது.
இது பாரதீய ஜனதா கட்சியின் கொள்கை. பொது சிவில் சட்டம் மட்டுமின்றி, இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதார அளவுகோல் கொண்டு வரப்பட வேண்டும் என்பதும் பா.ஜ.க.வின் லட்சியம். அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையும் அதைத்தான் பிரதிபலிக்கிறது.
சமூக நிலையிலும், கல்வியிலும் பின்தங்கிய மக்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் கல்வியும், வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்பதே சமூக நீதி. இதைத்தான் அரசியல் சட்டமும் சொல்கிறது. ஆனால், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சமூக நீதி என்பது சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு சமவாய்ப்பு என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஆக, பா.ஜ.க.வின் கொள்கையை அ.தி.மு.க. அப்பட்டமாகப் பிரதிபலிக்கிறது.
மதச்சார்பற்ற இந்தியா
பாரதீய ஜனதா கட்சியோடு நாங்கள் உறவுகொள்ள முடியாது. அவர்களோடு கூட்டுச் சேர்ந்தவர்களோடும் நாங்கள் தோழமை கொள்ள முடியாது. பா.ஜ.க.வையோ, அதன் தலைவர்களையோ நாங்கள் விவாதிக்கவில்லை. ஆனால், அவர்களின் கொள்கை எங்களுக்கு ஒத்து வராது.
மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டை இந்து ராஷ்ட்ராவாக மாற்றுவோம் என அவர்கள் சொல்கிறார்கள். தங்களுடைய பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. நரேந்திரமோடியை அறிவித்துள்ளது. நரேந்திர மோடி மதச்சார்பற்றவரா என்றால் இல்லை.
சிறுபான்மையின மாணவர்களை கல்வியில் ஊக்குவிக்க மத்திய அரசு கல்வி உதவித் தொகையை வழங்கி வருகிறது. ஆனால், அதைப் பெற்று ஏழை சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்காமல் அதை அப்படியே திருப்பிவிடும் ஒரே மாநிலம் குஜராத்தான்.
மோடி ஒருபோதும் திருந்த மாட்டார். 67 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதக்கலவரங்கள் நடந்துள்ளன. இந்திராகாந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் கலவரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால், இந்தப் படுகொலைக்கு காங்கிரஸ் பகிரங்க மன்னிப்பு கேட்டது. சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த மன்மோகன் சிங்கிற்கு 10 ஆண்டு காலம் பிரதமர் பதவி வழங்கப்பட்டது.
ஆனால் 2002 குஜராத் கலவரத்தில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். வருத்தம் தெரிவிப்பதற்குக் கூட மோடிக்கு மனம் வரவில்லை. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நஷ்ட ஈடு வழங்க முடியாது என நீதிமன்றத்திலேயே குஜராத் அரசு தெரிவித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, இக்கலவரத்தில் உயிரிழந்த முஸ்லிம்களை காரில் அடிபட்ட நாய்க்குட்டிகளோடு ஒப்பிட்டு நரேந்திர மோடி பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
கடந்த காலத்தில் பாரதீய ஜனதா கட்சியை விமர்சித்தவர்கள் இன்று அக்கட்சியோடு உறவு கொள்கிறார்களே என்று நினைக்கும்போது வேதனைதான் வருகிறது. சிறுபான்மையினர் குரலாக ஒலிப்பேன் என்ற ம.தி.மு.க.வின் வைகோ, திராவிட கட்சிகளோடும், தேசிய கட்சிகளோடும் கூட்டணி வைக்க மாட்டோம் என வீராப்பு பேசிய பா.ம.க.வின் டாக்டர் ராமதாஸ் போன்றோரெல்லாம் பா.ஜ.க. உறவுக்கு துடிப்பது ஏன்?
ஜெயலலிதாவின் தேர்தல் பரப்புரை
தூத்துக்குடி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த தி.மு.க. தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது? என கேட்டுள்ளார்.
2004 தேர்தலில், தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதும் 40 எம்.பி.க்களும் கலைஞர் தலைமையில் ஒன்றாகக் கூடி, தமிழ்நாட்டின் தேவைகளை 300 திட்டங்களாக பட்டியலிட்டோம். அதில் ஒருசில திட்டங்களை தவிர அனைத்துமே நிறைவேற்றப்பட்டும் விட்டன. அப்படி நிறைவேற்றி முடிக்கப்படாத திட்டத்தில் ஒன்றுதான் சேதுசமுத்திர திட்டம். அந்தத் திட்டமும் பாதி வேலைகள் முடிக்கப்பட்டு கிடப்பில் கிடக்கிறது. இதற்குக் காரணம் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்பது தமிழக மக்களுக்குத் தெரியாத ஒன்றல்ல.
தமிழர்களின் 150 ஆண்டு கனவுத் திட்டமான - அண்ணாவாலும், எம்.ஜி.ஆர்., கலைஞராலும் வலியுறுத்தப்பட்ட அந்த திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு மதுரையில் நடைபெற்ற அதன் தொடக்க விழாவுக்கு நாங்கள் மட்டுமல்ல, வைகோ, கம்யூனிஸ்ட் தலைவர்களும் கூட வந்திருந்தனர்.
எனவே, சேதுசமுத்திர திட்டத்தை முடக்கிப் போட்ட அ.தி.மு.க.விற்கு இந்த தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை கற்பித்துக் கொடுக்க வேண்டும்.
தி.மு.க. என்ன செய்கிறது என்று ஜெயலலிதா கேட்கிறாரே? அந்த அம்மையாரிடத்தில் நான் ஒன்று கேட்கிறேன். நீங்கள் முதல்வராகி இந்த மூன்றாண்டு காலத்தில் ஒரு முறையாவது மத்திய அரசிடம் சென்று தமிழ்நாட்டில் எந்த ஒரு திட்டத்திற்காவது வாதாடியதுண்டா?
முஸ்லிம்களுக்கு தனிஇட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு தனிஇட ஒதுக்கீடு வழங்கிய விஷயத்தில் ஜெயலலிதா கோயபல்ஸ் பிரச்சாரம் செய்கிறார். இந்த இடஒதுக்கீடு விஷயத்தில் அவர் எதிரான கொள்கை உடையவராகவே இருந்தார். ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு தனிஇட ஒதுக்கீடு வழங்கியபோது அதை எதிர்த்து பகிரங்க அறிக்கை வெளியிட்டார்.
வானத்திற்கும், சூரியனுக்கும் உள்ள உறவைப் போல் இடஒதுக்கீட்டிற்கும் - தி.மு.க.விற்கும் உள்ள உறவு பிரிக்க முடியாத ஒன்று. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியது தி.மு.க. என்பது மட்டுமல்ல, இந்த இடஒதுக்கீடு கிடைப்பதற்கு காரணமான லெப்பை, தக்னி, மாப்பிள்ளா, தூதேகுலா, செய்யது, ஷேக், அன்சர் என முஸ்லிம்களை பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்ததும் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசுதான்.
எனவே, ஜெயலலிதா இந்த விஷயத்தில் என்ன பரப்புரை செய்தாலும் அதை முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.விற்குத் தகுந்த பாடத்தைக் கற்றுக் கொடுப்பார்கள். தி.மு.க. கூட்டணியை வெற்றிபெறச் செய்வார்கள்.
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் என்.பி.ஜெகன், தி.மு.க.விற்கு உழைத்த குடும்பத்தைச் சார்ந்தவர். கலைஞரின் முரட்டு பக்தன் என்று பாராட்டப்படக்கூடிய தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமியின் புதல்வர்.
தூத்துக்குடி தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் முஸ்லிம் வாக்குகள் உள்ளன. நான் தம்பி ஜெகன் அவர்களிடத்தில் சொல்லிக்கொள்வேன். உங்கள் வாக்குகளை ஒரு லட்சத்து 30 ஆயிரத்து ஒன்றிலிருந்து எண்ணிக்கொள்ளுங்கள். அந்த அளவுக்கு எங்கள் சமூகம் வாக்களிக்கும்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.
கீதா இண்டர்நேஷனல் ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ. இப்றாஹீம் மக்கீ, எஸ்.டி.யு. மாநில பொதுச் செயலாளர் கே.எம்.நிஜாமுதீன், முஸ்லிம் மாணவர் பேரவை மாநிலச் செயலாளர் வி.ஏ. செய்யது பட்டாணி, தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஹாஜி பி.மீராசா மரைக்காயர், செயலாளர் எஸ்.ஜே. மஹ்மூதுல் ஹசன், பொருளாளர் சாகுல் ஹமீது உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் |