இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கொள்கை மற்றும் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது என, முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயல்வீரர் மற்றும் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில், பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசியுள்ளார்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
செயல்வீரர் கூட்டம்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயல்வீரர் மற்றும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம், இம்மாதம் 16ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணியளவில், தூத்துக்குடியிலுள்ள ஹோட்டல் கீதா இன்டர்நேஷனல் கூட்டரங்கில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் பி.மீராசா மரைக்காயர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, தலைமையுரையாற்றினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் ஏ.முஹம்மத் உவைஸ் வரவேற்றுப் பேசினார்.
வேட்பாளருக்கு வரவேற்பு:
தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் என்.பி.ஜெகன் ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். அவர்களை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தி வரவேற்றனர்.
என்.பெரியசாமி உரை:
கூட்டத்தில் பேசிய என்.பெரிய சாமி, திமுக வேட்பாளர் என்.பி.ஜெகனுக்கு முஸ்லிம் லீக் ஆதரவளித்து களப்பணியாற்றவுள்ளதற்கும், காயல்பட்டினத்தில் திருமண விழாவோடு தேர்தல் பரப்புரையைத் துவக்கித் தந்ததற்கும் நன்றி தெரிவித்தார்.
வேட்பாளர் என்.பி.ஜெகன் உரை:
அடுத்து பேசிய தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் என்.பி.ஜெகன், தான் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், முஸ்லிம் சமுதாயத்தின் நலன்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கப் போவதாகவும், காயல்பட்டினத்தின் வழியே கிழக்கு கடற்கரை சாலை அமைவதற்கும், காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் தேவைப்படும் அனைத்து அத்தியாவசிய மேம்பாட்டுப் பணிகளுக்கும் உறுதுணையாக இருக்கப்போவதாகவும் கூறினார்.
முஸ்லிம் லீக் மாவட்ட, கிளை நிர்வாகிகள் உரை:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், எட்டையபுரம் நடுவப்பட்டி பள்ளிவாசல் இமாம் ஜுபைருத்தீன், சாத்தான் குளம் பேருராட்சியின் முஸ்லிம் லீக் உறுப்பினர் முஹம்மத் இஸ்மாஈல், முஸ்லிம் லீக் மாவட்ட துணைத்தலைவர் கோவில்பட்டி திவான் பாஷா, கயத்தார் முஹ்யித்தீன், கலியாவூர் பஷீர், பட்டினமருதூர் சீனி முஹம்மத், முத்தையாபுரம் ஜமாஅத் தலைவர் முஸ்தஃபா, கேம்பலாபாத் அப்துல் ஹஸன், காயல்பட்டினம் நகர முஸ்லிம் லீக் தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், மாவட்ட வணிகரணி அமைப்பாளர் எம்.எஸ்.எஃப்.ரஹ்மான், வடமலை சமுத்திரம் ஜமாஅத் செயலாளர் என்.அப்துல் ரஹ்மான், காயல்பட்டினம் முஸ்லிம் லீக் துணைச் செயலாளர் என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், கோவில்பட்டி அய்யாகோட்டை நஸ்ருத்தீன், அரியநாயகிபுரம் ஜமாஅத் தலைவர் முத்து இப்றாஹீம், அரியநாயகிபுரம் பாஷா, ஆத்தூர் அப்பாஸ் உட்பட - முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட அனைத்துக் கிளை நிர்வாகிகள், ஜமாஅத் நிர்வாகிகள் கருத்துரையாற்றினர்.
மாநில நிர்வாகிகள் உரை:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவரணி (எம்.எஸ்.எஃப்.) மாநில அமைப்பாளர் செய்யது பட்டாணி, சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில அமைப்பாளர் கே.எம்.நிஜாமுத்தீன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், சென்னை ஆலந்தூர் மேத்தப்பிள்ளை மரைக்காயர் ஆகியோர், நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்ட செய்யப்பட வேண்டிய களப்பணிகள் குறித்தும், தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதற்கான வியூகங்கள் குறித்தும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
மாநில பொதுச் செயலாளர் உரை:
தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-
திமுக கூட்டணி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டவுடன், கூட்டணி வேட்பாளர்கள் பலர் சென்னையிலுள்ள முஸ்லிம் லீக் தலைமை நிலையத்திற்கு வருகை தந்து, தலைவர் பேராசிரியரைச் சந்தித்து வாழ்த்து பெற்றுச் சென்றனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் அவர்களின் தேர்தல் பரப்புரை தூத்துக்குடி தொகுதியிலிருந்துதான் துவங்கியுள்ளது. இன்று (மார்ச் 16) காலையில், காயல்பட்டினத்தில் நடைபெற்ற திருமண விழாவுடன் அவர் தனது தேர்தல் பரப்புரைப் பணிகளைத் துவக்கியுள்ளார். பரப்புரை நிறைவு நாள் வரை, தலைவரும், கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் மாநிலம் முழுக்க தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளோம்.
முஸ்லிம்களின் வாக்குகளைப் பிரிப்பதையும், இந்துக்களின் வாக்குகளை - தவறான நம்பிக்கைகளையூட்டி சேர்ப்பதையும் முக்கிய திட்டமாகக் கொண்டுள்ளது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. அதன் ஆதரவு பெற்ற வேட்பாளராகத்தான் இத்தேர்தலில் நரேந்திர மோடி களம் இறக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக கூட்டணியில் இதுவரை தொகுதிப் பங்கீடே நிறைவுறாத நிலையிலும், நாள்தோறும் ஊடகங்களில் பாஜக குறித்தும், நரேந்திர மோடி குறித்தும் வரிந்துகட்டிக்கொண்டு செய்திகள் வெளியாவது, பெரும்பான்மை ஊடகங்களும் ஒருசார்பு நிலையில் உள்ளதை உணர்த்துவதாகவே உள்ளது.
இந்நேரத்தில் முஸ்லிம் சமுதாய மக்களின் மேலான கவனத்திற்கு ஒன்றை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான விவகாரங்களில் மஹல்லா ஜமாஅத் ஒற்றுமை, மார்க்க அறிஞர்களின் வழிகாட்டல் அடிப்படையிலேயே முஸ்லிம்களின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். இதை சமுதாயத்தின் எந்தவோர் இயக்கமும் பேசுவதேயில்லை. ஆனால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்றும் அதைத் தெளிவாகப் பேசி வருகிறது.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடுவதால், அதிமுகவின் ஆதரவு வாக்குகள் பிரியும். அது திமுக வேட்பாளர் என்.பி.ஜெகன் அவர்களின் வெற்றிக்குச் சாதகமாக அமையும்.
தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், ஒவ்வொரு கட்சியிலும் அந்தந்தக் கட்சியின் தலைவர்கள் முன்னின்று போட்டியிடும் நிலையில், தான் போட்டியிடாமல் தன் மாணவரான எம்.அப்துல் ரஹ்மானைக் களத்தில் இறக்கியிருப்பது பேராசிரியர் அவர்களுக்கே உரிய பெருந்தன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
தூத்துக்குடி தொகுதியில், நம் கட்சியின் மாவட்ட தலைவர் பி.மீராசா மரைக்காயர் அவர்கள் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுகிறது. ஏதோ கூடினோம், பேசினோம், கலைந்தோம் என்றில்லாமல், இன்று முதல் முஸ்லிம் லீகினர் தீவிர தேர்தல் களப்பணியாற்ற வேண்டும். நாளை (மார்ச் 17) திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் பரப்புரையாற்ற வருகை தரவுள்ளார். அப்போது, பச்சிளம் பிறைக்கொடியுடன் நம் கட்சியினர் பெருந்திரளாக அவருடன் இணைந்து செல்ல வேண்டும்.
வேலூர் தொகுதியில் நமது ஏணி சின்னமும், தமிழகத்தின் இதர அனைத்துத் தொகுதிகளிலும் திமுகவின் உதயசூரியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் அனைத்து சின்னங்களும் வெற்றிபெற அயராது உழைப்பதுடன், அல்லாஹ்விடம் துஆவும் செய்ய வேண்டும்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசினார்.
பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உரை:
அடுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-
நாடாளுமன்றத் தேர்தலில் களப்பணியாற்றுவது குறித்து கலந்தாலோசிப்பதற்காக கூட்டங்கள் கூட்டப்படுவது வழமைதான். ஆனாலும், இன்று தூத்துக்குடியில் கூட்டப்பட்டுள்ள இக்கூட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
நம் ஆதரவுடன் தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவேன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு இங்கிருந்து விடைபெற்றுச் சென்றுள்ளார் இத்தொகுதியின் திமுக வேட்பாளர் என்.பி.ஜெகன். இக்கூட்டம் ஆரம்பம் மட்டுமே; முடிவல்ல.
பெரிய கட்சிகள் என்று கருதப்படும் கட்சிகளுக்கு இணையாக இத்தேர்தலில் களப்பணியாற்றி, நம் கட்சியை மீண்டும் பெரிய கட்சியாக மாற்றுவது சமுதாய மக்களாகிய உங்கள் கரங்களில் உள்ளது.
‘கொற்கை’ என்றழைக்கப்பட்ட காயல்பட்டினத்திலிருந்து தேர்தல் பரப்புரை துவங்கியுள்ளது. எப்படி அந்த கொற்கையிலிருந்து இஸ்லாம் இந்தியாவெங்கும் பரவியதோ, அதுபோல இத்தேர்தல் பரப்புரையும் அமையும். தூத்துக்குடி மக்கள் ஆழ்கடலுக்குச் சென்று முத்து எடுத்து வருபவர்கள். அரிய முத்துக்களையே ஆழ்கடலுக்குச் சென்று எடுத்து வரும் இவர்களுக்கு, இத்தேர்தலில் வெற்றிக்கனியைப் பறிப்பது ஒன்றும் பெரிய காரியமல்ல.
திமுக தலைமையிலான நம் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வலிமையானதும், தனிச்சிறப்பு வாய்ந்ததுமாகும். என்றாலும், அதைச் சொல்லிக்கொண்டே நாட்களைக் கடத்தி, களப்பணியாற்றாமல் இருந்துவிடக் கூடாது. இது ஒரு போர்க்களம். இப்போரில் திமுக கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபடுவது நம் யாவர் மீதும் கடமை.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேலூர் தொகுதியிலும், திமுக கூட்டணியின் இதர கட்சிகள் 39 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. நம் கட்சியினரைப் பொருத்த வரை, 40 தொகுதிகளிலும் நாம்தான் போட்டியிடுகிறோம் என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும். திமுக தலைவர் கலைஞர் சொன்னது போல, மத நல்லிணக்கத்தை உருவாக்குவதும், மதச்சார்பற்ற தன்மையை நிலைக்கச் செய்வதும் நம் அனைவரின் கடமையாகும். அது நடைபெற நம் தீவிர களப்பணி மிகவும் அவசியம்.
இந்திய அரசியல் சாசனம், இந்தியாவின் அனைத்து மதத்தினருக்கும், வகுப்பினருக்கும் சில தனித்தன்மைகளை வழங்கியிருக்கிறது. அவை, அந்தந்த வகுப்பினரின் பாரம்பரிய அடையாளம். அந்த அடிப்படையில், முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்க இந்த நாட்டில் யாருக்கும் உரிமையில்லை. “சாரே ஜஹான் ஸே அச்சா; ஹிந்துஸ்தான் ஹமாரா” என்று நாம் சொல்லிக்கொண்டிருக்க, தான் சார்ந்த மதத்தையும், ஆதிக்கத்தையும் நமக்குள் திணிக்க தீய சக்திகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அவற்றை முறியடிக்க வேண்டியது நம் கடமை.
நாம் எதிர்பார்க்கும் ஆட்சி அமைந்தால், இந்த நாட்டில் அனைத்து மதத்தினர் - வகுப்பினரின் பாரம்பரியம் பாதுகாக்கப்படும். ஆனால், மற்றவர்கள் விரும்பும் ஆட்சியமைந்தால் அந்த பாரம்பரியம் இல்லாமல் போய்விடும்.
இத்தேர்தலில் களப்பணியாற்றவுள்ள நம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கத்தினருக்கு நான் ஒன்றை அறிவுரையாகச் சொல்ல விரும்புகிறேன். நம் மார்க்கம் புனிதமானது. அது நமக்குக் கற்றுத்தந்துள்ள ஒழுக்க நெறி பிற சமுதாயத்தவராலும் மதிக்கத்தக்கது. அப்படிப்பட்ட நிலைக்குச் சொந்தக்காரர்களான நாம், இத்தேர்தலில் நம் கொள்கைகளைச் சொல்ல வேண்டும். அதுபோல, மாற்றுக் கொள்கைகளில் நமக்கு ஏன் உடன்பாடில்லை என்பதை மட்டுமே விளக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தனிநபர் தாக்குதலில் யாரும் இறங்கக் கூடாது. அது ஜெயலலிதா அம்மையாராகட்டும்; நரேந்திர மோடியாகட்டும். யாரையும் நாம் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கத் தேவையேயில்லை.
நாளை (மார்ச் 17) தூத்துக்குடி தொகுதிக்கு வருகை தரும் தமிழக முன்னாள் துணை முதல்வரும், திமுகவின் மாநில பொருளாளருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உற்சாக வரவேற்பளித்து, இணைந்து களப்பணியாற்ற உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில், திமுகவிற்கு அடுத்து உங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தான் இரண்டாவது கட்சியாக இடம்பெற்றுள்ளது. இந்தச் சிறப்புக்கு சொந்தக்காரர்கள் நீங்கள்தான்.
“இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இல்லையென்றால் நமது வெற்றி இல்லாமல் போயிருக்கும்” என நாளை வெற்றிவிழாவின்போது திமுக வேட்பாளர் அவர்கள் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு நம் களப்பணி இருக்க வேண்டும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கத்தினராகிய நாம், அல்லாஹ்வும், அவனது தூதரும் வகுத்துத் தந்த பாதையில் பயணிப்பதால் அவனது உதவி நம் அனைத்து செயல்பாடுகளிலும் நிச்சயமாக இருக்கும். வேகம் வேண்டுமானால் குறையலாம். ஆனால், தோல்வி இல்லை.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாநகர இளைஞரணி செயலாளர் எம்.கே.இம்ரான் கான் நன்றி கூற, காயல்பட்டினம் கிளை செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
பங்கேற்றோர்:
இக்கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட மூத்த தலைவர் அப்துல் கனி, தூத்துக்குடி மாநகர நிர்வாகிகள், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், காயல்பட்டினம் நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்டத்தின் அனைத்துக் கிளை நிர்வாகிகள், அனைத்து ஜமாஅத்துகளின் நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். |