வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக பொருளாளரும், தமிழக முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
காயல்பட்டினம் வருகை:
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் என்.பி.ஜெகனை ஆதரித்து இன்று அவர் தொகுதி முழுக்க பரப்புரை செய்து வருகிறார். இன்று மாலை 05.30 மணியளவில், திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டினம் வழியாக காயல்பட்டினம் பிரதான வீதியை வந்தடைந்தார்.
பெரிய சதுக்கை அருகில் உரை:
அங்கிருந்து, ஆறாம்பள்ளித் தெரு, சதுக்கைத் தெரு வழியாக பெரிய சதுக்கையைச் சென்றடைந்து, அங்கே கூடியிருந்த பொதுமக்கள் முன்னிலையில் அவர் உரையாற்றினார்.
பேருந்து நிலையம் அருகில் உரை:
பின்னர், சேதுராஜா தெரு, குத்துக்கல் தெரு, காட்டு தைக்கா தெரு, தைக்கா தெரு வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்து, அங்கே கூடியிருந்த மக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
பெரிய சதுக்கை, பேருந்து நிலையம் ஆகிய இரண்டு இடங்களிலும் அவர் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:-
வரவேற்பில் மகிழ்ச்சி:
காயல்பட்டினம் கலைஞர் பட்டினம்தான் என்பதை இங்குள்ள இஸ்லாமிய மக்கள் தொடர்ந்து நிரூபித்து வருகிறீர்கள் என்பதை, நான் வந்த வழியெல்லாம் நீங்கள் அளித்த வரவேற்பைப் பார்த்து மீண்டும் அறிந்துகொண்டேன்.
ஏதோ ஓட்டுக்காக மட்டும் இந்த ஊருக்கு நாங்கள் வருவதில்லை. மாறாக, சிறுபான்மை மக்கள் மீது - குறிப்பாக காயல்பட்டினம் மக்கள் மீது தலைவர் கலைஞர் அவர்களுக்கு என்றுமே பாசம் மிகுதியாக உள்ளது.
கூட்டணிக் கட்சிகளின் வரவேற்பு:
மணமகனை ஊர்வலமாக அழைத்து வந்தது போல வழிநெடுகிலும் நீங்கள் சாலைகளின் இரு புறங்களிலும் நின்று வரவேற்றதும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் நான் செல்லுமிடங்களிலெ்லாம் வரவேற்பளித்து வருவதும் என்னைப் பெரிதும் மகிழச் செய்துள்ளது.
ஜெயலலிதாவிற்கு மறுப்பு:
சிறுபான்மை மக்களுக்கு திமுக ஒன்றுமே செய்யவில்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தூத்துக்குடியில் பேசியிருக்கிறார்.
முஸ்லிம்களை சிறுபான்மையினர் பிரிவில் இணைத்தவர் கலைஞர். உருது முஸ்லிம்களையும் அப்பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை செவிமடுத்து அவர்களையும் சிறுபான்மையினர் பட்டியலில் இணைத்தார்.
நீதிபதி ஜனார்த்தன் கமிட்டியை அமைத்து, சிறுபான்மை முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சாத்தியக் கூறுகளை தீர ஆய்வு செய்த பின், 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கினார்.
ஒருபுறத்தில் கலைஞர் சிறுபான்மையினருக்கும், அனைத்து சமுதாய மக்களுக்கும் நல்ல பல திட்டங்களைத் தந்துகொண்டிருக்க, சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு குறித்து சட்டமன்றத்தில் வாயே திறக்காத ஜெயலலிதா, சிறுபான்மை மக்களுக்கு தொடர்ந்து நல்லவற்றைச் செய்து வரும் திமுகவை, அதன் தலைவர் கலைஞரை - ஒன்றுமே செய்யவில்லை என்றும், திமுகவினர் பொய் கூறுகின்றனர் என்றும் அவர் பொய்யுரைத்துச் சென்றுள்ளார்.
நாகரிகமற்ற விமர்சனம் செய்பவர் ஜெயலலிதா:
அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். ஒரு கருத்திலிருப்போர் மாற்றுக் கருத்தில் இருப்போரை விமர்சிக்கத்தான் செய்வர். அது ஏற்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் இந்த அம்மையார் அவர்கள், திமுகவை - அதன் தலைவர் கலைஞரை அரசியல் நாகரிகமின்றி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். காங்கிரஸைத் தொடர்ந்து விமர்சித்துப் பேசுகிறார்.
பாஜகவுடன் கள்ளக் காதலா?
நான் அவருக்கு ஒரு கேள்வியை முன்வைத்திருக்கிறேன். அதற்கான விடையை இன்று எதிர்பார்த்தேன். இதுவரை விடை கிடைக்கவில்லை. அது என்னவெனில், திமுக, காங்கிரஸ் கட்சிகளையெல்லாம் தொடர்ந்து விமர்சிக்கும் அவர் பாரதீய ஜனதா குறித்து இதுவரை வாயே திறக்காமல் இருப்பது ஏன்? அக்கட்சியுடன் கள்ளக் காதலா?
ஆதாரமின்றி பேச மாட்டோம்...
பாபரி மஸ்ஜித் உடை.க்கப்பட்டபோது, தெளிவாக கண்டனம் தெரிவித்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். ஜெயலலிதா அம்மையார் தூத்துக்குடியில் நேற்று பேசியபோது, கரசேவைக்கு தான் ஆள் அனுப்பியதாக பொய்யுரைப்பதாகக் கூறியுள்ளார்.
நாங்கள் என்றுமே பொய்யுரைப்பதுமில்லை. ஆதாரமின்றிப் பேசுவதும் இல்லை. பாபரி மஸ்ஜித் தகர்ப்பைத் தொடர்ந்து நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தில், கரசேவையை ஜெயலலிதா ஆதரித்துப் பேசியது, அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆர் பத்திரிக்கையில் செய்தியாக வந்துள்ளது. தி ஹிந்து, தினமலர் ஆகிய நாளிதழ்களிலும் இச்செய்தி வெளிவந்தது.
ஜெயலலிதா கரசேவைக்கு ஆயிரம் பேரை கர சவைக்கு அனுப்பி வைத்ததையும் மேலும் உதவிகள் செய்வதாக கூறியதையும் உத்திர பிரதேச விஸ்வஹிந்த் பரிஷத் செயலாளர் பேசியதாக பல்வேறு நாளிதழ்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. அச்செய்திகள் அடங்கிய பிரதிகள் அனைத்தும் என் கைவசம் உள்ளன. ஆக, நாங்கள் ஆதாரத்துடன்தான் எதையும் பேசுகிறோம், பேசுவோம்.
வழக்கை சந்திக்க தயார்!
ஒருவேளை, நான் இப்போது கூறியது தவறு என்று அவர் கருதுவாரானால் என் மீது அவதூறு வழக்கு தொடரட்டும். அதைச் சந்திக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன்.
திமுகவின் தேர்தல் அறிக்கை:
தலைவர் கலைஞர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில், பெண்கள், இளைஞர்கள், பாட்டாளிகள், மத்திய - மாநில அரசு ஊழியர்கள், சிறுபான்மையினர் என அனைத்து தரப்பு மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு 100 அம்ச வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
பழிவாங்கும் சட்டங்களைத் திரும்பப் பெற வைப்போம்:
தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக என முன்பு தடா, பொடா சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்டவர்களையெல்லாம் அச்சட்டங்களைப் பயன்படுத்தி கைது செய்து சிறையில் அடைத்தவர் ஜெயலலிதா அம்மையார். அதுபோல, இச்சட்டம் நாட்டின் பல மாநிலங்களிலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, அப்பாவிகள் பாதிக்கப்பட்டதைக் கருத்திற்கொண்டு, அச்சட்டங்களைத் திரும்பப் பெற திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் பலனாக, அச்சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன.
தற்போதுள்ள சட்டங்களைப் பயன்படுத்தி, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் (Unlawful Activities) மேற்கொள்ளப்படுவதைத் தவிர்த்திட சில திருத்தங்களைக் கொண்டு வர வேண்டுமென 2011 முதல் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அச்சட்டத்தையும் திரும்பப் பெற திமுக மத்திய அரசை வலியுறுத்தும்.
வேட்பாளர்களில் 10 சதவிகிதம் முஸ்லிம்கள்:
முஸ்லிம்களுக்கு திமுக அளித்துள்ள 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அதிகரித்துத் தர கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. அதைத் தருவதற்கு முன்னோட்டமாக திமுக கூட்டணியில புதுச்சேரியில் நாஜிம், இராமநாதபுரத்தில் ஜலீல் ஆகியோர் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும், வேலூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் எம்.அப்துல் ரஹ்மான், மயிலாடுதுறையில் மனிதநேய மக்கள் கட்சியின் எஸ்.ஹைதர் அலீ ஆகிய நான்கு முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இது, முஸ்லிம்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடாகும்.
ஆதரிப்பீர் உதயசூரியனை!
மத்திய அரசில் உங்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்க, உங்களுக்கு நல்லவை கிடைத்திட, அல்லவை தடுக்கப்பட, நீங்கள் அனைவரும் திரு. ஜெகன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியாக வாக்குப்பதிவு செய்து வெற்றிபெறச் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டு நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
முஸ்லிம் லீக் சார்பில் வரவேற்பு:
காயல்பட்டினத்தில் அவர் நகர்வலமாகச் சென்ற அனைத்து தெருக்களிலும் ஆண்கள், பெண்களும் மலர் தூவி வரவேற்பளித்தனர். சதுக்கைத் தெருவிலுள்ள - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதர் மன்ஸில் அருகில், நகர முஸ்லிம் லீக் சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், மாணவரணி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் அவருக்கு வரவேற்பளித்தனர்.
மு.க.ஸ்டாலினின் காயல்பட்டினம் பரப்புரைப் பயணத்திற்கான ஏற்பாடுகளை, திமுக காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
[செய்தி திருத்தப்பட்டது @ 08:25 / 18.03.2014] |