காயல்பட்டினம் கொச்சியார் தெருவில் நடைபெற்ற ஒரு திருமண விழாவுடன் துவங்கியுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பரப்புரை. விரிவான விபரம் வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர மாணவரணி முன்னாள் அமைப்பாளரும், சென்னை மாணவரணியின் முக்கிய உறுப்பினருமான ஹாஃபிழ் கே.ஜெ.ஆர்.அப்துல் ஹக் ஃபைஸலின் திருமணம், இம்மாதம் 16ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) காலையில், கொச்சியார் தெருவில் நடைபெற்றது.
இவ்விழாவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில அமைப்பாளர் கே.எம்.நிஜாமுத்தீன், மாணவரணி (எம்.எஸ்.எஃப்.) மாநில அமைப்பாளர் செய்யது பட்டாணி, மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ உட்பட, அக்கட்சியின் மாநில - மாவட்ட - நகர நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசியதாவது:-
காயல்பட்டினத்தில் ஆலிம் எனும் மார்க்க அறிஞர்களும், ஹாஃபிழ் எனும் திருமறை குர்ஆனை மனனம் செய்துள்ளவர்களும் ஏராளமாக உள்ளனர். மணமக்களின் குடும்பத்தின் மூத்தவரான மாதிஹுல் கவ்த் நூஹ் ஆலிம் அவர்கள், ஷாஃபிஈ மத்ஹப் சட்ட நூற்களை எளிய தமிழில் இச்சமுதாயத்திற்கு அளித்தவர். அதன் நடையே - காயல்பட்டினத்தின் பாரம்பரியத்தை இதழ் முழுக்க உணர்த்தும் வகையில் இருந்தது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியை எல்லோரும் இறக்கிய காலத்தில், இந்த காயல்பட்டினத்தில் நம் கொடியை ஏற்றி மகிழ்ந்தனர். அந்தளவுக்கு இந்த இயக்கத்தை முன்னின்று பாதுகாத்தவர்கள் இங்குள்ள முஸ்லிம்கள்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது, இந்திய முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக காயிதேமில்லத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களால் துவக்கப்பட்டது. இக்கட்சிக்கென இந்திய வரலாற்றில் பெரிய இடமுண்டு. இதனைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. அந்தப் பணியைத்தான் நாங்களும் செய்கிறோம். நீங்களும் செய்ய வேண்டுமென விரும்புகிறோம்.
இந்த நாடு இஸ்லாமிய நாடாக இருந்தால், இந்தி யூனியன் முஸ்லிம் லீக் இயங்குவதற்கு அவசியமிருக்காது. ஆனால், இது சுமார் 3000க்கும் மேற்பட்ட வகுப்பினரைக் கொண்ட - மதச்சார்பற்ற - ஜனநாயக நாடு. அவரவரின் தனித்தன்மைகளையும், அடையாளங்களையும் பாதுகாத்திட இந்திய அரசியல் சாசனம் வழிவகை செய்துள்ளது. அந்த அடிப்படையில், இங்குள்ள முஸ்லிம்களுக்கும் தனித்துவம் உள்ளது.
இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள இந்த உரிமைகளையும். சலுகைகளையும் இல்லாமலாக்கிட, மதச்சார்பு நிலையாலும், ஆதிக்க உணர்வாலும் பலர் முயற்சித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், அவற்றை விட்டும் முஸ்லிம் சமுதாயத்தைப் பாதுகாத்து, அவர்களுக்கு அரணாக நிற்கும் பணியை இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் இன்றளவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செய்து வந்துகொண்டிருக்கிறது.
அதுபோல, தமிழகத்திற்கென தனித்தன்மைகள் உள்ளன. இந்த மாநிலம் திராவிட பாரம்பரியத்தைக் கொண்டதாகும். “யாதும் ஊரே; யாவரும் கேளிர்”, “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்”, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” ஆகியவற்றை முதன்மை முழக்கங்களாகக் கொண்டு இயங்குவது திராவிட பாரம்பரியம். இந்த மாநிலத்தில் எல்லா மதத்தினரும், ஜாதியினரும் அண்ணன் - தம்பிகளாகப் பழகி வரும் நிலை தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அதனால்தான், மதக்கலவரங்கள் பல இந்திய முழுக்க தூண்டப்பட்டபோது தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது.
இந்த முழக்கங்களைக் கொள்கையாகக் கொண்டதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். நாம் அவர்களின் கொள்கைகளைப் புரிந்து அவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். அவர்களும் நம் கொள்கைகளைப் புரிந்துகொண்டு நம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஆக, கொள்கை அடிப்படையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகும், திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து பணியாற்றுகிறது.
இது அரசியல் மேடையல்ல. திருமண மேடை. என்றாலும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நான் உங்களை வேண்டிக்கொள்வதெல்லாம், நம் சமுதாயப் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரிக்கும் திமுகவின் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், அதன் மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார். அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் உங்கள் வாக்குகளை ஒட்டுமொத்தமாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார்.
அடுத்த சில நிமிடங்களில், திமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரிய சாமி, அவரது மகனும், தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினருமான என்.பி.ஜெகன் ஆகியோர் திருமண மேடைக்கு வந்து, அனைவருக்கும் தங்களை அறிமுகம் செய்துகொண்டனர்.
திருமண நிகழ்ச்சியின் நிறைவில், அங்கிருந்த பொதுமக்களிடம் அவர்கள் ஆதரவு கோரியவாறு விடைபெற்றுச் சென்றனர்.
இத்திருமண நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பி.மீராசா மரைக்காயர், மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், திமுக நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஐ.காதர் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் |