ராமர் கோவில் கட்ட அயோத்தியில் நடந்த கரசேவைக்கு அ.தி.மு.க., ஆட்களை அனுப்பவில்லை என ஜெயலலிதா தூத்துக்குடியில், அவர் மேற்கொண்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பேசினார்.
இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 24 அன்று நடைபெறவுள்ளது. இதனையொட்டி - தமிழகம் முழுவதும், அ.தி.மு.க.வின் பொது செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்று தூத்துக்குடி வந்தார். மூன்றாம் மைல் பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், தி.மு.க. தலைவர் கருணாநிதி, தான் ராமர் கோவில் கட்ட அயோத்தியில் நடந்த கரசேவைக்கு ஆட்கள் அனுப்பியதாக தொடர்ந்து பொய் சொல்லிவருவதாக குற்றம் சாட்டினார்.
ஜெயலலிதாவின் முழு உரையினை காண இங்கு அழுத்தவும்>>
தி.மு.க. தலைவர் கருணாநிதி 4 நாட்களுக்கு முன், தேர்தல் வாக்குறுதிகளை புளுகு மூட்டைகளாக அவிழ்த்து விட்டுள்ளார். வருமான வரி உச்சவரம்பு ரூ. 6 லட்சமாக உயர்த்தப்படும் என கருணாநிதி தெரிவித்துள்ளார். கடந்த 17 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க. இதுவரை இதனை ஏன் செய்யவில்லை?
`அரசுப் பணியாளர்கள் ஓய்வுபெறும் நாளில் பெறும் பணிக்கொடை மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கு வருமான வரிவிலக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என கருணாநிதி அறிவித்திருப்பது வெத்துவேட்டு வாக்குறுதி. இவற்றுக்கு, ஏற்கெனவே வருமான வரி விலக்கு உள்ளது.
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்போம் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இதை ஆதரித்துவிட்டு, தற்போது எதிர்ப்பதாக கூறுவது ஏமாற்று வேலை. மத்திய அரசில் கொள்கை வகுக்கும் இடத்துக்கு அ.தி.மு.க. வந்தால், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு ஒழித்துக் கட்டப்படும்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட போது அலட்சியமாக இருந்த கருணாநிதி, மீண்டும் போலி வாக்குறுதிகளை அளித்திருப்பது பித்தலாட்டத்தின் உச்சக்கட்டம்.
இவ்வாறு ஜெயலலிதா உரை நிகழ்த்தினார்.
ஜெயலலிதாவின் முழு உரையினை காண இங்கு அழுத்தவும்>>
தகவல்:
தி இந்து
புகைப்படங்கள்:
தினமலர், தினத்தந்தி மற்றும் ரீடிஃப் இணையதளம்
|