டிசம்பர் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஊழலை பிரதானமாக எதிர்க்க துவக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, டில்லியில் 28 இடங்களில் வெற்றிப்பெற்று
- அர்விந்த் கேஜரிவால் தலைமையில் - ஆட்சி அமைத்தது. பாரதிய ஜனதா கட்சி பெற்ற இடங்களை விட ஆம் ஆத்மி கட்சி பெற்றது குறைவான இடங்கள் என்றாலும், 70 பேர் கொண்ட அவையில், வெளியில் இருந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர், ஜனதாதள் உறுப்பினர் ஒருவர் மற்றும் சுயேச்சை ஒருவர் ஆதரவு வழங்கினர்.
டிசம்பர் 28 அன்று பதவியேற்ற கேஜரிவால், பிப்ரவரி 14 வரை - 49 நாட்கள் மட்டும் ஆட்சியில் இருந்தார். ஆட்சியில் இருந்தது குறைவான நாட்கள்
என்றாலும் - இந்திய தலைநகரின் நிர்வாகத்தில் பல அடிப்படை மாற்றங்களை அறிமுகம் செய்தார்.
ஊழலுக்கு எதிராகவும், சாமானிய மக்களின் தேவைகளை முன் நிறுத்தியும் குறுகிய காலத்தில் அவர் எடுத்த பல முடிவுகள், சாதாரண மக்களின்
வரவேற்பை பெற்றது.
அவரின் வித்தியாசமான அணுகு முறை பலரின் புருவங்களை உயர்த்தியது, அனுபவம் குறைவு என்ற விமர்சனங்கள் சிலரால் முன்வைக்கப்பட்டது.
எதிர்கட்சியினர் மற்றும் பெருவாரியான ஊடகங்கள் அவரை கடுமையாக செய்த விமர்சனங்கள் மத்தியில் - ஒரு கட்டத்தில் கேஜரிவால் தன்னை -
கிளர்ச்சி தூண்டுபவர் (ANARCHIST) என்று கூட வேடிக்கையாக வர்ணித்தார்.
அவர் பதவி விலகியதன் மூலம், ஒரு பரிசோதனை நிறைவுற்றது என்று பலர் விமர்சித்தாலும், அந்த 49 நாட்கள் - சாதாரண மக்களுக்கு பல நம்பிக்கைகளை டில்லியில் மட்டுமன்றி, நாடு முழுவதும் - நேர்மையான, ஊழலற்ற, சாமானிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஆட்சி அதிகாரங்களை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை பலருக்கு வழங்கியுள்ளது என்ற கருத்தும் வலுவாக உருவாகியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி ஆண்ட சில வாரங்களில் - அக்கட்சியின் தலைமை பல நிபுணர்களின் கருத்துகளை பெற்று சில முடிவுகளை எடுத்தது. பல மக்கள் - ஆர்வமாக தங்கள் ஆலோசனைகளை அந்த நிர்வாகத்திற்கு வழங்கவும் செய்தனர்.
அவ்வாறு - தன்னார்வத்தில் டில்லி அரசாங்கத்திற்கு, அந்த காலகட்டத்தில் - தனது சில ஆலோசனைகளை முன்னாள் விருத்தாசலம் நகராட்சி தலைவர் டாக்டர் வள்ளுவன், அனுப்பியிருந்தார். அதில் ஒன்று - அரசு அதிகாரிகள், அன்றாடும் மக்களின் குறைகள் கேட்க நேரம் ஒதுக்குவது குறித்ததாகும்.
ஈமெயில் மூலம் பெற்ற டாக்டர் வள்ளுவனின் ஆலோசனைகளை டெல்லி அரசாங்கம் உதாசீனம் படுத்தாமல், பிற துறைகளுக்கு அனுப்பிவைத்தது - அதன் மேல் நடவடிக்கையும் எடுத்தது. எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டாக்டர் வள்ளுவனுக்கு தகவலையும் டெல்லி அரசாங்க அதிகாரிகள் அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|