தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் காரணங்காட்டி, காயல்பட்டினம் ஒருவழிப்பாதையில் புதிய சாலை அமைக்கும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ம.ரவிக்குமார், ஏற்கனவே ஒப்பந்தம் விடப்பட்ட காரணத்தால் இப்பணிக்கு தடையில்லை என தெரிவித்துள்ளதையடுத்து மீண்டும் சாலை அமைப்புப் பணி தொடர்கிறது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் தாயிம்பள்ளி - பெரிய நெசவுத் தெரு - எல்.கே.லெப்பைத்தம்பி சாலை வழியிலான ஒருவழிப்பாதையில் புதிய சாலை அமைக்கும் பணி கடந்த டிசம்பர் மாதம் துவங்கியது.
இரண்டாம் குடிநீர் திட்டத்திற்கான குழாய்கள் பதிக்கப்பட வேண்டியுள்ளதால், சாலை மீண்டும் தோண்டப்படும் என்றும், அதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீண்விரயம் ஆகும் என்றும் கூறி, பெரிய நெசவு தெருவை சார்ந்த டி.செய்யித் அஹ்மத் என்பவர் - சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொது நல வழக்கு (PUBLIC INTEREST LITIGATION) தொடுத்திருந்தார். இவ்வழக்கின் மீதான விசாரணைக்குப் பின், புதிய சாலை அமைப்புப் பணிக்கு இடைக்காலத் தடை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்தது.
மார்ச் 13ஆம் நாளன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நிறைவில் இடைக்காலத் தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இம்மாதம் 15ஆம் நாள் சனிக்கிழமை காலையில் எல்.கே.லெப்பைத்தம்பி சாலையில் புதிய சாலை அமைப்புப் பணி துவக்கப்பட்டபோது, திடீரென அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் புதிய சாலைப் பணிகளைச் செய்யக்கூடாது என்று கூறியதாகவும், தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே இச்சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டுவிட்டதாகவும், தேர்தலுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட பணியல்ல இது என்றும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ம.ரவிக்குமாரை தான் தொடர்புகொண்டு பேசியதாகவும், ஏற்கனவே ஒப்பந்தம் விடப்பட்ட இப்பணியைத் தொடர்வதில் ஆட்சேபணையில்லை என அவர் தெரிவித்ததையடுத்து பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் எம்.காந்திராஜை காயல்பட்டணம்.காம் தொடர்புகொண்டு பேசியபோது தெரிவித்தார். |