இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில் வாக்களிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்குடன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்ற - வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி, தூத்துக்குடி மூன்றாவது மைல் மருத்துவக் கல்லூரி முன்பிலிருந்து தெற்கு காவல் நிலையம் வரை நடைபெற்றது.
பங்கேற்ற மாணவ-மாணவியர் விழிப்புணர்வு பதாதைகளை கைகளில் ஏந்தி கைகோர்த்து நின்றனர். இந்த மனித சங்கிலியை, மருத்துவக் கல்லூரி முன்பு மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவிகுமார் துவக்கி வைத்தார்.
மனித சங்கிலியில் பங்கேற்ற மாணவ-மாணவியர், முன்றாவது மைல் மருத்துவக் கல்லூரி முன்பிலிருந்து பின்னர் ஊர்வலமாகப் புறப்பட்டு, பாலிடெக்னிக் கல்லூரி, மில்லர்புரம், விவி.டி சிக்னல், சிதம்பர நகர் வழியாக இராஜாஜி பூங்கா சென்றடைந்தனர். மருத்துவக் கல்லூரி மற்றும் செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவ-மாணவியர் சீருடையில் அணிவகுத்துச் சென்றது அனைவரையும் கவருவதாக இருந்தது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.முத்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஜெ.பெல்லா, துணை ஆட்சியர் (பயிற்சி) முருகேசன், மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.எட்வின் ஜோ, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.உமா, கோட்டாட்சியர் நாகஜோதி உட்பட பலர் கலந்துகொண்டனர். |