தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விவரம் வருமாறு:-
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனை வரவேற்று - தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி டிஜிட்டல் பேனர் மற்றும் கொடி கட்டியுள்ளதாக, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதுி பறக்கும் படை வட்டாட்சியர் ஆழ்வார் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் ஆகியோர் மீது ஆறுமுகநேரி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இது தவிர, ஆறுமுகநேரியில் - அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய நடிகர் ராமராஜன் தேர்தல் விதி மீறியதாக ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியை ஆதரித்து, இம்மாதம் 12ஆம் நாளன்று மாலையில், இந்திய மக்களவை முன்னாள் உறுப்பினரும், நடிகருமான ராமராஜன் பரப்புரை செய்தார்.
எவ்வித அனுமதியும் பெறாமல், கார் மற்றும் பரப்புரை வாகனங்களில் வந்து அதிமுக வேட்பாளரை ஆதரித்து அவர் பரப்புரை செய்தது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என, திருச்செந்தூா சட்டமன்றத் தொகுதி வீடியோ கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த அதிகாரி ரகு அளித்த புகாரின் பேரில், நடிகர் ராமராஜன் மற்றும் சிலர் மீது ஆறுமுகநேரி காவல்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆறுமுகநேரி காவல்நிலைய உதவி ஆய்வாளர் சபீதா இவ்வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். |