காயல்பட்டினம் நகராட்சியின் ஒரு வழிப்பாதையான தாயிம்பள்ளி - பெரிய நெசவுத் தெரு - எல்.கே.லெப்பைத்தம்பி சாலை வழியில், புதிய சாலை அமைப்பதற்கான பணிகள் கடந்த டிசம்பர் மாதம் துவங்கியது.
இரண்டாம் குடிநீர் திட்டத்திற்கான குழாய்கள் பதிக்கவேண்டியுள்ளதால் - சாலை மீண்டும் தோண்டப்படும் என்றும், அதனால் பொது மக்களின் வரிப்பணம் வீண் விரயம் ஆகும் எனக்கூறி - பெரிய நெசவு தெருவை சார்ந்த டி.செய்து அஹமது என்பவர் - சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் - பொது நல வழக்கு (PUBLIC INTEREST LITIGATION) தொடுத்திருந்தார்.
அவ்வழக்கு (எண் WP [MD] 20879 / 2013) ஜனவரி 2 அன்று விசாரணைக்கு வந்தப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர், புதிய சாலை அமைப்புப் பணிக்கு இடைக்காலத் தடை விதித்து, நகராட்சியினை பதில் கூற கோரியிருந்தனர்.
மார்ச் 13 அன்று இவ்வழக்கு நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், வி.எம். வேலுமணி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. வாதங்களை தொடர்ந்து இறுதியில் - இடைக்கால தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இவ்வழக்கு குறித்து தி இந்து நாளிதழ் இன்றைய மதுரை பதிப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் - நாட்டில் பல்வேறு பணிகளுக்காக பலமுறை சாலைகள் தோண்டப்படுவது வாடிக்கையாகிவட்டது என்றும், இப்பணிகளில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர் என அச்செய்தி கூறுகிறது. மேலும் - தற்போது போடப்படும் சாலை, மீண்டும் தோண்டப்படாது என காயல்பட்டினம் நகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், வழக்கு தள்ளுப்படி செய்யப்பட்டது என அச்செய்தி தெரிவிக்கிறது.
இதற்கிடையில் - தடை நீக்கத்தை தொடர்ந்து துவங்கிய சாலைப்பணிகளை, தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி, அரசு அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, வேலை ஆணை வழங்கப்பட்டு துவங்கிய பணிகளை நிறுத்த அவசியம் இல்லை என தேர்தல் ஆணையத்தின் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (Frequently Asked Questions) என்ற ஆவணம் தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
எஸ். அப்துல் வாஹித்,
கொச்சியார் தெரு. |