காயல்பட்டினம் தாயிம்பள்ளி - பெரிய நெசவுத் தெரு - எல்.கே.லெப்பைத்தம்பி சாலை வழியிலான ஒருவழிப்பாதையில் புதிய சாலை அமைக்கும் பணி கடந்த டிசம்பர் மாதம் துவங்கியது.
இரண்டாம் குடிநீர் திட்டத்திற்கான குழாய்கள் பதிக்கப்பட வேண்டியுள்ளதால், சாலை மீண்டும் தோண்டப்படும் என்றும், அதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீண்விரயம் ஆகும் என்றும் கூறி, பெரிய நெசவு தெருவை சார்ந்த டி.செய்யித் அஹ்மத் என்பவர் - சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொது நல வழக்கு (PUBLIC INTEREST LITIGATION) தொடுத்திருந்தார். இவ்வழக்கின் மீதான விசாரணைக்குப் பின், புதிய சாலை அமைப்புப் பணிக்கு இடைக்காலத் தடை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்தது.
மார்ச் 13ஆம் நாளன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நிறைவில் இடைக்காலத் தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இன்று காலையில் எல்.கே.லெப்பைத்தம்பி சாலையில் புதிய சாலை அமைப்புப் பணி துவக்கப்பட்டபோது, திடீரென அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் புதிய சாலைப் பணிகளைச் செய்யக்கூடாது என்று கூறியதாகவும், தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே இச்சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டுவிட்டதாகவும், தேர்தலுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட பணியல்ல இது என்றும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் எம்.காந்திராஜை காயல்பட்டணம்.காம் தொடர்புகொண்டு வினவியபோது,
“தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் காரணங்காட்டி, சாலைப் பணிகளை நிறுத்துமாறு அதிகாரிகள் கூறினர்... இது தேர்தலுக்கு முன்னரே ஒப்பந்தம் விடப்பட்ட பணி என நாங்கள் அவர்களுக்கு விளக்கியுள்ளோம்... எனினும், தற்காலிகமாக பணியை நிறுத்துமாறும், வட்டாட்சியரிடம் விசாரித்தறிந்த பின்னர், பணியைத் தொடர்வது தொடர்பாக தகவல் தருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்...” என்றார்.
தகவல்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
படங்கள்:
A.K.இம்ரான் |