வட்டியில்லா நிதித் திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதை அடிப்படை செயல்திட்டமாகக் கொண்டு, இந்தியாவின் 12 மாநிலங்களில் 18 கிளைகளுடன் செயல்பட்டு வரும் அமைப்பு ‘ஜன்சேவா கூட்டுறவு சங்கம்’ ஆகும். வட்டியில்லா வங்கி அமைப்பதை நோக்கி அது பயணித்து வருகிறது.
வாணியம்பாடியில் கள ஆய்வு:
ஜன்சேவா கூட்டுறவு சங்கத்திற்கு காயல்பட்டினத்தில் கிளையொன்றைத் துவக்குவதற்கான முன்முயற்சிகள் பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகரில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஜன்சேவா கூட்டுறவு சங்கத்தை நேரில் சென்று கள ஆய்வு செய்ய காயல்பட்டினம் குழுவினரால் தீர்மானிக்கப்பட்டதன், 25.02.2014 அன்று ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் தலைமையில் பயணக்குழு வாணியம்பாடி ஜன்சேவா கூட்டுறவு சங்கத்திற்குச் சென்றடைந்தது. சென்னையைச் சேர்ந்த காயலர்கள் குழுவும் அங்கிருந்து புறப்பட்டு வாணியம்பாடி சென்றடைந்தது.
[குழுப்படத்தைப் பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!]
பிப்ரவரி 25 அன்று காலை அமர்வில், வாணியம்பாடி ஜன்சேவா கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அத்தீக்குர்ரஹ்மான், அமைப்பின் சேவைகள், செயல்திட்டங்கள் குறித்து காயலர் குழுவிற்கு விளக்கினார். பின்னர், பங்கேற்றோரின் சந்தேகங்களுக்கு அவர் விளக்கமளித்தார்.
காயல்பட்டினத்தில் கிளை துவக்க கலந்தாலோசனை:
இரண்டாம் அமர்வு தொழுகை மற்றும் மதிய உணவு இடைவேளைக்குப் பின் நடைபெற்றது. இவ்வமர்வில், சென்னையிலுள்ள ஜன்சேவா கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து அதன் செயலாளர் எஸ்.இம்தியாஸ் விளக்கிப் பேசினார்.
காயல்பட்டினத்தில் ஜன்சேவா கிளை துவக்குவதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு, அத்துடன் கூட்டம் நிறைவுற்றது. பின்னர், வாணியம்பாடி ஜன்சேவா கூட்டுறவு சங்க செயல்பாடுகள், நடவடிக்கைகள் செயல்முறை விளக்கத்துடன் அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது.
பின்னர், வாணியம்பாடியில் இயங்கி வரும் பைத்துல்மால் மற்றும் முஸ்லிம் கல்விக் கூடம் ஆகிய நிறுவனங்களுக்கு காயலர் பயணக் குழுவினர் சென்று, விளக்கங்கள் பெற்றனர்.
காயல்பட்டினம் கிளை துவக்கக் கூட்டம்:
காயல்பட்டினத்தில் ஜன்சேவா கூட்டுறவு சங்க கிளையைத் துவக்குவதற்கான கூட்டம் இம்மாதம் 08ஆம் நாளன்று, காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவிலுள்ள எஸ்.இப்னு ஸஊத் இல்லத்தில், வாவு எஸ்.காதிர் ஸாஹிப் தலைமையில் நடைபெற்றது. வாவு எஸ்.அப்துல் கஃப்பார், எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நீண்ட கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், ஜன்சேவா கூட்டுறவு சங்கத்திற்கு காயல்பட்டினத்தில் கிளையைத் துவக்க தீர்மானிக்கப்பட்டு, பின்வருமாறு நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
புதிய நிர்வாகிகள்:
தலைவர்:
வாவு எஸ்.காதிர் ஸாஹிப்
துணைத்தலைவர்:
எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா
செயலாளர்:
ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால்
துணைச் செயலாளர்:
எம்.என்.அஹ்மத் ஸாஹிப்
பொருளாளர்:
‘மாஷாஅல்லாஹ்’ தாவூத்
துணைப் பொருளாளர்:
‘ஜுவெல் ஜங்ஷன்’ கே.அப்துர்ரஹ்மான்
நிர்வாகக் குழு உறுப்பினர்கள்:
எல்.டி.ஸித்தீக்
ஜாஹிர் ஹுஸைன்
எஸ்.இப்னு ஸஊத்
எல்.கே.கே.லெப்பைத்தம்பி
எஸ்.இம்தியாஸ்
இவ்வாறு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
காயல்பட்டினம் பிரதான வீதியில், ஸ்டார் என்டர்ப்ரைசஸ் மாடியில், ஜன்சேவா கூட்டுறவு சங்க காயல்பட்டினம் கிளை அலுவலகம் அமைப்பதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
படங்கள்:
குளம் முஹம்மத் தம்பி
ஜன்சேவா குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |