சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகளையொட்டி, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழமை. நடப்பாண்டின் பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு, துவக்கமாக கால்பந்துப் போட்டி நடத்தப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழு வரும் ஏப்ரம் மாதம் 12,13 தேதிகளில் நடக்கவிருப்பதை முன்னிட்டு உறுப்பினர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் துவங்கியது. ஒவ்வோர் ஆண்டும் இம்மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் பொதுக்குழு ஒன்றுகூடலின்போது சிங்கை வாழ் காயலர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இதில் ஆர்வமுள்ளவர்கள், குழந்தைகள், என ஏராளமானோர் பங்குபெறுவது வழக்கம்.
நடப்பாண்டின் போட்டிகளுக்கான ஆயத்தப்பணிகள், கடந்த செயற்குழுவில் முடிவு செய்யப்பட்ட படி மன்றத்தின் ஆலோசகர் பாளையம் முஹம்மது ஹஸன் அவர்களால் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு மன்ற அனுமதியுடன் அதற்குரிய பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்விழாவில் கால்பந்து, கூடைப்பந்து, பூப்பந்து, ஹிஃழுல் குர்ஆன் மனனப்போட்டி, குழந்தைகளுக்கான பல்சுவை போட்டிகள், மகளிர் பிரிவிற்கான அறிவுத்திறன் போட்டி, வெற்றி பெற்றோருக்கான பரிசுகள் என பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட பயனுள்ள ஒன்றுகூடலின் துவக்கமாக இம்மாதம் 8-ஆம் தேதி லவண்டர் விளையாட்டு மைதானத்தில் வைத்து கால்பந்து போட்டி (ஃப்ரீ கிக்) நடத்தப்பட்டது.
இதில் A மற்றும் B பிரிவுகளில் A,B,C என தலா மும்மூன்று குழுக்களாக தேர்வு செய்யப்பட்டு மொத்தம் முப்பத்தியாறு விளையாட்டு வீரர்கள் பங்கெடுத்தனர்.
இந்த போட்டியை மன்றத்தின் ஆலோசகர் பாளையம் முஹம்மது ஹஸன் அவர்கள் துவங்கி வைத்தார்.
அனைத்து குழுவினரும் உற்சாகத்துடன் விளையாடினர். இதில் புள்ளிகள் கணக்கீட்டு அடிப்படையில் அரை இறுதிக்கு நான்கு குழுக்கள் தேர்வு செய்யப்பட்டது. குழுவினர் மற்றும் பார்வையாளர்களின் உற்சாகத்தால் ஆட்டம் களைகட்டியது. அரை இறுதியில் வெற்றி பெற்ற இரண்டு குழுக்களும் இறுதி போட்டியில் மோதின.
இந்த ஆண்டுக்கான கால்பந்து விளையாட்டுப் போட்டியில் ஃபஸல் இஸ்மாஈல் தலைமையிலான - எம்.எஸ்.ஷாஹுல் ஹமீத், எம்.ஆர்.ரஷீத் ஜமான், பி.எஸ்.எம்.அப்துல் காதிர், ஹுமாயூன் ஆகியோரைக் கொண்ட ஏ பிரிவு அணி, உமர் ரப்பானி தலைமையிலான - வி.என்.எஸ்.முஹ்ஸின் தம்பி, காதிர் ஸாஹிப் அஸ்ஹர், பி.ஏ.ஷாஹுல் ஹமீத், எஸ்.எம்.என்.அப்துல் காதிர் ஆகியோரைக் கொண்ட பி பிரிவு அணியை வென்றது.
அதனைத் தொடர்ந்து மன்ற உறுப்பினர்களுக்கிடையிலான நட்பு போட்டி (Friendly match) நடைபெற்றது. போட்டிகளின் துவக்கமே விறுவிறுப்புடன் துவங்கியதால் மன்ற உறுப்பினர்கள் யாவரும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். இறுதியில் அனைவருக்கும் இரவு உணவாக காயல் பிரியாணி கஞ்சி, வடை, சுண்டல் ஆகியன பரிமாறப்பட்டது.
[குழுப்படத்தைப் பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!]
விளையாட்டுப் போட்டியின் இரண்டாவது கட்டமாக பூப்பந்து போட்டி இம்மாதம் 24ஆம் தேதி மாலை 7:30 மனிக்கு ஃபேரர் பார்க் அருகிலுள்ள பெக் கியோ (Pek kio) மைதானத்தில் வைத்து நடைபெறவிருக்கிறது.
இனி நடைபெறவிருக்கும் மற்ற போட்டிகள் அனைத்தும் வெவ்வேறு இடங்களில் வைத்து குறித்த நேரத்தில் (இன்ஷா அல்லாஹ்) நடைபெறும் என மன்ற நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செய்தி தொடர்பாளர் எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |