தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், காயல்பட்டினம் நகராட்சி நிர்வாகத்திடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, மேல்முறையீட்டிற்குப் பின்பும் குறித்த காலத்தில் விடை கிடைக்காததால், சென்னையிலுள்ள தமிழ்நாடு மாநிலை தகவல் ஆணையத்திற்கு, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு - ‘மெகா’ சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, ‘மெகா’ செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
அக்டோபர் 25ஆம் நாள் – தகவலறியும் உரிமை நாளாகும். அதனை முன்னிட்டு, கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் நாளன்று, காயல்பட்டினம் ‘மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு - மெகா’ சார்பில், அதன் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில், “நகராட்சிப் பணிகளில் பொதுமக்களுக்குள்ள சந்தேகங்களைக் கேள்விகளாக வடிவமைத்து, அமைப்பின் சார்பில் காயல்பட்டினம் நகராட்சிக்குத் திரளாகச் சென்று, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அக்கேள்விகளை நகராட்சி தகவல் அலுவலரிடம் அளிக்க” தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், சென்ற ஜனவரி மாதம் 07ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில், ‘மெகா’ அங்கத்தினர் சுமார் 30 பேர் - அதன் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் சாளை நவாஸ் தலைமையில், காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்திற்குத் திரண்டு சென்று, பொது தகவல் அலுவலரான நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் - தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் 238 கேள்விகளை துறை வாரியாகப் பிரித்து, தனித்தனி உறைகளிலிட்ட கேள்விகளை சமர்ப்பித்து, அவற்றுக்கான ஒப்புகை முத்திரையைப் பெற்று வந்தனர்.
தகவலறியும் உரிமை சட்ட விதிமுறைகளின் படி, பிப்ரவரி மாதம் 06ஆம் தேதிக்குள் இக்கேள்விகளுக்கு நகராட்சி விடையளித்திருக்க வேண்டும். ஆனால் குறித்த கால அவசாகத்திற்குள் விடைகள் கிடைக்கப்பெறாததால், மேல்முறையீட்டு அலுவலரான நகராட்சி ஆணையரிடம் கடந்த பிப்ரவரி 10ஆம் நாள் காலை 11.30 மணியளவில் மேல்முறையீடு செய்ய - கேள்விகளைக் கேட்டிருந்த ‘மெகா’ அங்கத்தினர் காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்திற்கு குழுவாகச் சென்றிருந்தனர்.
மேல் முறையீட்டுக் கடிதங்களை நேரடியாகப் பெற இயலாது என்று அப்போது மேல்முறையீட்டு அலுவலரும் - நகராட்சி ஆணையருமான ஜி.அஷோக் குமார் கூறிவிட்டார். நேரில் அளிக்கப்படும் மனுக்களையும் அதிகாரிகள் பெற வேண்டும் என அரசு விதி இருக்க, அவர் மனுக்களைப் பெற மறுத்தமை குறிப்பிடத்தக்கது.
மனுக்கள் நேரில் பெற மறுக்கப்பட்டதையடுத்து, அவையனைத்தையும் ஒப்புகைச் சீட்டுடனான பதிவு அஞ்சலில் (Registered Post with Acknowledgemnt) நகராட்சி மேல்முறையீட்டு அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அடுத்த 30 நாட்களுக்குள் மேல்முறையீட்டு அலுவலரின் விடை கிடைக்கப்பெற்றிருக்க வேண்டும். ஆனால், குறித்த காலத்தில் கிடைக்கப்பெறாததால், கேள்விகளை சமர்ப்பித்த பொதுமக்களை ஒருங்கிணைத்து, இம்மாதம் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை (நேற்று) காலை 11.00 மணியளவில், சென்னையிலுள்ள - தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்திற்கு, காயல்பட்டினம் அஞ்சல் நிலையத்திலிருந்து - ஒப்புகைச் சீட்டுடனான பதிவுத் தபாலில் மேல் முறையீட்டுக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு, ‘மெகா’ செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கள உதவி:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், காயல்பட்டினம் நகராட்சியிடம் ‘மெகா’ சார்பில் கேள்விகள் கேட்கப்பட்டது தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |