வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் என்.பி.ஜெகன் வெற்றிக்காக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் தீவிர களப்பணியாற்றுவதென, அதன் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளையின் கலந்தாலோசனைக் கூட்டம், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள - கட்சியின் அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸிலில், இம்மாதம் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை 17.00 மணியளவில், நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தலைமையுரையைத் தொடர்ந்து, மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், நகர துணைச் செயலாளர் என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
இக்கூட்டத்தில், பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - வேலூர் தொகுதியை முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கியமைக்கு நன்றி:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியின் கீழ் - வேலூர் நாடாளுமன்றத் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கித் தந்தமைக்காக, திமுக தலைமைக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2 - தூ-டி திமுக வேட்பாளர் வெற்றிக்காக தீவிர களப்பணி:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் - திமுக வேட்பாளர் என்.பி.ஜெகனை வெற்றிபெறச் செய்திடுவதற்காக, தீவிர களப்பணியாற்றிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி ஜமாஅத் நிர்வாகிகளுடன் சந்திப்பு:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் - திமுக வேட்பாளர் என்.பி.ஜெகனை வெற்றிபெறச் செய்திடுவதற்காக மேற்கொள்ளப்படும் களப்பணியின் ஓரம்சமாக, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து ஜமாஅத்துகளின் நிர்வாகிகளையும் - காயல்பட்டினம் நகர கிளை சார்பில் சென்று சந்தித்து ஆதரவு கோர இக்கூட்டம் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 4 – தூ-டி மாவட்ட செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்பு:
வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, இம்மாதம் 16ஆம் நாளன்று தூத்துக்குடியில் நடைபெறவுள்ள - கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் பங்கேற்கும் - முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயல்வீரர் கூட்டத்தில், காயல்பட்டினம் கிளையிலிருந்து திரளாகப் பங்கேற்றிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5 - மாநில துணைத்தலைவர் மறைவுக்கு இரங்கல்:
அண்மையில் காலமான - இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவரும், வடக்கு கோட்டையார் அறக்கட்டளையின் இயக்குநருமான வ.மு.செய்யித் அஹ்மத் மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், அன்னாரின் மஃபிரத் - பாவப் பிழைபொறுப்பிற்காக உளமார பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 6 – மாணவரணி நகர முன்னாள் அமைப்பாளர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பு:
16.03.2014 அன்று நடைபெறவுள்ள - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை மாணவரணியின் முன்னாள் அமைப்பாளரும், கட்சியின் தீவிர களப்பணியாளருமான - ஹாஃபிழ் கே.ஜெ.ஆர்.அப்துல் ஹக் ஃபைஸல் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை அங்கத்தினர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், திரளாகப் பங்கேற்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூற, மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |