இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியின் கீழ் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் இம்மாதம் 10ஆம் நாளன்று வெளியிடப்பட்டது. அப்பட்டியலின் படி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளராக - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து பரப்புரை செய்வதற்காக, இம்மாதம் 17ஆம் நாள் திங்கட்கிழமையன்று, அக்கட்சியின் மாநில பொருளாளரும், தமிழக முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் தூத்துக்குடிக்கு வருகை தருகிறார்.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் என்.பி.ஜெகனை ஆதரித்து அவர் தொகுதி முழுக்க பரப்புரை செய்யவுள்ளார். அந்த வரிசையில், மார்ச் 17 அன்று 17.00 மணியளவில் காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலும், அதன் தொடர்ச்சியாக பேருந்து நிலையம் அருகிலும் மு.க.ஸ்டாலின் பரப்புரையாற்றவுள்ளார்.
இத்தகவலை, திமுக காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் தெரிவித்துள்ளார்.
[செய்தி திருத்தப்பட்டது @ 12:25 / 15.03.2014] |