இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில் வாக்களிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்குடன், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மாணவியர் பங்கேற்ற மனித சங்கிலி நிகழ்ச்சி இன்று 15.00 மணியளவில், காயல்பட்டினம் மகாத்மா காந்தி ஞாபகார்த்த வளைவில் துவங்கி, தைக்கா பஜார் வழியாக ஹாஜியப்பா தைக்கா பள்ளி வரை நடைபெற்றது. இச்சாலைகளின் இரு ஓரங்களிலும் மாணவியர் கைகோர்த்து நின்றனர்.
கல்லூரியின் நிறுவன தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஜெ.பெல்லா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். அவருடன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் மு.தமிழ்ராஜ், வட்டாட்சியர் நல்லசிவன், வருவாய் ஆய்வாளர் வசந்தி, காயல்பட்டினம் தென்பாகம் கிராம நிர்வாக அலுவலர் வைரமுத்து, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் துணைச் செயலாளர் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், முதல்வர் முனைவர் சசிகலா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில்,
ஓட்டு போடுவோம் ஓட்டு போடுவோம்
தவறாமல் ஓட்டு போடுவோம்
காப்போம் காப்போம்
ஜனநாயகத்தைக் காப்போம்
எனது கடமை எனது கடமை
வாக்களிப்பது எனது கடமை
மனதில் உறுதி வேண்டும்
மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்
எங்கள் வாக்கே எங்கள் எதிர்காலம்
கடமையாய் வாக்களிப்போம்
கண்ணியத்துடன் வாக்களிப்போம்
எங்கள் வாக்கே எதிர்காலத்தின் குரல்
வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம்
வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்பெற வைப்போம்
ஆகிய முழக்கங்களை கல்லூரி ஆசிரியையர் முன்மொழிய, மாணவியர் வழிமொழிந்தனர். பொதுமக்களை வாக்களிக்கத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் மாணவியர் தாங்கியிருந்தனர்.
படங்களுள் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ
[செய்தி திருத்தப்பட்டது @ 09:53 / 19.03.2014] |