இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில் வாக்களிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்குடன், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மாணவியர் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி இன்று 15.00 மணியளவில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க நுழைவாயிலில் (பேருந்து நிலையம் அருகில்) துவங்கியது.
திருச்செந்தூர் வட்டாட்சியர் நல்லசிவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இரா.கோமதி நாயகம், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ், ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி துணைச் செயலாளர் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் வே.சசிகலா நிகழ்ச்சி அறிமுகவுரையாற்ற, கல்லூரியின் நிறுவன தலைவர் வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைத்தார்.
மேளங்கள் முழங்க தைக்கா தெரு, மகுதூம் தெரு, குறுக்கத் தெரு, ஆறாம்பள்ளித் தெரு, பிரதான வீதி, கே.டி.எம். தெரு ஆகிய தெருக்களைக் கடந்து சென்ற பேரணி, காயல்பட்டினம் - திருச்செந்தூர் சாலையில் நிறைவுற்றது.
பேரணி சென்ற பகுதிகளிலெல்லாம், வீடுகளிலிருந்து ஆண்களும், பெண்களும் வெளியில் வந்து பேரணியைப் பார்த்தனர்.
சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற இப்பேரணியில்,
ஓட்டு போடுவோம் ஓட்டு போடுவோம்
தவறாமல் ஓட்டு போடுவோம்
காப்போம் காப்போம்
ஜனநாயகத்தைக் காப்போம்
எனது கடமை எனது கடமை
வாக்களிப்பது எனது கடமை
மனதில் உறுதி வேண்டும்
மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்
எங்கள் வாக்கே எங்கள் எதிர்காலம்
கடமையாய் வாக்களிப்போம்
கண்ணியத்துடன் வாக்களிப்போம்
எங்கள் வாக்கே எதிர்காலத்தின் குரல்
வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம்
வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்பெற வைப்போம்
ஆகிய முழக்கங்களை கல்லூரி ஆசிரியையர் ஒரு பகுதியிலும், காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் மற்றொரு பகுதியிலும் முன்மொழிய, மாணவியர் வழிமொழிந்தவாறு நடந்து சென்றனர். பொதுமக்களை வாக்களிக்கத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் மாணவியர் தாங்கியிருந்தனர்.
மாணவியர் பேரணி வழிடத்தடம் முழுக்க, ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் தலைமையிலான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் சார்பில், மார்ச் 18ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று (நேற்று) நடத்தப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |