இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், வாக்காளர்களுக்கு தவறான முறையில் பணம் - பொருட்கள் அரசியல் கட்சிகளால் வழங்கப்படுவதைத் தவிர்த்திடும் நோக்குடன், வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் கைவசம் உடனிருக்க வேண்டும் என, தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ம.ரவிக்குமார் அறிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, மாவட்டத்தின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் 24 மணி நேரமும் வாகனச் சோதனை மற்றும் காண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று நண்பகல் 12.00 மணியளவில், காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை அருகில், திருச்செந்தூரிலிருந்து காயல்பட்டினத்திற்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை, தேர்தல் கண்காணிப்பாளர்களாகக் களப்பணியாற்றி வரும் துணை தாசில்தார் நாகசுப்பிரமணியன் தலைமையில், காவல்துறை அதிகாரிகளான பாண்டி, செல்வின் ராஜ், முனீஸ்வரன், ஒளிப்பதிவாளர் அந்தோணி ஆகியோர் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, தகுந்த ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 150 புதிய சேலைகள் உள்ளிட்ட பொருட்களை அவர்கள் கைப்பற்றினர். அவற்றை திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். |