காயல்பட்டினம் கடற்கரை அழகுபடுத்தப்படுவதற்கு முன்பு வரை - தற்போது பொதுமக்கள் அமரும் மணற்பகுதிகளிலும் கூட மீனவர்களின் மீன்பிடிப் படிகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே கிடந்த மீன் கழிவுகளும், மனிதக் கழிவுகளும் - மன ஆறுதலுக்காக கடற்கரைக்கு வந்தமர்ந்து செல்லும் பொதுமக்களுக்கு பெரும் அவதியளிப்பதாக இருந்தது.
பொதுமக்கள் அமரும் பகுதிகளில் குப்பைகளும், அசுத்தங்களும் சேராமல் தடுப்பதற்காக என்று கூறி, காயல்பட்டினம் கடற்கரை அழகுபடுத்தப்பட்டு, கே.எம்.இ.நாச்சித்தம்பி தேர்வுநிலை பேரூராட்சித் தலைவராக இருந்த காலத்தில், 03.06.2001 அன்று திறக்கப்படுவதாக இருந்து, சில காரணங்களால் அது தடைபட்டு, பின்னர், அ.வஹீதா நகர்மன்றத் தலைவராக இருந்த காலத்தில், 2006ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் திறந்து வைக்கப்பட்டது.
அதன் பின், மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் அனைத்தும் கற்புடையார் பள்ளி வட்ட (சிங்கித்துறை) கடற்கரையோரம் வரை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக, கடற்கரையின் வடமுனையில் – பொதுமக்கள் அமரும் பகுதிகளில் சில புதிய மரக்கலங்கள் முன்னேற்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வழமைக்கு மாற்றமான இந்த பல நாட்கள் காட்சியைக் கண்ணுற்று, அங்கு சென்று விசாரித்தபோது, புதிதாக சில மீனவர்கள் பெரியதாழையிலிருந்து தொழிலுக்காக வந்துள்ளதாகவும், காயல்பட்டினம் கடற்பகுதியில் மீன் பிடிக்கவோ, மீன்பிடிப் படகுகளை நிறுத்தவோ முறையான எந்த அனுமதியையும் அவர்கள் பெறவில்லை என்றும் அறிந்துகொள்ள முடிந்தது.
படங்கள் பதிவு செய்யப்படுவதையும், விசாரிப்பதையும் கருத்திற்கொண்ட அம்மீனவர்கள் - வரும் திங்கட்கிழமைக்குள் (மார்ச் 24) தாங்கள் திரும்பிச் செல்லவிருப்பதாக காயல்பட்டணம்.காம் இடம் தெரிவித்தனர்.
|