இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியியில், வழக்குரைஞர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து, அஇஅதிமுக கொள்கை பரப்பு மாநில துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் இன்று 18.30 மணியளவில், காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் பரப்புரையாற்றினார்.
சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு ஒட்டுமொத்த காவலன் போல திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசிச் சென்றதாக விமர்சித்த அவர், வாரிசு அரசியலைத் தவிர வேறெதற்கும் திமுக தலைவர் கருணாநிதி இடமளிப்பதில்லை என்று பேசினார்.
தமிழக முதல்வர் ஜெயலிதா தலைமையிலான அதிமுக அரசு சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு பல சலுகைகளை வழங்கியுள்ளதாகவும், உரிமைகளுக்கு மதிப்பளித்துள்ளதாகவும் அவர் பேசினார்.
ஹஜ் பயணத்திற்கு மானியம் வழங்கியது, உலமாக்கள் ஓய்வூதியத் தொகையை உயர்த்தியது, முஸ்லிம்களின் மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்ட ‘விஸ்வரூபம்’ படத்திற்கு 14 நாட்கள் தடை விதித்தது என பலவற்றை சுட்டிக்காட்டிப் பேசிய அவர்,
கரும்பிருக்க இரும்பைத் தின்னாதீர்
கனியிருக்க காயைக் கவராதீர்
என பத்துக்கும் மேற்பட்ட உவமானங்களை அடுக்கி, ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி இருக்க, அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்பதை விட்டுவிட்டு மற்றவர்களுக்கு வாக்களித்து உங்கள் வாக்குகளை வீணாக்கி விடாதீர் என்று பேசினார்.
தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் வழக்குரைஞர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சரும், அதிமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் பரப்புரை வாகனத்தில் உடனிருந்தனர்.
கூட்ட ஏற்பாடுகளை, அதிமுக நகர கிளை பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
கள உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
[செய்தி திருத்தப்பட்டது @ 12:00 / 19.03.2014] |