தமிழகத்தில் 8 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை டெல்லியில் வெளியிட்டது. புதுச்சேரிக்கும் வேட்பாளர் அறிவிக்கப் பட்டுள்ளார். வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி, சென்னை பெருங்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடந்தது.
எம்.பி.ஜேசுராஜ் (நெல்லை), எம்.புஷ்பராயன் (தூத்துக்குடி), எஸ்.பி.உதயகுமார் (கன்னியா குமரி) ஆகியோரைத் தவிர மீதமுள்ள 6 வேட்பாளர்களும் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர் களை ஆம் ஆத்மி கட்சியின் மாநில பிரசாரக்குழு ஒருங்கிணைப்பாளர் டேவிட் பருண்குமார் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய வேட்பாளர்கள், ‘லஞ்சம், ஊழலற்ற நாடாக இந்தியாவை மாற்றுவோம். தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து, அதை நிறைவேற்றபாடுபடுவோம். சமுதாய முன்னேற் றத்துக்காக பாடுபடுவோம்’ என்றுஉறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் டேவிட் பருண்குமார் கூறுகையில், ‘‘தமிழகத்தில் 25 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட திட்டமிட்டுள்ளது. அரசின் அடக்குமுறை காரணமாக இந்த நிகழ்ச்சியில் உதயகுமார், புஷ்பராயன், ஜேசுராஜ் பங்கேற்க வில்லை’’ என்றார்.
பொதுமக்களின் எச்சரிக்கை
மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் ஜே.பிரபாகர் கூறும் போது, ‘‘மத்திய சென்னை மக்களிடையே ஆம் ஆத்மிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பலர் செல்போனில் என்னைத் தொடர்பு கொண்டு, ‘தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிடுகிறீர்கள். அதனால், ஜாக்கிரதையாக இருங்கள். தனியாக வெளியே செல்ல வேண்டாம். நண்பர்களுடன் உஷாராக செல்லுங்கள்’ என கூறுகின்றனர்.
என்ன ஆனாலும், மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிடுவேன். வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வேன். வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை’’ என்றார்.
தகவல்:
தி இந்து
|