தூத்துக்குடியில் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அலுவலகத்தினை திறக்க தேர்தல் விதிகளை மீறி போலீசார் அனுமதி மறுத்துவிட்டதாக அக்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து அக்கட்சியின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் சுபாஷ் பர்னாண்டோ செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக புஷ்பராயன் போட்டியிடுகிறார். இதையொட்டி தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் தலைமை தேர்தல் காரியாலயம் திறப்பதற்கு அனுமதி கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியை சந்தித்து கடந்த 18ஆம் தேதி மனு கொடுத்தோம்.
22ஆம் தேதி திறப்பு விழா நடத்த ஏற்பாடுகள் செய்து வந்தோம். ஆனால், அந்த இடத்தில் தேர்தல் காரியாலயம் திறந்தால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் என போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவி்ட்டனர். இதனை 21ஆம் தேதி இரவு தென்பாகம் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் எங்களிடம் தெரிவித்தனர்.
தேர்தல் அலுவலகம் திறக்க 36 மணி நேரத்திற்குள் பரிசீலித்து மாவட்ட தேர்தல் அதிகாரி முடிவெடுக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் அதற்கு மாற்றமாக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் அதிகாரிகளும், காவல் துறையினரும் செயல்பட்டு வருகின்றனர். இதற்கு சரியான பதிலடியை மக்கள் தேர்தலில் பதிவு செய்வார்கள் என்றார்.
தேர்தல் ஆணையத்திடம் புகார்
இதுகுறித்து வேட்பாளர் புஷ்பாராயன் தனது கட்சி ஆதரவாளர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது கூறுகையில், நாம் எவ்வித ஆடம்பரமும் இன்று பிரசாரம் செய்து வருகிறோம். நமது பிரசாரத்தை கெடுக்கும் வகையில் போலீசார் செயல்பட்டு வருகின்றனர். இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அரசு இலவசங்கள் என்ற பெயரால் ஏழை மக்களை ஏமாற்றி வருகிறது. திமுகவின் ஊழலை அதிமுகவும், அதிமுகவின் ஊழலை திமுகவும் மாறி மாறி எடுத்துரைக்கின்றன. பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி, பல்லாயிரக்கணக்கான ரூபாய் பேரம் பேசி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு அதிமுக மறைமுக ஆதரவு அளித்து வருகிறது. மக்கள் நமது பக்கமே இருக்கிறார்கள் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும் என்றார்.
தகவல்:
www.tutyonline.net
|