இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் எஸ்.ஜோயல் போட்டியிடுகிறார்.
இத்தேர்தலில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் செய்யவுள்ள பணிகள் என தனது தேர்தல் அறிக்கையை - சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக வெளியிட்டுள்ளார் அவர்.
[பின்வரும் படத்தைப் பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!]
அதில், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகளுள் ஒன்றாக, காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை குறித்த தகவலும் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:-
காயல்பட்டணம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலையை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளுக்கு உட்பட்டு மக்களுக்கு எவ்வித கேடும் ஏற்படாத வண்ணம் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். இது சம்பந்தமாக நான் ஏற்கனவே சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்துள்ள வழக்கும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கினையும் விரைந்து முடிக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த வாசகம் அமைந்துள்ளது.
நன்றி:
தி இந்து (22.03.2014) |