இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமூகப் போராளியுமான ம.புஷ்பராயன் போட்டியிடுவார் என அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பரப்புரைப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக, ஆம் ஆத்மி கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைமை தேர்தல் காரியாலயம் இம்மாதம் 22ஆம் நாள் சனிக்கிழமை (நேற்று) காலை 10.30 மணியளவில் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காரியாலய அமைவிடம் போக்குவரத்துக்கு இடைஞ்சல் தரும் என்ற காரணங்கூறி, திறப்பு விழாவிற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
இதனையடுத்து, தூத்துக்குடி மீனவர் முன்னணி கூட்டரங்கில் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று காலையில் நடைபெற்றது. கோவில்பட்டி நகர்மன்ற முன்னாள் தலைவர் தம்பி பாலசுப்பிரமணியன், வழக்குரைஞர் ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேர்தல் பரப்புரைக்கான ஆம் ஆத்மியின் செயல்திட்டங்கள் குறித்து, ஆம் ஆத்மி கட்சியின் தூத்துக்குடி தொகுதி தேர்தல் பணிக்குழு தலைவர் சுபாஷ் ஃபர்னாந்து, காயல்பட்டினத்திலிருந்து இக்கூட்டத்தில் பங்கேற்ற எம்.என்.அஹ்மத் ஸாஹிப் ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் ஜோதிமணி உட்பட, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கூட்டத்தில் கலந்துகொண்ட பலர் கருத்துரையாற்றினர்.
சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் போக்குகளுக்கு எதிராக - குறிப்பாக காயல்பட்டினம் நகராட்சிக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் மாசுகளுக்கு எதிராக இக்கட்சி கைமாறு எதிர்பாராமல் களமிறங்க வேண்டும் என காயல்பட்டினம் சுற்றுச்சூழல் ஆர்வலர் முஜாஹித் அலீ பேசினார்.
தூத்துக்குடி தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளர் ம.புஷ்பராயன் இணையதள (ஆன்லைன்) உதவியுடன் கணினி வழியே சிறப்புரையாற்றினார்.
நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட கிளை அங்கத்தினர், காயல்பட்டினத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், கோவில்பட்டியைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் உள்ளிட்ட சமூக ஆர்லவர்கள் உட்பட ஆம் ஆத்மி கட்சியின் அபிமானிகள் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் கலந்துகொண்டனர்.
கூட்ட ஏற்பாடுகளை, ஆம் ஆத்மி கட்சியின் மாநில பொறுப்பாளர் சேவியர் ஒருங்கிணைப்பில், ஜோசப், கெபிஸ்டன், குணசீலன், ஜோய் கேஸ்ட்ரோ, ஜெயேந்திரன், ராஜேஷ், ஜெகன் உட்பட பலர் செய்திருந்தனர்.
கூட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த கணினி பொறியாளர் இளஞ்செழியன், “எனது ஓட்டு விற்பனைக்கல்ல!” என்ற முழக்கத்தையும், ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்கு கேட்கும் வகையில் - அதன் தேர்தல் சின்னமான துடைப்பத்தையும் தனது காரில் பொறித்து வடிவமைத்திருந்தார். தேர்தல் ஆணையத்தின் முறையான அனுமதி பெற்று இதனைச் செய்வதாகக் கூறிய அவர், தனது காரின் மீது பொதுமக்களின் ஆதரவுக் கைச்சான்றுகளைச் சேகரித்தார். பொதுமக்கள் அதில் ஆர்வமுடன் கைச்சான்றிட்டனர்.
தேர்தல் காரியாலயம் அமைவதால் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என்று, ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து தேர்தல் ஆணையத்தால் பெறப்பட்ட உறுதிமொழியையடுத்து, தூத்துக்குடியில் காரியாலயம் திறக்க காவல்துறை அனுமதியளித்துள்ளதாக கடைசியாக பெறப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
களத்தொகுப்பு & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |