டி.சி.டபிள்யு. ஆலையின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்ததையடுத்து KEPA கூட்டிய - காயல்பட்டினம் நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் கூட்டத்தில், அந்த ஆலையை இழுத்து மூடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவும், விரைவில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து KEPA செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்லாண்டு காலமாக நிலம், நீர், காற்றில் தனது அமிலக் கழிவைக் கலந்து மாசு ஏற்படுத்தி வருகிறது - காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை.
மத்திய அரசு அனுமதி:
இத்தொழிற்சாலை தனது உற்பத்தியை இரு மடங்காக உயர்த்திட அரசு அனுமதியை எதிர்பார்த்திருப்பது ஒரு புறமிருக்க, ஆலையைச் சுற்றியுள்ள மக்களின் அச்சத்தைப் போக்கும் வரை அனுமதியளிக்கக் கூடாது என, காயல்பட்டினம் அனைத்து தரப்பு மக்களின் சார்பில் - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA பல வழிகளிலும் அரசை வலியுறுத்தி வருகிறது.
இவ்வாறிருக்க, அமிலக் கழிவைக் கொண்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வரும் டி.சி.டபிள்யு. ஆலையின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அண்மையில் அனுமதியளித்துள்ளது.
அவசர செயற்குழு:
இந்நிலையில், இதுகுறித்து விவாதிப்பதற்காக, இம்மாதம் 03ஆம் நாளன்று கூட்டப்பட்ட - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA)வின் அவசர செயற்குழுக் கூட்டத்தில்,
டி.சி.டபிள்யு. ஆலையின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்காக, நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் ஊர் நலக் கமிட்டிகள், நகர்மன்ற அங்கத்தினர் கலந்தாலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, கலந்தாலோசித்து முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அனைத்து ஜமாஅத், பொதுநல அமைப்புகள் கலந்தாலோசனைக் கூட்டம்:
அதனடிப்படையில், இம்மாதம் 10ஆம் நாள் வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு - நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் ஊர் நலக் கமிட்டிகள், நகர்மன்ற அங்கத்தினர் கலந்தாலோசனைக் கூட்டம், காயல்பட்டினம் பிரதான வீதியிலுள்ள துஃபைல் காம்ப்ளக்ஸ் - ஹனியா கேளரங்கில், KEPA தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா தலைமையில் நடைபெற்றது.
KEPA துணைத்தலைவர் என்.எஸ்.இ.மஹ்மூது, பொருளாளர் ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சட்னி செய்யித் மீரான் கிராஅத் ஓதி, கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். கூட்டத் தலைவர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். KEPA செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, கூட்ட அறிமுகவுரையாற்றினார்.
KEPA நடத்திய அவசர செயற்குழுக் கூட்டத்தில்,
(1) தேர்தலைப் புறக்கணித்தல்
(2) நகரின் அனைத்துப் பகுதி பிரதிநிதிகளும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தல்
(3) கண்டன பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி போன்றவற்றை நடத்தல்
(4) KEPA வடிவமைக்கும் வாசகத்தை அனைத்து வேட்பாளர்களுக்கும் வழங்கி, அவர்களை உடன்படச் செய்தல்
ஆகிய 4 ஆலோசனைகள் முன்வடிவாகப் பெறப்பட்டுள்ளதாகவும், இதனடிப்படையிலோ அல்லது இதை விட சிறந்த முறையிலோ செயல்திட்டத்தை இறுதி செய்து அதன்படி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய KEPA செய்தி தொடர்பாளரும், நடப்பு கூட்ட நிகழ்ச்சி நெறியாளருமான எஸ்.கே.ஸாலிஹ், டி.சி.டபிள்யு. ஆலை காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் இதுவரை செய்திருக்கக் கூடிய மாசுகள் - அவற்றால் விளைந்துள்ள கேடுகள் குறித்து விளக்கிப் பேசி, உற்பத்தி விரிவாக்கத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துவிட்ட நிலையில், அடுத்து மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை ஆலை எதிர்பார்த்திருப்பதாகவும், ஒருவேளை அதுவும் அனுமதியளித்து, உற்பத்தி விரிவாக்கமும் செய்யப்படுமானால், தற்போதுள்ள மாசு இன்னும் பன்மடங்காக அதிகரிக்கும் என்றும் அச்சம் தெரிவித்ததோடு, தேர்தல் நெருங்கி வரும் இக்காலகட்டத்தில் இதுகுறித்து வலிமையான முடிவை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும், அதனடிப்படையில், கூட்டத்தில் கலந்துகொண்டோர் கருத்துக்களைத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றம்:
கூட்டத்தில் பங்கேற்றோர் பின்வருமாறு தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்:-
தேர்தல் புறக்கணிப்பு,
நகரின் அனைத்து வீதிகளிலும், வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்,
டி.சி.டபிள்யு. ஆலை முன்பாக மறியல் போராட்டம்,
மனித சங்கிலி போராட்டம்,
பொதுமக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பொதுக்கூட்டம்,
தேர்தலுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தல்,
தேர்தலுக்குப் பின் மாவட்ட ஆட்சியர், மாநில - மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோருக்கு மனு அளித்தல்,
மாபெரும் பேரணி நடத்தி பொதுமக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வூட்டல்,
உற்பத்தி விரிவாக்க அனுமதிக்குத் தடை கோரல்,
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களிடமும் வாக்குறுதி பெறல்
உள்ளிட்ட ஆலோசனைகள் இக்கருத்துப் பரிமாற்றத்தில் முன்வைக்கப்பட்டன.
தீர்மானங்கள்:
பின்னர், பெறப்பட்ட ஆலோசனைகள் அடிப்படையில் அனைவரும் கூடி விவாதித்ததன் தொடர்ச்சியாக, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்குக் கண்டனம்:
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையால், காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புற ஊர்கள் ஏற்கனவே பெருமளவில் மாசடைந்திருக்க, பொதுமக்களின் எதிர்ப்புணர்வுகளை சிறிதும் மதியாமல், தேர்தல் அறிவிப்பிற்கு சிறிது நாட்களுக்கு முன்பாக - ஆலையின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு அனுமதியளித்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தீர்மானம் 2 - மாவட்ட ஆட்சியருக்கு மனு:
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையால், காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பெருமளவில் மாசு ஏற்பட்டு, மக்களது உடல் நலன், உயிருக்கு ஏற்படும் பாதிப்புகளுக்குக் காரணியாக விளங்குவதால், அந்த ஆலையை இழுத்து மூட வலியுறுத்தி, KEPA சார்பில் - தேர்தலுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - ஆலையின் உற்பத்தி விரிவாக்கம் குறித்து பொதுமக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வூட்டல்:
டி.சி.டபிள்யு. ஆலையின் அமிலக் கழிவால் ஏற்படும் மாசு குறித்து பொதுமக்களுக்கு ஓரளவுக்கு விழிப்புணர்வு இருக்கின்ற நிலையில், அதன் உற்பத்தி விரிவாக்கத்தால் விளையப்போகும் மாசுகள் மற்றும் அவற்றால் ஏற்படும் சேதங்கள் குறித்து அவர்களுக்கு கூடுதல் விழிப்புணர்வூட்டும் செயல்திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 - கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம்:
ஆலையின் உற்பத்தி விரிவாக்கத்தின் விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வூட்டிய பின்னர், நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் ஊர் நலக்கமிட்டியினர், நகர்மன்ற அங்கத்தினர், அனைத்து அரசியல் கட்சியினர், அனைத்து வணிகர்கள், வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட - நகரின் அனைத்து தரப்பினரையும் விரிவாகக் கூட்டி கலந்தாலோசித்த பின்,
நகரின் அனைத்து வீதிகளிலும், வீடுகளின் முன்பும் - டி.சி.டபிள்யு. ஆலையின் அமிலக்கழிவு மாசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தை நடத்தவும், அதனைச் சார்ந்து - அன்றைய நாளில் நகர் முழுக்க கடையடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்தவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. KEPA துணைத்தலைவர் டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் நன்றி கூற, எம்.எல்.ஷேக்னா லெப்பை துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
பங்கேற்றோர்:
இக்கூட்டத்தில்,
முஹ்யித்தீன் பள்ளி,
அப்பாபள்ளி,
மரைக்கார் பள்ளி,
புதுப்பள்ளி,
மேலப்பள்ளி,
குருவித்துறைப்பள்ளி,
தாயிம்பள்ளி
ஆகிய பள்ளிவாசல்களின் சார்பிலும்,
இளைஞர் ஐக்கிய முன்னணி,
ரிஸ்வான் சங்கம்,
காக்கும் கரங்கள் நற்பணி மன்றம்,
ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம்,
ஊழல் எதிர்ப்பு இயக்கம்,
துளிர் அறக்கட்டளை,
ஃபாயிஸீன் சங்கம்,
காயல்பட்டினம் நல அறக்கட்டளை,
இக்ராஃ கல்விச் சங்கம்,
எல்.எஃப். ரோடு மக்கள் நலக்குழு,
தஃவா சென்டர்
ஆகிய பொதுநல அமைப்புகளின் சார்பிலும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், KEPA துணைச் செயலாளர் எம்.எம்.முஜாஹித் அலீ, செயற்குழு உறுப்பினர்களான ஏ.எஸ்.புகாரீ, முத்து இஸ்மாஈல், எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், எம்.ஏ.முஹம்மத் இப்றாஹீம், ஏ.தர்வேஷ் முஹம்மத், ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
நகர்மன்றத் தலைவர் உறுதிமொழி:
நகர மக்கள் அனைவரும் கலந்தாலோசித்து மேற்கொள்ளும் எந்தவொரு மக்கள் நல செயல்திட்டத்திற்கும், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தமது முழு ஆதரவு என்றும் இருக்கும் என்று நகர்மன்றத் தலைவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KEPA தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |