அரசின் மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறி, பொதுமக்களைப் பாதிக்க - டி.சி.டபிள்யு. தொழிற்சாலை உள்ளிட்ட எந்த ஆலையையும் அனுமதிக்க மாட்டோம் என ஆம் ஆத்மி கட்சியின் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ம.புஷ்பராயன் காயல்பட்டினம் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். விரிவான விபரம் வருமாறு:-
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமூகப் போராளியுமான ம.புஷ்பராயன் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில், இம்மாதம் 16ஆம் நாள் புதன்கிழமை (நேற்று) 19.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
எம்.ஏ.இஸ்ஸத்தீன், எஸ்.ஐ.அபூபக்கர் ஆகியோர், எஸ்.அப்துல் வாஹித், மீரா ஸாஹிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.என்.அஹ்மத் ஸாஹிப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, அறிமுகவுரையாற்றினார். ஆம் ஆத்மி கட்சியின் உடன்குடி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் முகைதீன், பேச்சாளர் நெல்லை சிவா, தமிழக மீனவர் முன்னணி தலைவர் சேவியர் வாஸ், ஆம் ஆத்மி தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பரப்புரைக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, அதன் தலைவர் சுபாஷ் பர்னாந்து ஆகியோர் கருத்துரையாற்றினர்.
ஆம் ஆத்மி கட்சியின் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ம.புஷ்பராயன் சிறப்புரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-
அரசியல் சாக்கடையல்ல!
எனக்கு முன் பேசிய நண்பர், அரசியல் ஒரு சாக்கடை என்று ஒதுங்கியிருந்ததாகவும், ஆம் ஆத்மி ஏற்படுத்தியுள்ள புரட்சியைப் பார்த்த பிறகு, அரசியலில் சுத்தமாகவும் செயல்பட இயலும் என்று கருதி அதில் அங்கம் வகிப்பதாகவும் கூறினார். இது அவரது நிலை மட்டுமல்ல. எனது நிலையும் அதுதான். அது மட்டுமல்ல. இந்த தூத்துக்குடி மக்களவைத் தொகுதி முழுக்க பரப்புரைக்காக நான் சுற்றுப்பயணம் செய்ததில், சாக்கடை அரசியல் காரணமாக பெரும் விரக்தியில் இருந்த மக்கள் அனைவரும், ஆம் ஆத்மியை ஒரு மாற்று சக்தியாக உணர்ந்துள்ளதை நேரில் காண முடிந்தது.
இது கலைஞர் பட்டினம் அல்ல!
இந்த காயல்பட்டினம் கலைஞர் பட்டினம் அல்ல. இது எளிய மக்களின் பட்டினம்தான். இது யாருடைய தனிப்பட்ட பட்டினமும் அல்ல.
அனைவரின் குரலாக...
இக்கட்சி முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், இந்துக்கள், மீனவர்கள், ஒடுக்கப்பட்டோர் என - இந்த நாட்டில் வசிக்கும் அனைத்து மதத்தினர், ஜாதியினர், அடக்குமுறைக்கு ஆளானோர் அனைவரின் குரலாகவும் இயங்கும்.
ஆர்.எஸ்.எஸ். கணிப்பு:
இதை ஆர்.எஸ்.எஸ். நன்றாகவே உணர்ந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 3 லட்சம் வாக்குகளைப் பெறும் என்று அது கணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுகவின் ஊடக இருட்டடிப்பு:
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 6 முனை போட்டி உள்ளதாக அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்க, திமுக ஆதரவு ஊடகங்கள் மட்டும் - ஆம் ஆத்மியை முழுமையாக இருட்டடிப்பு செய்து, 5 முனைப் போட்டி என திரும்பத் திரும்ப செய்தி வெளியிட்டு வருகிறது. அதன் அடி வயிறு கலங்க ஆரம்பித்துவிட்டதையே இது உணர்த்துகிறது. காலம் அதற்கு சரியான விடையைச் சொல்லும்.
இரு முனைப் போட்டி மட்டுமே!
உண்மையைச் சொல்வதானால், இரு முனைப் போட்டிதான் இங்கு நிலவுகிறது. அதாவது ஊழல் - மதச்சார்புக்கும், ஊழலின்மை - மதச்சார்பின்மைக்கும்தான் போட்டி நிலவுகிறது. இதை மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர்.
நிர்ப்பந்தம் காரணமாக அரசியலுக்கு வந்துள்ளேன்...
இதுநாள் வரை மக்களுக்காக பல போராட்டக் களங்களைச் சந்தித்த நிலையிலும், அரசியலை விட்டும் ஒதுங்கியே இருந்தேன். ஆம் ஆத்மி இந்தியாவில் ஏற்படுத்தியுள்ள புரட்சியைக் கண்ணுற்ற பின்னர், அரசியலில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பட்டுப்போன நம்பிக்கை - ஆம் ஆத்மி மூலம் துளிர் விட்டுள்ளது.
மாசுக்கள் நிறைந்த மாவட்டம்:
இந்த தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களைப் பாதிக்கும் வகையில் பல பிரச்சினைகள் உள்ளன. ஒட்டுமொத்த மாசு உருவாக்கத்தின் புகலிடமாக இப்பகுதியை ஆக்கிவிட்டனர்.
அமிலக் கழிவைக் கக்கும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை:
1950ஆம் ஆண்டு, இந்த காயல்பட்டினம் நகர எல்லைக்குள் டி.சி.டபிள்யு. என்ற எமன் அடியெடுத்து வைத்தது. அன்று முதல் இன்று வரை அது வெளியிட்டு வரும் அமிலக் கழிவுகள் காரணமாக, வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு பொதுமக்களின் உடல் நலமும், உயிர்களும் பெரும் பாதிப்படைந்துள்ளன.
அனைவருக்கும் சட்டத்தின் ஆட்சி:
இந்த நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சட்டங்கள் நிறைய உள்ளன. ஆனால், அவையனைத்தும் பண முதலைகளை ஒன்றுமே செய்வதில்லை. அச்சட்டங்கள் ஏழைகளுக்கு மட்டும்தான் பயன்படுத்தப்படுகிறது.
ஆம் ஆத்மி ஆட்சியமைத்தால், அதன் அங்கத்தினர் நாடாளுமன்ற உறுப்பினர்களானால் - இந்நிலை தொடர விடவே மாட்டோம். பணக்காரர் - ஏழை பாகுபாடின்றி, சட்டத்தை அனைவருக்கும் சமமாக்கி, சட்டத்தின் ஆட்சியைக் கடுமையாகக் கடைப்பிடிப்போம்.
இயற்கை வளங்களைச் சுரண்ட எவரையும் அனுமதியோம்!
டி.சி.டபிள்யு. ஆலை தவிர, தூத்துக்குடியிலும் - நெல்லையிலும் தாது மணல் கொள்ளை பகிரங்கமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கட்சி பாகுபாடின்றி அனைவரின் ஆதரவோடும் அது நடந்துகொண்டிருக்கிறது. இந்திய மண், அந்தந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களது மண். இதை, மாசு படுத்திட, இயற்கை வளங்களைச் சுரண்டிப் பிழைப்பதன் மூலம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திட எந்த சக்திக்கும் ஆம் ஆத்மி கட்சி சிறிதும் இடமளிக்காது.
பதுக்கப்படும் மக்கள் பணம்:
மக்கள் பணம் 73 லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணமாக இந்திய பண முதலைகளால் வெளிநாடுகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வோரையெல்லாம் சட்டத்தின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுப்போம்.
கூடங்குளத்தில், அதன் சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் பொதுமக்களின் உயிர் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக - அரசு அனுமதியுடன் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து, சிறிதும் சளைக்காமல் தொடர்ந்து 3 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். இனி அப்போராட்டம் அரசியல் களம் வழியாகவும் தொடரும்.
ஆம் ஆத்மி பண முதலைகளிடம் பிச்சை பெறவில்லை!
தேர்தல் செலவினங்களுக்காக பண முதலைகளிடமும், மக்களைப் பாதிக்கும் தொழிற்சாலைகளிடமும் சராசரி அரசியல் கட்சிகள் பிச்சை கேட்டுக்கொண்டிருப்பது போல் ஆம் ஆத்மி செய்யவில்லை. ஆம் ஆத்மியின் செலவினங்களுக்கு மக்களிடமிருந்துதான் பணம் பெற்று செலவழிக்கப்படுகிறது. அதற்கு விசுவாசமாக என்றும் இருப்போம். பொறுப்புக்கு வந்தால் நேர்மையாகப் பணியாற்றுவோம்.
அநாதை வேட்பாளர்கள்:
இத்தேர்தலில் முக்கிய கட்சிகளாகக் காண்பிக்கப்படும் அதிமுக, திமுக கட்சிகளின் வேட்பாளர்கள் உட்கட்சிப் பூசல்கள் காரணமாக, தொகுதியில் அநாதைகளாக சுற்றித் திரிகின்றனர். இத்தேர்தலில் பணம் வேலை செய்யாது என்பது நிச்சயம். விவரமறிந்த மக்கள் அதை நன்றாக உணர்ந்துள்ளனர்.
குற்றப் பின்னணியற்ற ஆம் ஆத்மி வேட்பாளர்கள்:
நடப்பு தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி நாடு முழுக்க 415 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மற்ற கட்சிகளில் பெரும் குற்றவாளிகள் எல்லாம் களத்தில் நிற்கும் நிலையில், இந்த 415 பேரும் எந்தக் குற்றப் பின்னணியும் அற்றவர்கள் என்பதை மார்தட்டிக் கூற இயலும்.
மக்கள் சக்தியே வெல்லும்!
இத்தேர்தலில் மக்கள் சக்தியே வெற்றி பெற வேண்டும்! வெற்றி பெறும்!! மக்களை மீறி எதுவும் நடக்காது! நடக்க விட மாட்டோம்!! மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகத்தான் இந்த ஆம் ஆத்மி செயல்படும்.
தீய சக்திகளைத் துடைத்தெறிய, இத்தேர்தலில் நீங்கள் யாவரும் துடைப்பத்திற்கு வாக்களித்து, மக்கள் போராளிகளை வெற்றிபெறச் செய்திட அன்புடன் வேண்டுகிறேன்.
பல்வேறு இடங்களிலும் தொடர் பரப்புரையில் ஈடுபட்ட காரணத்தால், இப்பொதுக்கூட்டத்திற்கு குறித்த நேரத்தில் வர இயலாமலாகிவிட்டது. தாமதம் செய்தமைக்காக வருந்துகிறேன். அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
KEPA அமைப்புக்கு வேட்பாளர் அளித்த கடிதம் வாசிப்பு:
இவ்வாறு, ஆம் ஆத்மி கட்சியின் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ம.புஷ்பராயன் பேசினார். காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் டி.சி.டபிள்யு. ஆலையின் அமிலக்கழிவால் ஏற்பட்டுள்ள மாசு விஷயத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆம் ஆத்மி வேட்பாளர் ம.புஷ்பராயன் - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு – KEPAவிடம் கைச்சான்றிட்டு அளித்துள்ள கடிதம் கூட்டத்தில் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.
வேட்பாளர் உள்ளிட்ட பேச்சாளர்களுக்கு, ஆம் ஆத்மியின் காயல்பட்டினம் தேர்தல் பணிக்குழுவின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
அத்துடன், டி.சி.டபிள்யு. அமிலக் கழிவு ஆலையால் காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக, ஜித்தா காயல் நற்பணி மன்றம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து தயாரித்த “புற்றுக்கு வைப்போம் முற்று” என்ற ஆவணப்பட குறுந்தகடு அவர்களனைவருக்கும் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் அங்கத்தினர் மற்றும் காயல்பட்டினம் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
கூட்ட ஏற்பாடுகளை, ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல், அமீர் சுல்தான், ‘மாஷாஅல்லாஹ்’ தாவூத், படவானம் ஸாலிஹ், சிம்சன் உமர், செய்யித் இப்றாஹீம், செய்யித், ரிஜ்வீ, மரக்கடை காதர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கள உதவி:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
[செய்தி திருத்தப்பட்டது @ 11:25 / 17.04.2014] |