தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நட்டர்ஜிக்கு ஆதரவு கோரி, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் காயல்பட்டினத்தில் பரப்புரை செய்துள்ளார். விபரம் வருமாறு:-
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியியில், வழக்குரைஞர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு கோரி, அதிமுக கூட்டணிக் கட்சியான சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ஆர்.சரத்குமார் நேற்று (ஏப்ரல் 16) தொகுதியில் சுற்றுப்பயணம் செய்தார். நேற்று 19.30 மணியளவில் காயல்பட்டினம் பேருந்து நிலையத்தின் முன் வாகனத்திலிருந்தவாறு அவர் உரையாற்றினார். உரைச்சுருக்கம் வருமாறு:-
இந்தத் தேர்தல் மற்ற தேர்தல்களிலிருந்து வேறுபட்டதாகும். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி இந்திய நாட்டில் பெரும் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் தேர்தல் களத்தில் உள்ளது.
தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் இராணுவ வீரர்களுக்குக் கூட பாதுகாப்பில்லை. ஆங்காங்கே திடீரென தாக்குதல் நடத்தப்பட்டு, வீரர்கள் கொல்லப்படுகின்றனர். காங்கிரஸ் அரசு பலவீனப்பட்டிருப்பதையே இது காண்பிக்கிறது.
காங்கிரஸுடன் இணைந்து திமுகவும் கூட்டணியில் ஒட்டிக்கொண்டு 9 ஆண்டு காலமாக ஆட்சியில் பங்கெடுத்துள்ளது. காங்கிரஸுடன் 9 ஆண்டுகளும், அதற்கு முன்பாக பாஜகவுடன் 5 ஆண்டுகளும் என தொடர்ச்சியாக 14 ஆண்டுகள் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்துள்ளது. அதன் அங்கத்தினர் அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர். இந்த 14 ஆண்டு காலகட்டத்தில் திமுக - மத்தியில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழகத்திற்குத் தந்துள்ள திட்டங்கள் என்ன?
காற்றலையைக் கூட காசாக்கி அனுபவித்ததைத் தவிர இவர்கள் செய்த சாதனைகள் என்ன? 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில், 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை ஊழல் செய்து சாதனை புரிந்துள்ளது இதன் மூலம் திமுக. உலகிலேயே பெரிய ஊழல்களின் பட்டியலிலும் அது இடம் பிடித்துள்ளது. இது இந்தியர்களுக்கு பெரும் அவமானம்.
காங்கிரஸோடு ஒட்டிக்கொண்டிருந்த வரை இந்தியாவில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவளித்த திமுக தலைவர் கருணாநிதி, தற்போது அக்கூட்டணியிலிருந்து விலகியதும், ஆதரவளிக்க மாட்டோம் என்கிறார். “அப்போது ஏன் ஆதரித்தீர்கள்?” என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அப்போது ஆதரித்திருக்காவிட்டால் ஆட்சி கவிழ்ந்திருக்குமே...?” என்கிறார். அதாவது, இவர்களது அமைச்சர்கள் பதவியிழந்துவிட்டால், ஆதாயம் கெட்டுப்போகும் என்கிறார்.
இதற்கு நேர்மாறாக, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த தேர்தலில் 167 வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தார். அவற்றுள் 150 வாக்குறுதிகளை நிறைவேற்றியும் உள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் அனைத்து சமூக மக்களையும் அரவணைத்து திட்டங்களை அறிவித்துள்ளார். அனைத்துத் துறைகளின் நலன்களையும் அதில் கண்டுள்ளார்.
கச்சத்தீவை மீட்போம் என்கிறார். இதே கச்சத்தீவை இலங்கையிடம் தாரை வார்த்துக் கொடுத்தது இந்திரா காந்தி அரசு. அப்போதும் இந்த திமுக அவருடன் ஒட்டிக்கொண்டுதான் இருந்ததே தவிர, அதை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை.
தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கை கூறுகிறது. ஆனால், கனிமொழியை ஆட்சியில் அங்கம் வகிக்கச் செய்ததைத் தவிர - தமிழுக்காக கருணாநிதி எந்த அக்கறையையும் காண்பிக்கவில்லை.
சிறுபான்மை முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்திட ஆணையம் அமைக்கப்போவதாக அறிவித்துள்ளார் ஜெயலலிதா. உலமாக்கள் ஓய்வூதியத்தை உயர்த்தியிருக்கிறார். நாகூர் தர்காவுக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பில் சந்தனக் கட்டைகளை வழங்கியுள்ளார். ரமழான் நோன்புக் காலங்களில், இஃப்தார் நிகழ்ச்சிக்காக தமிழகம் முழுவதிலுமுள்ள பள்ளிவாசல்களில் கிலோ 1 ரூபாய்க்கு அரிசி வழங்கிக் கொண்டிருக்கிறார்.
தற்போது தேர்தல் களத்தில் கொள்கை முரண்பாடுகளைக் கொண்டவர்களைக் கொண்டதாக பாஜக கூட்டணி உள்ளது. தன் மைத்துனர் சுதீஷை மத்திய அமைச்சராக்கும் ஒரே நோக்குடன் விஜயகாந்த் தேர்தல் களத்தில் உள்ளார். பரப்புரைகளில் அவர் என்ன பேசுகிறார் என்பதே யாருக்கும் புரியவில்லை.
இலங்கை தமிழர் விஷயத்தில் பாஜகவுடன் நேர்முரணான கருத்தைக் கொண்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் தன் மகன் அன்புமணியை மத்திய அமைச்சராக்குவதற்காக பாஜகவுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறார். மதிமுகவும் அதே எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறது.
ஆனால், ஜெயலலிதாவோ தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கிட வியூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். அதன் முதல்கட்டமாக நாட்டில் நிலவும் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க முடிவு செய்துள்ளார். அந்த அடிப்படையில், தற்போது இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக அந்நாட்டு அரசுடன் பேசவிருக்கிறார்.
இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஆனால் பொருளாதார வளர்ச்சியின்றி காணப்படுகிறது. இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக்கிட, அதிமுக சார்பில் தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க அன்புடன் வேண்டுகிறேன். தமிழகத்தில் 40 தொகுதிகளையும் அதிமுக மிகப்பெரிய வாக்குகள் வேறுபாட்டில் வெல்வது உறுதி.
இவ்வாறு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேசினார்.
காயல்பட்டினம் வருகை தந்த அவருக்கு, அக்கட்சியின் சார்பில் அதன் நகர செயலாளர் அப்துல் அஜீஸ், அதன் மகளிரணி ஒன்றிய செயலாளர் ஜுவைரியா, அதிமுக நகர துணைச் செயலாளர் கே.ஏ.ஷேக் அப்துல் காதர் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
சரத்குமார் வருகையையொட்டி, அதிமுக நிர்வாகிகளான எஸ்.ஏ.முகைதீன், என்.எம்.அகமது, நகர்மன்ற உறுப்பினர்களான ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் உட்பட - நகரின் அனைத்துப் பகுதி பொதுமக்கள் காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் அன்று மாலையிலிருந்தே திரளாகக் குழுமியிருந்தனர்.
படங்களுள் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
அதிமுக தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |