காயல்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்திருந்த - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலீயுடன் துளிர் பள்ளியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சமூக ஆர்வலர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். விபரம் வருமாறு:-
நீதிபதியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி:
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலீ - நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக 31.05.2014 சனிக்கிழமையன்று காயல்பட்டினம் வருகை தந்திருந்தார். அவரது வருகையையொட்டி, அன்று 17.30 மணியளவில் காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் காணொளி கூடத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மவ்லவீ ஹாஃபிழ் எம்.என்.புகாரீ இறைமறை குர்ஆனிலிருந்து சில வசனங்களையோதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். துளிர் செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய துளிர் நிறுவனர் வழக்குரைஞர் எச்.எம்.அஹ்மத் தலைமையுரையாற்றினார்.
சென்னையிலுள்ள - இலங்கை துணைத் தூதரக தலைவர் ஓ.எல்.அமீர் அஜ்வத், திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் நம்பிராஜன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
நீதிபதி உரை:
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலீ சிறப்புரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம்:-
இந்திய அரசியல் சாசனம்:
முகலாயர் ஆட்சிக் காலத்தில்தான் சட்டம் என்பதே உருவானது. அதன் பிறகு ஆங்கிலேயர் ஆட்சியில் அரசியல் சட்டங்கள் படிப்படியாக உருவாயின. இந்திய அரசியலமைப்புச் சட்டங்களுள் பெரும்பாலானவை 1858-1947 காலகட்டத்தில் - அதாவது ஆங்கிலேயர் காலத்தில் உருவானவையே. நீதி முறைகள் அனைத்தும் அமெரிக்காவின் அரசியல் அமைப்பில் இருந்து இந்திய அரசியல் அமைப்பு பயன்படுத்திக் கொண்டவையே.
முஸ்லிம் தனியார் சட்டம்:
இந்தியாவில் முஸ்லிம் தனியார் சட்டம் என்பது நம் நாட்டின் முஸ்லிம்கள் பின்பற்றும் கலாச்சார, பிரதேச, நடைமுறை அடிப்படையில் உருவானதே. முஸ்லிம்களின் திருமணம், விவாகரத்து, பராமரிப்பு, பிரதிபலன் எதிர்பாரத கொடை, திருமணம் செய்ய தடுக்கப்பட்டோர், மஹரும் - கைக்கூலியும் போன்றவற்றை உள்ளடக்கியதே முஸ்லிம் தனியார் சட்டம்.
திருமண கட்டாயப் பதிவு சட்டம்:
2009ஆம் ஆண்டுக்கு முன்பு நடந்த திருமணங்களுக்கு கட்டாயப் பதிவு அவசியமற்றிருந்தது. அதற்குப் பின் நடைபெற்ற திருமணங்கள் - முஸ்லிம் திருமண சட்டம், ஹிந்து திருமண சட்டம், கிறிஸ்து திருமண சட்டம் என ஏதேனும் ஒன்றில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், மீண்டும் "தமிழ்நாடு திருமண பதிவு சட்ட”த்தில் பதிவு செய்யப்பட வேண்டும். திருமணம் நடந்து 90 நாட்களுக்குள் 100 ரூபாய் செலுத்தி, திருமணம் நடந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். 91-150 நாட்களுக்குள் பதிவு செய்ய 50 ருபாய் அதிக கட்டணம் செலுத்த வேண்டும். 150 நாட்களைக் கடந்துவிட்டால் பதிவுசெய்ய இயலாது.
இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், திருமணமாகும் ஆணுக்கு 21 வயதும் பெண்ணுக்கு 18 வயதும் பூர்த்தியாகி இருக்க வேண்டும். திருமணம் நடந்ததற்கான ஆதாரம், வயது - முகவரிக்கான சான்றிதழ் போன்றவை சமர்பிக்கப்பட வேண்டும். இந்தப் பதிவை செய்து தர தரகர்கள் ரூபாய் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இவர்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது. திருமணப் பதிவிற்குரிய கட்டணம் 100 ரூபாய் மட்டுமே.
தகவலறியும் உரிமை சட்டம்:
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தால் கொண்டு வரப்பட்டது. அரசு அல்லது அரசு உதவி பெறும் நிறுவனங்களிலிருந்து மக்கள் உரிமையை அறிந்துகொள்ள ஏதுவாக உருவாக்கப்பட்டதே இச்சட்டம்.
இச்சட்டத்தின் மூலம் இந்திய குடிமக்கள் அனைவருமே தகவல்கள் அறியும் உரிமை பெற்றவர்கள். இச்சட்டத்தின் கீழ் கேட்பதற்குத் தகுதியான எந்தத் தகவல் கேட்கப்பட்டாலும், விண்ணப்பம் கொடுத்து 30 நாட்களுக்குள் அது தொடர்பானவர்கள் பதில் அளிக்க வேண்டும்.
பொதுநல - குடும்ப நல வழக்குகள்:
இவ்வாறு அவர் பேசினார். பொதுநல - குடும்ப நல வழக்குகள் மீதான தீர்ப்புகள் குறித்தும் அவர் தனதுரையில் - நடைபெற்ற நிகழ்வுகளுடன் விளக்கிப் பேசினார்.
இலங்கை தூதரக அதிகாரி உரை:
அடுத்து, இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட இலங்கை தூதரக அதிகாரி ஓ.எல்.அமீர் அஜ்வத் உரையாற்றினார்.
மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் மறுவாழ்வுப் பணிகளைச் செய்து வரும் துளிர் பள்ளி மற்றும் அதன் நிர்வாகிகளைப் பாராட்டிப் பேசிய அவர், அச்சேவைகளுக்கிடையே இதுபோன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருப்பது போற்றத்தக்கது என்றும் கூறியதோடு, இச்சேவைகளைச் செய்து வரும் துளிருக்கு தேவையான பொருளுதவியையும், ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
துளிர் பள்ளியின் தன்னார்வலர்கள், காயல்பட்டினம் நகரின் சமூக ஆர்வலர்கள் - நகரப் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஒரு பயனுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதாகக் கூறி அவர்கள் நீதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.
நினைவுப் பரிசு:
நிகழ்ச்சியில் அங்கம் வகித்த பிரமுகர்கள் அனைவருக்கும் துளிர் அறக்கட்டளை சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டதுடன், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
துளிர் பெற்றோர் மன்ற தலைவர் ஆயிஷா ஸாஹிப் தம்பியின் நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
தகவல் & படங்கள்:
சித்தி ரம்ஸான்
பொறுப்பாளர்
துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி
துளிர் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |