காயல்பட்டினத்திலுள்ள மளிகைக் கடையில் திடீர் சோதனை நடத்தி - பான் மசாலா பொருட்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். விபரம் வருமாறு:-
காயல்பட்டினத்தில், பழங்கள் வைக்கும் கிட்டங்கியொன்றில் அழுகிய நிலையில் பழங்களை வைத்திருப்பதாகவும், கோழி இறைச்சிக் கடையொன்றில் சுகாதாரக் கேட்டுடன் இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் போஸ் தலைமையில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையின் காயல்பட்டினம் - திருச்செந்தூர் வட்டாரத்திற்கான அதிகாரி பொன் முத்து ஞானசேகர் மற்றும் மாரியப்பன், டைட்டஸ், முத்து ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இம்மாம் 04ஆம் நாள் புதன்கிழமையன்று காலையில் காயல்பட்டினம் வந்தனர்.
பழக் கிட்டங்கியில் கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்பட்டு அழுகிய நிலையிலிருந்த குறைந்தளவு பழங்களைக் கைப்பற்றி அவற்றை அழிக்க உத்தரவிட்டனர்.
கோழி இறைச்சிக் கடை சுகாதாரக் கேட்டுடன் பராமரிக்கப்படுவது கண்டறியப்பட்டதாகவும், அது குறித்து நடவடிக்கை மேற்கொள்வதற்காக சுகாதாரத்துறை தூத்துக்குடி மாவட்ட இயக்குநருக்கும், காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத் துறை தூத்துக்குடி மாவட்ட அதிகாரி டாக்டர் போஸ் தெரிவித்தார்.
பெரிய நெசவுத் தெரு - எல்.கே. லெப்பைத்தம்பி சாலை சந்திப்பிலுள்ள ஒரு மளிகைக் கடையில், சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்த வாகனத்தை அவர்கள் சோதனையிட்டபோது, பான் மசாலா பொருட்கள் சிலவற்றைக் கைப்பற்றியுள்ளதாகவும், அவை அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள்தானா என்பதை அறிவதற்காக ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், தடை செய்யப்பட்ட பொருளாக இருப்பின் அவை அழிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்தி & படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
மற்றும்
J.A.அப்துல் ஹலீம்
உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனை நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |