சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலனுக்கான உண்டியல் நன்கொடையாக உறுப்பினர்களிடமிருந்து ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் தொகை சேகரிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
செயற்குழுக் கூட்டம்:
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 20ஆம் தேதி இரவு 19.45 மணிக்கு, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. மன்றத்தின் புதிய உறுப்பினரான எம்.ஐ.அபூபக்கர் சித்தீக் இறைமறையை ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார்.
கூட்ட ஒருங்கிணைப்பாளர் உரை:
நடப்புக் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான ஹாஃபிழ் ஏ.கே.அபுல்காசீம் பேசுகையில் தாம் இக்கூட்டத்தை வழிநடத்துவது தமக்கு கிட்டிய அரிய வாய்ப்பாக கருதுவதாகவும், இம் மன்றத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகவும், உள்ளூர் நலனில் அக்கரையோடு அநேக நல உதவிகள் செய்து வருவதுடன், வேலை வாய்ப்புத் தேடி வருவோர்க்கு நல்ல்தோர் வழிகாட்டுதலாக இருப்பதுடன், உணவு மற்றும் தங்குமிட வசதிகள் செய்து தருவது போன்ற சேவைகளே இம்மன்றத்தின் வெற்றிக்கு காரணம் என்றார். சிங்கை கா.ந.மன்றத்தினரால் ஆண்டு தோறும் இங்கு நடத்தப்பட்டு வரும் ஹிஃப்ழுல் குர்ஆன் மனனப் போட்டியைப் போன்று நமதூரிலும் நடத்த வேண்டும். அவ்வாறு செய்வதனால் அநேக ஹாஃபிழ்களின் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்ய ஓர் நல்ல வாய்ப்பாக அமையும். இதற்கு மன்றம் ஒப்புதல் வழங்க வேண்டும். மேலும் திட்டமிட்ட செயல்பாடுகள், தீர்க்கமான வழிநடத்துதல் இன்றி இத்தகைய பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்துவது கடினம். இந்த வகையில் சிங்கை கா.ந.மன்றம் ஓர் கட்டுக்கோப்புடன் அனைத்து உறுப்பினர்களும் கைகோர்த்து நிற்பது பெருமையாக உள்ளது என தமது உரையை நிறைவு செய்தார்.
ஆலோசகர் உரை:
மன்றத்தின் ஆலோசகர் பாளையம் ஹாஜி பி.எம்.ஏ.முஹம்மத் ஹஸன் உரையாற்றினார். அவர்தம் உரையில் அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்றதுடன் பத்தாவது ஆண்டில் கால்பதித்திருக்கும் சிங்கை கா.ந.மன்றத்தின் செயல்பாடுகள் குறித்தும் இன்னும் ஆற்ற வேண்டிய முக்கிய பணிகள் குறித்தும் விளக்கி பேசினார். மன்றத்தின் பணிகள், சேவைகள், செயலாக்கங்கள் குறித்து இதழ் வெளியிடுவதற்கான ஆலோசனை கடந்த கூட்டங்களில் விவாதித்து அனுமதி பெற்றிருந்தமையால் அதற்கான ஏற்பாடுகளை செய்ய குழு ஒன்றை உறுப்பினர்களின் அனுமதியோடு தேர்வு செய்யப்பட்டது. இதழுக்கான பொறுப்புகளை நிர்வகிக்கும் குழுவில் எட்டு பேர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் பெயர் விபரம் வருமாறு:
* பாளையம் முஹம்மத் ஹஸன்
* எம்.ஆர் ரஷீத் ஜமான்
* எம். ஃபுஆத் அஹ்மத்
* எம்.எம்.மொகுதூம் முஹம்மத்
* எம்.என்.ஜவஹர் இஸ்மாயீல்
* எம்.என்.எல்.முஹம்மத் ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்)
* செய்யத் லெப்பை
* எம்.ஏ.சி.செய்யத் இஸ்மாயீல்
ஆகியோர் ஆவர்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை, பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாயி சமர்ப்பித்தார். தற்போதைய நிதி நிலை மற்றும் இருப்புத் தொகை, நலிந்தோருக்கான சமையல் பொருளுதவி, உள்ளூர் மத்ரஸாக்களில் ஓதி ஹாஃபிழ் பட்டம் பெற்ற 22 மாணவர்களுக்கான அன்பளிப்புத்தொகை, மற்றும் பல்வேறு நலத்திட்டங்களில் உறுப்பினர்களின் பங்களிப்பு குறித்த விபரங்கள், ஆகியவற்றை தமது நிதி நிலை அறிக்கையில் சமர்ப்பித்தார். மன்றம் ஒருமனதோடு அதற்கு அனுமதி வழங்கியது. மேலும் மன்ற உறுப்பினர்கள் தமது சந்தா தொகைகளை நிலுவையின்றி செலுத்தச் செய்திடும் பொருட்டு, கூடுதல் முயற்சிகள் செய்யப்படவுள்ளதாக அப்போது அவர் கூறினர்.
புதிய காயலர் அறிமுகம்:
சிங்கையில் வேலை வாய்ப்புத் தேடி வந்திருந்த எம்.ஐ.அபூபக்கர் சித்தீக் தம்மை அறிமுகப்படுத்தியதுடன் மன்றத்தின் புதிய உறுப்பினராக இணைந்து கொண்டார். கடந்த மாதம் இவருக்கு வேலைக்கான முன் அனுமதி கிடைக்கபெற்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
கடந்த கூட்ட நிகழ்வறிக்கையையும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டமை தொடர்பான விளக்கங்களையும், மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் விளக்கினார். GNK Project எனப்படும் நலியுற்றோருக்கான சமையல் பொருளுதவி குறித்த விபரங்கள் மற்றும் தற்போதைய நிலை குறித்தும் விளக்கினார். உள்ளூரில் நூற்றி பத்து பேருக்கு இம்மாதம் 25ஆம் தேதி இவ்வுதவியை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். (இது குறித்த செய்தி பின்னர் வெளியிடப்படும்) அதைத் தொடர்ந்து அவர் ஊரில் இருந்த போது நடைபெற்ற இக்ராஃ அமைப்பின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் பங்கெடுத்தது குறித்து விளக்கமாகப் பேசினார்.
இக்ராஃவில் ஆயுள்கால உறுப்பினர்களாக சிங்கை கா.நலமன்றத்தின் பதிநான்கு உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கான ஆயுள்கால சந்தா தொகை இரண்டு இலட்சத்தி பத்தாயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு விட்டதாகவும் அறிவித்தார். அத்துடன் இவ்வாண்டு செயல்படுத்தப்படவிருக்கும் இக்ராஃவின் புதிய மேம்படுத்தப்பட்டுள்ள கல்வி ஊக்கத்தொகை திட்டம் குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கினார்.
உண்டியல் திறப்பு:
மன்றத்தின் நகர்நலப் பணிகளுக்கான நிதி சேகரிப்புத் திட்டங்களுள் ஒன்றான - உண்டியல் நிதி சேகரிப்புத் திட்டத்தின் கீழ், மன்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட உண்டியல்கள் இக்கூட்டத்தில் திறக்கப்பட்டது. மொத்த உண்டியல் நிதியாக இந்திய ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் தொகை சேகரிக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
உதவி கோரும் விண்ணப்பங்கள் மீதான விசாரணை நிலை:
உதவி கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களை மன்ற உறுப்பினர் ஜே.அபுல்காசீம் சமர்ப்பித்தார். இவற்றில் 12 பேர்க்கு கல்விக்கான உதவி மற்றும் 2 பேர்க்கு மனிதாபிமான உதவியும் வழங்க மன்றம் முடிவு செய்தது. முதியோர்க்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வசதியற்ற வயதானவர்கள் எட்டு பேர்களுக்கு மாதாமாதம் உதவித்தொகை வழங்க மன்றம் தீர்மானித்துள்ளது. இதில் கல்வி உதவிக்காக ஒரு இலட்சத்தி அறுபத்தையாயிரம் ரூபாயும், மனித நேய உதவிக்காக இருபது ஆயிரம் ரூபாயும் வழங்க இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இரங்கல் மற்றும் துஆ பிரார்த்தனை:
அண்மையில் காலம் சென்ற ஐக்கியப்பேரவையின் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களும் உள்ளூர் பிரமுகர்களுமான மர்ஹூம்கள் ஹாஜி பிரபுதம்பி மற்றும் ஹாஜி எம்.எஸ்.எம்.பாஜுல் அஸ்ஹப் ஆகியோரது மரண செய்தியை மன்றத்தில் அறிவித்ததுடன் அவர்களின் மறுமை வாழ்வுக்காக துஆ செய்யப்பட்டது.
தொடர்ந்து, உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் சிங்கை கா.ந.மன்றத்தின் சார்பில் புனித ரமளான் நல்வாழ்த்துக்கள் அறிவிக்கப்பட்டது.
முதியோருக்கான உதவித் தொகை வழங்கல்:
மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சோனா அபூபக்கர் சித்தீக் பேசுகையில், போதுமான வசதியின்மையால் பிறரிடம் உதவி கோர தயங்கிய நிலையில் சமூகத்தில் வாழ்ந்துவரும் முதியோர்களைக் கண்டறிந்து அவர்களின் விருப்பத்தைக் கேட்டறிந்து எந்நிலையிலும் அவர்களது தன்மான உணர்வு பாதிக்கப்படாத வகையில் பிறர் அறியா வண்ணம் ஒரு சிறு தொகையை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். கடந்த ஆண்டு துவங்கிய இத்திட்டம் வரும் செப்டம்பர் மாதத்தோடு ஒரு வருடம் நிறைவடைகிறது. இது வரை எட்டு முதியோர்களுக்கு உதவி வழங்கப்பட்டு வருகின்றது. யார் எவர் எனத் தெரியாத நிலையில் மன்ற உறுப்பினர்கள் இதற்காக பொறுப்பேற்று உதவி செய்து கொண்டிருப்பது பாரட்டுக்குரியதே. இதற்குரிய நற்கூலியை அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் தந்தருள்வானாக என தமது உரையில் குறிப்பிட்டார்.
இரவுணவு விருந்துபசரிப்பு:
விவாதிக்க வேறு அம்சங்களில்லா நிலையில், இரவு 9:30 மணிக்கு மன்றத்தின் ஆலோசகர் பாளையம் ஹாஜி முஹம்மத் ஹஸன் அவர்களின் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் இடியாப்ப பிரியாணி இரவு உணவாக விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு, சிங்கை காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் குறித்து, அதன் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கை காயல் நல மன்றத்தின் சார்பில்...
தகவல்:
ஹிஜாஸ் மைந்தன்
(செய்தித்தொடர்பாளர்)
படங்கள்:
ரப்பானி & மொகுதூம்
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கப்பூர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |