ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றம் நல மன்றத்தின் 5ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் 9ஆவது பொதுக்குழுக் கூட்டம் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் ஒன்பதாவது பொதுக்குழுக்கூட்டம் மற்றும் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா, ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி, பூங்காக்களின் நகரம் என்று அழைக்கப்படும் கென்ட் மாநகரில் சமுதாய அரங்கில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
கூட்ட நிகழ்வுகள்:
கூட்டத்திற்கு மன்றத் தலைவர் டாக்டர் செய்யித் அஹ்மத் தலைமை தாங்கினார். மன்றத்தின் செயலாளர் முஹமது இம்தியாஸ் அவர்களின் இளைய புதல்வர் இளவல் யூசுப் கிராஅத் ஓதி பொதுகூட்டத்தைத் துவக்கி வைத்தார். பின்னர் மன்றத்தின் துணை செயலாளர் ஹசன் மரைக்கார் வருகை புரிந்தோரை வாழ்த்தி வரவேற்பு உரையாற்றினர்.
தலைவர் உரை:
பின்னர் கூட்டத் தலைவர் டாக்டர் செய்யித் அஹ்மத் தலைமையுரையாற்றினார். அதில் மன்றத்தின் கடந்த கால பணிகள் குறித்தும், எம் மன்றத்தின் திட்டமான முதலுதவி பயிற்சி வகுப்புகளை குறித்தும் அதற்கு கிடைத்த வரவேற்பு குறித்தும் மன்றத்தின் உறுப்பினர்களுக்கு மிக அழகுடன் விளக்கினார்கள்.
துணைத்தலைவர் உரை:
பின்னர் மன்ற துணைத்தலைவர் ஹாபிழ் அப்துல் மத்தீன் லபிப் அவர்கள் நம் மன்றத்தால் நடத்தப்படும் திட்டங்கள் மிகுந்த தரத்துடன் இருக்க வேண்டிய அவசியத்தையும், அதன் மூலம் நாம் பிற்காலத்தில் அடைய இருக்கிற பலன்களையும் அழகுடன் எடுத்துரைத்தார்கள்.
செயலாளர் உரை:
மன்றத்தின் செயலாளர் டாக்டர் அபூ தம்பி அவர்கள் துளிர் சிறப்பு பள்ளி குறித்தும் அதன் செயல்பாடுகளையும் குறித்து விளக்கி கூறினார்கள்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
பின்னர், சென்ற கூட்ட நடப்புகள் மற்றும் மன்றத்தின் வரவு - செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் சதகதுல்லாஹ் குளம் அவர்கள் விளக்கிப் பேசினார். மன்றத்தின் சந்தாவை அதிகரிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் பல செயல் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்றும் கூறினார்.
முதலுதவி பயிற்சி வகுப்புகள்:
மன்றத்தின் சார்பில் அன்மையில் நடைபெற்ற பெண்களுக்கான முதலுதவி பயிற்சி வகுப்புகள் குறித்து பொதுக்குழு உறுப்பினர் ஷாகுல் ஜிப்ரி கரீம் அவர்கள் விளக்கி பேசினார். இப்பயிற்சி வகுப்புகள் கிடைத்த அமோக வரவேற்பை அவர் மன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார்.
கலந்துரையாடல்:
பின்னர் மன்ற உறுப்பினர்களுக்கு இடையே திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மன்றத்தின் அடுத்த முதலுதவி பயிற்சி வகுப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் நடத்துவது என்றும் இடம் மற்றும் நேரம் பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானங்கள்:
கலந்துரையாடலகளின் இறுதியில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1:
காயல்பட்டினம் ஐக்கிய பேரவையின் தலைவர் மர்ஹூம் உவைஸ் ஹாஜியாரின் அவர்களின் மறைவுக்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த இரங்கல்லை தெரிவித்துகொள்கின்றது.
தீர்மானம் 2:
எமது மன்றத்தின் காயல் மாநகர பரிதிநிதியாக சகோ. M.M. ஷாகுல் ஹமீது அவர்கள் செயல்படுவார்கள் என்று தீர்மானிக்கபட்டது.
தீர்மானம் 3:
எமது மன்றத்தின் முதலுதவி பயிற்சி வகுப்புகளுக்கு உதவிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இப்பொதுக்குழு நன்றி தெரிவிக்கின்றது. மன்றத்தின் அடுத்த முதலுதவி பயிற்சி வகுப்புகள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் நடத்துவதென்றும் தீர்மானிக்கபட்டது.
தீர்மானம் 4:
நமது காயல் மாநகரின் மருத்துவ சேவைகளை பல்வேறு திட்டங்கள் மூலம் நிறைவேற்றி வரும் KMT மருத்துவமனை, உலக காயல் நல மன்றங்களின் மருத்துவ கூட்டமைப்பான ஷிபா மற்றும் மைக்ரோ காயல் ஆகிய அமைப்புக்களுக்கு இப்பொதுக்குழு பாராட்டும் வாழ்த்துக்களும் தெரிவித்துகொள்கின்றது.
தீர்மானம் 5:
காயல் மாநகர செய்திகளை விரைவாகவும், சுவையாகவும் தருகின்ற அனைத்து காயல் நகர இணையதளங்களுக்கும் இப்பொதுக்குழு நன்றி தெரிவித்துகொள்கின்றது.
தீர்மானம் 6:
மன்றத்தின் 10வது பொதுக்குழு வருகின்ற அக்டோபர் மாதம் 11ஆம் தேதி நடத்துவதென்றும் தீர்மானிக்கபட்டது.
தீர்மானம் 7:
வட்டியில்லா கடன் உதவி திட்டமான 'ஜனசேவா கூட்டுறவு சங்கத்துக்கு' இப்பொதுக்குழு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றது.
பிறகு மதிய தொழுகைக்கு பின்னர் உணவு விருந்தோம்பல் நடைபெற்றது.
மழலையர் நிகழ்ச்சிகள்:
உணவு இடைவேளைக்கு பின்னர் மழலை செல்வங்களின் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதனை மன்றத்தின் பெண்கள் பிரிவு பிரிதிநிதி Mrs. Azzah Noohu Niyaz அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். அதனை தொடர்ந்து சிறுவர் - சிறுமிகளின் இஸ்லாமிய நிகழ்சிகள் நடைபெற்றன. பின்னர் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு அளிக்கப்பட்டது.
நகர மரபுச் சொல், வினாடி-வினா போட்டி:
சிறார்களின் நிகழ்சிகளை தொடர்ந்து, வினாடி-வினா போட்டி நடைபெற்றது. மன்றத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, நம் தாயகமாம் காயல்பட்டினம் நகரின் மரபுச் சொல்வழக்கை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட போட்டி, உறுப்பினர்களிடையே மிகுந்த மனமகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்து, சில மணி நேரங்கள் ஊரிலேயே இருந்த அனுபவத்தைப் பெற்றுத் தந்தது.
தமிழ் மொழித் தொடர்பு முற்றிலும் அற்றுப்போன ஐக்கிய ராஜ்ஜியம் நாட்டில் இதுபோன்ற போட்டிகள் அடிக்கடி நடத்தப்பட்டால், வளரும் தலைமுறைக்கு தாய்மொழியுடன் தொடர்பிருந்துகொண்டே இருக்கும் என்பது அங்கு அனைவராலும் உணரப்பட்டது. போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காயல் நகர மரபுச்சொல் மற்றும் வினாடி - வினா தொகுப்பாளராக சகோதரர் நூஹு நியாஸ் அவர்கள் திறம்பட நிகழ்சிகளை நடத்தினார்.
பின்னர் மன்றத்தின் உறுப்பினர் ஷாகுல் ஜிப்ரி கரீம் அவர்கள் நடத்திய 'பிங்கோ' போட்டி நடைபெற்றது. அதனை தொடர்ந்து துவாவுடன் நிகழ்சிகள் இனிதே நிறைவுபெற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |