கத்தர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலத் திட்டங்களுக்காக ரூபாய் 1 லட்சத்து 60 ஆயிரம் தொகை நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் துணைத்தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
செயற்குழுக் கூட்டம்:
இறையருளால் எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 68ஆவது செயற்குழுக் கூட்டம், கத்தர் நகரிலுள்ள காயல் ஃப்ரெண்ட்ஸ் ஹவுஸ் இஇல்லத்தில், இம்மாதம் 06ஆம் நாள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின், ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன் தலைமை வகிக்க, ஹாஃபிழ் ஸதக்கத்துல்லாஹ்வின் கிராஅத்துடன் துவங்கியது.
நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு:
உறுப்பினர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு நகர்நலத் திட்டப் பணிகளுக்காக நிதியொதுக்கீடு செய்யப்பட்டது:-
>>> ஏழை மாணவ-மாணவியருக்கான பள்ளிச் சீருடை வகைக்கு ரூபாய் 75 ஆயிரம்...
>>> இக்ராஃ மூலம் கடந்தாண்டு 5 பேருக்கும், நடப்பாண்டு புதிதாக 2 மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகையாக மொத்தம் ரூபாய் 35 ஆயிரம்...
>>> இக்ராஃ வருடாந்திர நிர்வாகச் செலவினத்திற்காக, ரூபாய் 5 ஆயிரம் அதிகரித்து, மொத்தம் ரூபாய் 20 ஆயிரம்...
>>> ஷிஃபா நிர்வாகச் செலவினத்திற்காக ரூபாய் 10 ஆயிரம்...
>>> தக்வாவின் ஒருங்கிணைப்பில், இமாம் - முஅத்தின் நோன்புப் பெருநாள் ஊக்கத் தொகை செயல்திட்டத்திற்காக ரூபாய் 10 ஆயிரம்...
>>> துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி வகைக்காக ரூபாய் 10 ஆயிரம்...
ஆக மொத்தம் 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.
வினாடி-வினா போட்டி:
இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து, நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டியை (Inter School Quiz Competition) வழமை போல் நடத்திட இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
நன்றியுரைக்குப் பின், ஹாஃபிழ் எம்.எம்.எல்.முஹம்மத் லெப்பை துஆவைத் தொடர்ந்து, ஸலவாத்துடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
உள்ளூர் பிரதிநிதி - கத்தர் காயல் நல மன்றம்
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |