உலக காயல் நல மன்றங்களின் மருத்துவத் துறை கூட்டமைப்பான ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பின் வழிகாட்டலுடன், வரும் ஆகஸ்ட் மாதத்தில், பள்ளி மாணவியருக்கு இரத்தசோகை கண்டறியும் முகாம் நடத்துவதென அபூதபீ காயல் நல மன்ற செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தின் 23ஆவது செயற்குழுக் கூட்டம் இம்மாதம் 19ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலையில், செயற்குழு உறுப்பினர் சுப்ஹான் என்.எம்.பீர் முஹம்மத் தலைமையில், துணைத்தலைவர் மக்பூல் அஹ்மத், செயற்குழு உறுப்பினர் பி.எம்.ஹுஸைன் நூருத்தீன் ஆகியோரது இல்லத்தில் நடைபெற்றது.
ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். நகர்நலன் குறித்த கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - இஃப்தார் நிகழ்ச்சியுடன் அடுத்த பொதுக்குழு:
நம் மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 03.07.2014 வியாழன் அன்று, “அரபு உடுப்பி பெங்கட் ஹால், அல்ஃபிர்தவ்ஸ் டவர், ஸலாம் street” என்ற முகவரியில், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியாக நடத்திடவும், பெண்களும் பங்கேற்கும் வகையில் தனி இடவசதி செய்யவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இந்த அறிவிப்பையே அழைப்பாக ஏற்று மன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்நிகழ்வில் தவறாமல் கலந்து சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தீர்மானம் 2 - நலிந்தோருக்கு சமையல் பொருளுதவி:
எதிர்வரும் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்துடன் இணைந்து நம் மன்றத்தின் சார்பில், நலிந்த நிலையிலுள்ள 10 குடும்பங்களுக்கு சமையல் பொருட்கள் வினியோகிக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - சாதனை மருத்துவ மாணவருக்கு பாராட்டு:
நம் மன்றத்தின் கவுரவ தலைவர் அல்ஹாஜ் ஐ.இம்தியாஸ் அவர்களின் மகனார் டாக்டர் நாஸிக் ஹஸன், அண்மையில் நடைபெற்ற புகழ்பெற்ற AIIMS (All India Institute of Medical Science - Delhi) நடத்திய - 35 ஆயிரம் மருத்துவ மாணவர்கள் எழுதிய முதுகலை (MD, MS, MCI) நுழைவுத் தேர்வில், 217ஆவது தர வரிசை பெற்று, நமதூரிலேயே AIIMS தேர்வில் இடம்பெறும் முதல் மருத்துவ மாணவர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார், அல்ஹம்துலில்லாஹ்.
மாணவரின் இச்சாதனையைப் பாராட்டி, எம் மன்றம் வாழ்த்தி துஆ செய்கிறது.
தீர்மானம் 4 - பள்ளி மாணவர்களுக்கு இரத்தசோகை கண்டறியும் முகாம்:
நம் மன்றத்தின் மூலம், இன்ஷாஅல்லாஹ் வரும் ஆகஸ்ட் மாதத்தில், நமதூர் காயல்பட்டினத்திலுள்ள பள்ளிகளில் 09 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு இரத்தசோகை (ANEMIA) கண்டறிய, ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் வழிகாட்டலுடன் பரிசோதனை முகாம் நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
முகாம் நடைபெறும் நாள் உள்ளிட்ட விபரங்களை உள்ளடக்கிய விரிவான செய்தி விரைவில் வெளியிடப்படும்.
தீர்மானம் 5 - பாஜுல் அஸ்ஹப் ஹாஜி மறைவுக்கு இரங்கல்:
காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை கவுரவ தலைவருமான எம்.எஸ்.எம்.முஹம்மத் பாஜுல் அஸ்ஹப் ஹாஜியார் அவர்கள், இம்மாதம் 16ஆம் நாளன்று மரணமடைந்த செய்தியறிந்து மிகவும் கவலையடைந்தோம். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
பொதுநலப் பணிகள் செய்திட வயதும், முதுமையும் ஒரு தடையில்லை என்பதை உணர்த்தும் வகையில், நமதூர் காயல்பட்டினத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளில் பங்கெடுத்துப் பணியாற்றிய பண்பாளர் நம்மை விட்டும் பிரிந்துவிட்டார்கள். அவர்கள் செய்த அனைத்து அற்புதமான பணிகளையும் அல்லாஹ் கபூல் செய்து, தனதருளால் அவற்றை நன்மைகளாக மாற்றிக் கொடுப்பானாக. அவர்கள் செய்திட்ட சமூகப் பணிகள் தொடரவும், அவர்களது குடும்பத்தின் வெற்றிடத்திற்கும் அதற்குப் பகரமான ஒன்றை அல்லாஹ் வழங்கியருள்வானாக.
அவர்களைப் பிரிந்து வாழும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ஸபூர் எனும் மேலான பொறுமையைக் கொடுப்பானாக. அவர்களின் மறுவுலக வாழ்வை வெற்றியாக்கி வைப்பானாக பிரார்த்திப்பதுடன், எம் மன்ற அங்கத்தினர் அனைவரும், அன்னாரின் குடும்பத்தாருக்கு மேலான ஸலாமை உரைக்கிறோம் - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
தீர்மானம் 6 - பிரபுத்தம்பி ஹாஜி மறைவுக்கு இரங்கல்:
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஹாஜி பிரபு முஹ்யித்தீன் தம்பி என்ற பிரபுத்தம்பி ஹாஜியார் அவர்களது மரணச் செய்தியறிந்து மிகவும் கவலையுற்றோம். அல்லாஹ் அவர்களின் பிழைகளைப் பொருத்தருளி, மேலான பதவியை வழங்குவானாக, ஆமீன்.
அயராத உழைப்பு, சுறுசுறுப்பு ஆகிய பண்புகளால் - இளைஞர்களுக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்து, எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண தன்னை முற்படுத்தி, அதற்கான வழிகளைக் கண்டு தீர்வு கண்டவர்கள். பிற குடும்பங்கள் பல வாழ வழிகாட்டியாய்த் திகழ்ந்த அன்னாரின் அனைத்து சேவைகளையும் அல்லாஹ் அங்கீகரித்தருள்வானாக.
அவர்களைப் பிரிந்து வாழும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ஸபூர் எனும் மேலான பொறுமையைக் கொடுப்பானாக. அவர்களின் மறுவுலக வாழ்வை வெற்றியாக்கி வைப்பானாக பிரார்த்திப்பதுடன், எம் மன்ற அங்கத்தினர் அனைவரும், அன்னாரின் குடும்பத்தாருக்கு மேலான ஸலாமை உரைக்கிறோம் - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தகவல்:
மவ்லவீ ஹாஃபிழ் S.M.B.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ
மூலமாக
P.M.ஹுஸைன் நூருத்தீன்
படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
அபூதபீ காயல் நல மன்றத்தின் முந்தைய (22ஆவது) செயற்குழுக் கூட்டம் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |