“இந்தியாவில் வட்டியில்லா வங்கி அமைப்பதை நோக்கி” என்ற இலக்குடன் பயணித்து வரும், ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கம் நிறுவனத்தின் காயல்பட்டினம் கிளை அலுவலக துவக்க விழா, இம்மாதம் 17ஆம் நாள் செவ்வாய்க்கிழமை 17.30 மணியளவில், 34சி, முதல் மாடி, மெயின் ரோடு, காயல்பட்டினம் என்ற முகவரியில் நடைபெற்றது.
அன்று 19.30 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், ஜன்சேவா விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், வேலூர் தொகுதி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:-
‘ஜன்சேவா’ காயல்பட்டினம் சாதனைப் பயணத்தில் ஒரு மைல் கல்:
காயல்பட்டினத்தில் பொதுநலன் கருதி பல்வேறு சேவை செயல்திட்டங்கள் செய்யப்பட்டு வருவதை நான் நன்கறிந்துள்ளேன். அவற்றுள் பெரும்பாலானவற்றை நேரிலும் கண்டு மகிழ்ந்துள்ளேன். அப்படிப்பட்ட இந்த ஊரில், வட்டியில்லா கடன் வழங்கும் நோக்குடன் ஜன்சேவா கிளை துவக்கப்பட்டுள்ளது, இந்நகரின் சாதனைப் பயணத்தில் ஒரு மைல் கல்.
வட்டி என்றால் என்ன, அதன் விளைவுகள் என்னென்ன என்பன பற்றி இங்கே பேசிய அனைவரும் விரிவாக விளக்கியுள்ளனர். சுருக்கமாகச் சொல்வதானால், பொருளாதாரத் தேவையுடையோர் வட்டியின் பக்கம் போகக் கூடாது என்பதே ஜன்சேவாவின் முக்கிய நோக்கமாகும்.
இஸ்லாமிய வங்கி (Islamic Banking) செயல்திட்டத்தில் பல வகைகள் உள்ளன. அவற்றுள், இந்த ஜன்சேவாவின் செயல்திட்டம் ‘முராபஹா’ வகையைச் சேர்ந்தது.
இன்னும் இலக்கை அடையவில்லை!
காயல்பட்டினத்தில் இதன் கிளை அமைந்துவிட்டது என்பதில் நாம் பெருமிதப்பட்டுக்கொண்டாலும், இதுவரை இந்த செயல்திட்டத்திற்கு 27 லட்சம் தொகை மட்டுமே பெறப்பட்டுள்ளது என்பது - காயல்பட்டினத்தைப் பொருத்த வரை ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவு அல்ல. இந்த ஊரின் தனவந்தர்கள் இருவர் நினைத்தாலே இத்தொகையைத் தந்துவிட இயலும். எல்லாவற்றுக்கும் தாராளமாக செலவழிக்கும் இந்த ஊர் தனவந்தர்கள், இந்த செயல்திட்டத்தின் உளத்தூய்மையான நோக்கத்தை உணர்ந்தவர்களாக அதிகளவில் பொருளாதாரத்தைத் தந்து, இந்த ஜன்சேவாவை வலிமைப்படுத்த முன்வர வேண்டும்.
வாணியம்பாடியில் சிறிய தொகையைக் கொண்டு துவங்கப்பட்ட ஜன்சேவா கிளை இன்று பெருந்தொகையுடன் வலிமை பெற்று விரிவடைந்துள்ளது என்பதை இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகிறேன். வாணியம்பாடி என்று சொல்லும்போது எனக்குள் ஒரு உரிமை ஒட்டிக்கொள்ளும். அதற்காக பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் கோபப்பட்டுக்கொள்ளக் கூடாது.
இஸ்லாமிய வங்கித் திட்டம்:
நம் நாட்டின் பொருளாதாரம் வலிமை பெற வேண்டுமானால், இங்கு இஸ்லாமிய வங்கி முறையை நடைமுறைப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். இக்கருத்தை, இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், நாடாளுமன்றத்தில் ஆற்றிய எனது கன்னிப் பேச்சிலேயே வலியுறுத்திக் கூறினேன்.
பெயர் பிடிக்காவிட்டால் தவிர்த்துக்கொள்ளுங்கள்!
“இஸ்லாம் என்ற சொல் கசப்பாக இருந்தால் விட்டு விடுங்கள்! ஏதேனும் ஒரு பெயரை வைத்துக்கொள்ளுங்கள்! ஆனால் இந்த செயல்திட்டத்தை கண்டிப்பாக கருத்தில் கொண்டு நிறைவேற்ற முன்வாருங்கள்!” என்று அப்போது நான் கூறினேன். இதைக்கேட்டு அனைவரும் சிரித்தனர்.
ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளிலெல்லாம் இஸ்லாமிய வங்கி முறை நடைமுறையில் உள்ளது.
வட்டி என்பது வன்கொடுமை. அதற்கு திருக்குர்ஆன் கூறுவதன் அடிப்படையில் செயல்படுவதே சரியான தீர்வாக அமையும். வட்டியை ஒழிக்கும் வகையில் இந்த நாட்டில் வலிமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
விரும்பும் காலம் விரைவில் வரும்:
பாலியல் வன்முறைக்கு இந்த நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டம் போதும் என்ற கருத்து பெரும்பாலோரிடத்தில் இருந்தது. ஆனால், டெல்லியில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்குள்ளாகி, உயிரிழந்த பிறகு அவசர சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் எதிர்த்தால், இன்னொரு கட்டத்தில் ஆதரிப்பர். இது காலத்தின் கட்டாயம். அந்த அடிப்படையில் வட்டிக்கு எதிரான சட்டங்களும் விரைவில் நடைமுறைக்கு வரும் என நம்பலாம்.
இருதயத்தில் நுழையவில்லை:
வட்டியில்லா பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, சில நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, அப்போதைய இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ரிசர்வ் வங்கி ஆளுநர் உள்ளிட்டவர்களையெல்லாம் நேரில் சந்தித்து, விளக்கமாகப் பேசினோம். அவர்கள் காதுகளுக்குள் நுழைந்த எங்கள் வாக்கியங்கள், அவர்களது கல்புக்குள் (இருதயத்துக்குள்) ஏனோ நுழையவேயில்லை. ப.சிதம்பரமும் அதை ஆர்வத்துடன் கேட்கவில்லை என பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகிறேன்.
2008ஆம் ஆண்டில், அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் தலைமையில், Committee In Financial Section Reforms என - நாட்டின் பொருளாதார சீரமைப்புக்காக ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டது. அந்த கமிட்டி பிரதமருக்கு அளித்த அறிக்கையில், வட்டியில்லாத வங்கி திட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என முக்கியமான பரிந்துரையை அளித்திருந்தது. அந்த கமிட்டியின் தலைவரை, அப்துர்ரக்கீப் ஸாஹிப் அவர்களுடன் இணைந்து சென்று சந்தித்தோம்.
வட்டியில்லா பொருளாதாரம் தொடர்பான அவரது பரிந்துரை குறித்து வினவியபோது, “அரசு இயந்திரம் ஒத்து வர வேண்டும்; அப்போதுதான் நடைமுறைப்படுத்த இயலும்” என்றார்.
சமுதாயத்தை ஏமாற்றாதீர்கள்!
சென்ற அரசு பெரும்பான்மை மக்களிடம் பெயரைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக திட்டமிட்டே இவற்றைப் புறக்கணித்துவிட்டதோ என்று கூறத் தோன்றுகிறது. கோடிக் கணக்கில் செலவு செய்து உருவாக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் அறிக்கை, கடந்த நாடாளுமன்றத்தில் விவாதத்திற்குக் கூட எடுத்துக்கொள்ளப்படாதது, அவர்களே நியமித்த குழு பரிந்துரைத்த பின்பும் வட்டியில்லாத பொருளாதாரத் திட்டத்தில் ஆர்வம் காண்பிக்காதது ஆகியவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இதைத் தவிர வேறொன்றும் சொல்ல எனக்குத் தோன்றவில்லை. “எங்கள் சமுதாயத்தை ஏமாற்றாதீர்கள்” என அப்போது நாங்கள் கண்டித்தோம்.
பாஜக அரசின் மீது நம்பிக்கை உள்ளது!
எனக்கென்னவோ, நடப்பு பாரதீய ஜனதா தலைமையிலான அரசு வட்டியில்லாத பொருளாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளதாகவே அதன் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. நாம் யாருக்கும் எதிரியல்ல. சிறுபான்மையினர் உரிமையை அழிக்கும் நினைப்போடு செயல்படும் எவரது நடவடிக்கைகளையும் எதிர்த்து நிற்பதே நம் பணி. ஆனால், அதே சாரார் சிறுபான்மையினர் உரிமையைப் பாதுகாக்கும் பணிகளைச் செய்தால், பாராட்டவும் நாம் தயங்க மாட்டோம்.
பாபரி மஸ்ஜிதை அது இருந்த இடத்தில் கட்டித் தருவோம் என்றும், அவரவர் மத வழிபாட்டு முறைகளுக்கு இந்த அரசு குறுக்கே வராது என்றும் பா.ஜ.க. அரசு சொல்லட்டும்! தெருவுக்குத் தெரு மேடை போட்டு பாராட்ட ஆயத்தமாக இருக்கிறோம்.
புதிய வியூகத்துடன் புதிய அரசை அணுகுவோம்:
கடந்த அரசோடு எங்கள் முயற்சிகள் நீர்த்துப் போய்விட்டதாக நாங்கள் கருதவில்லை. பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நம் பணி தொடரும். அந்த அடிப்படையில், புதிய வியூகத்துடன் நடப்பு பாஜக தலைமையிலான அரசையும் அணுகுவோம்.
இவற்றையெல்லாம் செய்வதால், இந்தியா நாளைக்கே இஸ்லாமிய அரசாக மாறிவிடும் என்றெல்லாம் சொல்வது மிகப்பெரிய கற்பனை.
அரிச்சுவடி கூட தெரியாதவர்கள்:
இஸ்லாமிய வங்கியை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய ஆடம் சின்ஹா என்பவர் தலைமையில் ஐவர் குழு ஒன்றை கடந்த அரசு நியமித்தது. இஸ்லாமிய வங்கி தொடர்பான அரிச்சுவடி கூட தெரியாதோ என்னவோ, “இஸ்லாமிய வங்கி இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட சாத்தியமில்லை” என அது அறிக்கையளித்திருக்கிறது.
லாபகரமான செயல்திட்டம்:
இந்த நாட்டில் இஸ்லாமிய வங்கி முறை என்பது நடைமுறைப்படுத்த சாத்தியமானது மட்டுமல்ல! பெரும் லாபம் தரக்கூடியதுமாகும். HSBC வங்கி, Standard Charted வங்கி ஆகியவற்றிலெல்லாம் Islamic Banking Cell உள்ளன என்ற தகவலைக் கொண்டே இதை உறுதி செய்துகொள்ளலாம். இது லாபகரமான செயல்திட்டம் என்பதை ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் நிரூபித்துள்ளன.
சோதனை அடிப்படையிலேனும் செய்ய முன்வாருங்கள்!
இஸ்லாமிய வங்கித் திட்டத்தை ஒரே கட்டமாகக் கூட இந்த நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டாம். ஏதாவது ஒரு மாவட்டத்தில், ஒரேயொரு வங்கியில் மட்டும் சோதனை அடிப்படையில் துவக்கமாக அதைச் செய்து பாருங்கள் என்றே நாங்கள் வலியுறுத்துகிறோம்.
உறங்கும் பணத்தை நாட்டுக்கு உதவச் செய்வோம்!
பயன்படுத்தப்படாத வங்கி வட்டிப் பணம் பல்லாயிரம் கோடி தொகை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறிதும் உதவாமல் உறங்கிக் கொண்டிருக்கிறது. கருப்புப் பணம் பற்றியெல்லாம் நாடாளுமன்றத்தில் பேசினோம். வெறுமனே குறிப்புகளை மட்டும் எடுத்துக்கொண்டனர்.
நடப்பு பாஜக அரசு திறந்த மனதுடன் இப்பிரச்சினையை அணுகி, நல்லதை நடைமுறைப்படுத்தும் என்று நம்புகிறோம். இந்த அரசுக்கு நம்பிக்கையூட்டுவதற்காக, எங்கெங்கெல்லாம் இஸ்லாமிய வங்கித் திட்டம் நடைமுறையிலுள்ளதோ, அங்கெல்லாம் அரசு பிரதிநிதிகளை அழைத்துச் செல்லவும் ஆயத்தமாக இருக்கிறோம்.
இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு காயல்பட்டினத்தில் வித்து:
இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு, காயல்பட்டினத்தில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டம் வித்திடட்டும்! இங்கு பேசப்பட்ட தகவல்களை ஒன்று கூட விடுபடாமல் உளவுத்துறை அரசின் காதுகளுக்குக் கொண்டு செல்ல அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
செவிடன் காதில் ஊதப்பட்ட சங்கு:
வட்டியில்லாத பொருளாதாரத் திட்டம், இஸ்லாமிய வங்கி செயல்திட்டம் குறித்து மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராக நான் 13 முறை நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறேன். இருந்தும் அனைத்துமே செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போனது.
ரூ. 1 கோடி இலக்கு:
காயல்பட்டினத்தில் இந்த ஜன்சேவா அமைப்பு துவங்கப்பட்டுள்ளதை நான் மனமார வரவேற்கிறேன். அதன் செயல்திட்டங்கள் சிறக்கவும், அனைத்து தரப்பு மக்களுக்கும் நிறைவான பலன்களைத் தரவும் வாழ்த்தி, துஆ செய்கிறேன்.
குறிப்பிட்ட கால அளவை நிர்ணயித்து, 1 கோடி ரூபாய் என இலக்கு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அதை அடையும் வரை தீவிரமாக முயற்சி செய்யுங்கள். உங்கள் முயற்சிகளுக்குத் தோள் கொடுக்கும் வகையில் நானும், பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களும் இந்த ஊரில் வீடு வீடாகச் சென்று விளக்கவும் ஆயத்தமாக உள்ளோம்.
நல்லவற்றை வரவேற்கப் பழகுவோம்!
அன்பானவர்களே! நல்ல செயல்திட்டத்தை யார் முன்னெடுத்தாலும் நாம் வரவேற்கப் பழகிக்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு, “அதை நடத்துவது யாரு?”, “அவங்க தொப்பி அணிந்திருப்பவர்களா?”, “விரல் அசைப்பவர்களா?” என்பன போன்ற வாதப்பிரதிவாதங்களை வளர்த்து, நம்மை நாமே அழிவிற்குக் கொண்டு செல்ல காரணமாகிவிட வேண்டாம் என அனைத்து தரப்பினரையும் அன்பொழுக வேண்டுகிறேன்.
தேர்தலில் வெற்றி - தோல்வி என்பது சகஜம். அது நம் சமூகப் பணிகளை ஒருபோதும் பாதிக்காது. அந்த வரிசையில் இந்தப் பணியும் 100 சதவிகிதம் அல்லாஹ்வுக்காக செய்யப்படும் பணி என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. அந்த வகையில், அதற்குத் துணை நிற்க வேண்டியது நம் யாவர் மீதும் கடமை.
இந்தியாவிலுள்ள ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கத்தின் 21 கிளைகளிலும் சிறந்த கிளை என்ற பெயரைப் பெற்று இந்த காயல்பட்டினம் கிளை சிறப்புற வாழ்த்திப் பிரார்த்தித்து, எனதுரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு, எம்.அப்துல் ரஹ்மான் பேசினார்.
ஜன்சேவா காயல்பட்டினம் கிளை நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
ஜன்சேவா குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 17:51 / 28.06.2014] |