DCW ஆலை நிர்வாகம் மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் எவற்றுடனும் இணைந்து, மருத்துவ முகாம்களோ, பொது நிகழ்ச்சிகளோ - எதையும் நடத்த வேண்டாம் என பொதுமக்களைக் கேட்டுக்கொண்டும், DCW ஆலையை நிரந்தரமாக மூடக் கோருவதென்றும், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA நடத்திய விளக்கப் பொதுக்கூட்டத்தில், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மான விபரங்கள் வருமாறு:-
DCW தொழிற்சாலையை மூடக் கோரி காயல்பட்டினத்தில் நடைபெற்ற கருப்புக்கொடி - மனித சங்கிலி போராட்டம் மற்றும் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகரின் அனைத்துப் பகுதி பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். விளக்கப் பொதுக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிறப்புரையாற்றினர். கூட்டத்தின் நிறைவில், KEPA துணைத்தலைவர் டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் தீர்மானங்களை முன்மொழிய, பொதுமக்கள் தக்பீர் முழக்கத்துடன் ஒரே குரலில் அவற்றை வழிமொழிந்தனர்.
ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தீர்மானம் 1 - அரசுத்துறை நடவடிக்கைகளால் மக்களுக்கு ஏமாற்றம்:
நவம்பர் 29, 2012 அன்று நடந்த மாபெரும் மக்கள் போராட்டத்தில் - நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளாத, மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளின் நடவடிக்கைகள் - காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது என்பதை, இக்கூட்டம் மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறது.
தீர்மானம் 2 - ஆலை விரிவாக்கத்திற்கான மத்திய அரசு அனுமதியை ரத்து செய்ய வேண்டுகோள்:
DCW தொழிற்சாலையின் உண்மைக்குப் புறம்பான ஆவணங்கள் அடிப்படையில் - மத்திய அரசு, இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி வழங்கிய ENVIRONMENTAL CLEARANCE என்ற சுற்றுச்சூழல் ஒப்புதலை - ரத்து செய்ய - மத்திய அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 3 - மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதியை ரத்து செய்ய மாநில அரசுக்கு வேண்டுகோள்:
DCW தொழிற்சாலையின் உண்மைக்குப் புறம்பான ஆவணங்கள் அடிப்படையில் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி வழங்கிய CONSENT TO ESTABLISH என்ற முதற்கட்ட ஒப்புதலை ரத்து செய்ய மாநில அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 4 - நீதிமன்ற மேற்பார்வையில் உடல் நல பாதிப்புகள் குறித்த ஆய்வு:
DCW தொழிற்சாலையால் - 56 ஆண்டுகளாக, காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு ஏற்பட்டுள்ள உடல் நலன் பாதிப்புகள் குறித்து, சுதந்திரமாக இயங்கக்கூடிய மருத்துவ அமைப்பு மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டும் என்றும், ஆய்வுகளின் செயல்பாடுகள் அனைத்தும் - நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெறவேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 5 - நீதிமன்ற மேற்பார்வையில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த ஆய்வு:
DCW தொழிற்சாலையால் - 56 ஆண்டுகளாக, இறைவனின் கொடையான சுற்றுசூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, சுதந்திரமாக இயங்கக்கூடிய அமைப்பு மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டும் என்றும், ஆய்வுகளின் செயல்பாடுகள் அனைத்தும் - நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெறவேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 6 - பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு:
DCW தொழிற்சாலையின் மாசுவினால் - உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இறந்தவர்கள் குடும்பத்தினருக்கும், மீன்பிடி, பனைத் தொழில், உப்பளத் தொழில் போன்றவற்றை இழந்தவர்களும், POLLUTER PAYS PRINCIPLE என்ற அடிப்படையில் - DCW தொழிற்சாலை நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று இக்கூட்டம் கோரிக்கை வைக்கிறது.
தீர்மானம் 7 - ஆலையுடன் இணைந்து பொது நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம்!
DCW தொழிற்சாலை நேரடியாகவோ, வேறு அமைப்புகளின் பெயரிலோ - ஏற்பாடு செய்யும் மருத்துவ முகாம் உள்ளிட்ட எந்த திட்டங்களுக்கும், ஆய்வுகளுக்கும், காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புற மக்கள் - அமைப்புகள் எவ்வித ஒத்துழைப்பும் வழங்க வேண்டாம் என இக்கூட்டம் கேட்டுகொள்கிறது.
தீர்மானம் 8 - ஆலையை நிரந்தரமாக மூட கோரிக்கை:
எந்த வித தங்குதடையுமின்றி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்திவரும் DCW தொழிற்சாலையின் செயலாலும், அதனைக் கண்காணிக்க வேண்டிய அரசு அமைப்புகளின் செயலற்ற தன்மையாலும் காயல்பட்டினம் மக்கள் - அரசு இயந்திரங்கள் மீது முழுமையாக நம்பிக்கை இழந்துள்ளனர். பாரம்பரியமிக்க காயல்பட்டினம் நகருக்கு நிரந்தர ஆபத்தான DCW தொழிற்சாலையை, நிரந்தரமாக மூடிட - மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கவும், ஜனநாயக வழியில், சட்டப்பூர்வமாக இறுதி வரை போராடவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
செய்தி தொடர்பாளர் - KEPA
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |