DCW தொழிற்சாலையை மூடக் கோரி காயல்பட்டினத்தில் நடைபெற்ற கருப்புக்கொடி - மனித சங்கிலி போராட்டம் மற்றும் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகரின் அனைத்துப் பகுதி பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். விளக்கப் பொதுக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிறப்புரையாற்றியுள்ளனர். விரிவான விபரம் வருமாறு:-
மனித சங்கலி போராட்டம்:
சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, மனித உயிர்களுக்குக் கேடு விளைவிக்கும் வகையில், காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையை மூடக் கோரி, மனித சங்கிலி போராட்டம், இம்மாதம் 20ஆம் நாள் வெள்ளிக்கிழமை 17.15 மணிக்குத் துவங்கியது. காயல்பட்டினம் தாயிம்பள்ளி சந்திப்பில் துவங்கி, கே.டி.எம். தெரு, பிரதான வீதி, தைக்கா பஜார் வழியாக பேருந்து நிலையம் வரை - நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த - அனைத்து மதங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இடைவெளியின்றி கைகோர்த்து நின்றனர். ஒரு மணி நேரம் நடைபெற்ற இப்போராட்டம் 18.15 மணிக்கு நிறைவுற்றது.
எதிர்ப்பு முழக்கம்:
மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும், கருப்பு பேட்ஜ்களை அணிந்து தமது கண்டனத்தை வெளிப்படுத்தியதுடன், பொதுமக்களின் எதிர்ப்புணர்வுகளை மதிக்காமல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயல்பட்டு வருவதைக் கண்டித்தும், டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அரசு அனுமதியை ரத்து செய்யக் கோரியும், பொதுமக்களின் அனைத்து அச்சங்களையும் முழுமையாகப் போக்கும் வரை தொழிற்சாலையை மூடக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.
முழக்க வாசகங்கள் வருமாறு:-
போராடுவோம்! போராடுவோம்!!
இறுதி வரை போராடுவோம்!!!
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க
சுறுசுறுப்புடன் போராடுவோம்!
எமது நகரின் சுற்றுச்சூழல்
எவராலும் மாசுபட
ஒருபோதும் அனுமதியோம்!
DCW தொழிற்சாலையே!
பொதுமக்களை பாதிக்காதே!!
DCW தொழிற்சாலையே!
சுற்றுச்சூழலை நாசமாக்காதே!!
DCW தொழிற்சாலையே!
கடலில் அமிலத்தைக் கலக்காதே!!
DCW தொழிற்சாலையே!
சுவாசிக்கும் காற்றை நாசமாக்காதே!!
DCW தொழிற்சாலையே!
நிலத்தடி நீரை நாசமாக்காதே!!
DCW தொழிற்சாலையே!
பெருநோய்களைப் பரப்பாதே!!
DCW தொழிற்சாலையே!
மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை
மதிக்காமல் செயல்பட
ஒருபோதும் விட மாட்டோம்!!
DCW தொழிற்சாலையே!
நீ கோடிகள் சம்பாதிக்க
நாங்கள் என்ன பலி கிடாக்களா?
DCW தொழிற்சாலையே!
ஊரை நாசப்படுத்திவிட்டு
நல்லவன் வேடம் போடாதே!!
மத்திய அரசே! மாநில அரசே!!
மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறும்
ஆலைகள் மீது நடவடிக்கை எடு!!
மாசு கட்டுப்பாட்டு வாரியமே!
சுற்றுச்சூழல் அமைச்சகமே!!
உன் குடும்பத்தைக் காப்பாற்ற
ஊரை அழிக்க முனையாதே!
ஏமாற்றாதே! ஏமாற்றாதே!!
பொதுமக்களை ஏமாற்றாதே!!!
மாசு கட்டுப்பாட்டு வாரியமே!
பொதுமக்களின் எதிர்ப்புணர்வுகளை
புதைகுழியில் போட்டுவிட்டு
பிச்சைக் காசு பெறுவதற்காக
சட்டத்தை மீறாதே!!
உங்கள் குடும்பம் சொகுசாய் வாழ
நாங்கள் மடிந்து சாவதா?
இயற்கை வளத்தைப் பாதுகாப்பதை விட
உனக்கு வேறு என்ன வேலை?
போயே போச்சு! போயே போச்சு!!
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின்
நேர்மை, உண்மை, நாணயத்தின் மீது
எங்களுக்கிருந்த நம்பிக்கையெல்லாம்
போயே போச்சு! போயே போச்சு!!
கோடிகளைக் கொள்ளையடிக்க
கோரிக்கைகளைக் குப்பையில் போட்ட
மாசு கட்டுப்பாட்டு வாரியமே!
நீ என்ன ஆலையின் பிரதிநிதியா?
மூடிடு மூடிடு
DCW தொழிற்சாலையை மூடிடு!!
போதும் போதும்
உயிர் பலிகள் போதும்!
போதும் போதும்
சுற்றுச்சூழல் மாசுபடுவது போதும்!
போதும் போதும்
மக்கள் நில அபகரிப்பு போதும்!
வேண்டாம் வேண்டாம்
விரிவாக்கம் வேண்டாம்!
வேண்டும் வேண்டும்
நஷ்ட ஈடு வேண்டும்!
ஊரின் அனைத்து தரப்பினரும் திரண்டிருந்த இந்த மனித சங்கிலி போராட்டத்தால் பேருந்து போக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விளக்கப் பொதுக்கூட்டம்:
அதே நாளன்று 19.00 மணிக்கு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் தலைமை தாங்கி, வரவேற்புரையாற்றினார். அதன் செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா - டி.சி.டபிள்யு. தொழிற்சாலை தொடர்பாக, அமைப்பின் சார்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
சிறப்புப் பேச்சாளர்கள் உரை:
இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல் போராளிகளான - பூவுலகின் நண்பர்கள் குழுமத்தைச் சேர்ந்த ஜி.சுந்தராஜன், பேராசிரியை பாத்திமா பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு, விழிப்புணர்வுரையாற்றினர்.
டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் மாசு கட்டுப்பாட்டு விதிமீறல்கள், பொதுமக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அந்த ஆலை செய்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசிய அவர்கள், இந்தியாவில் மற்ற மாநிலங்களிலெல்லாம் தடுக்கப்படும் அனைத்து ஆலைகளும் தமிழகத்தில் தாராளமாக நிறுவப்படுவதாகவும், அதற்கு தமிழக மக்களிடம் உள்ள விழிப்புணர்வின்மையே மிக முக்கிய காரணம் என்றும் அவர்கள் பேசினர்.
பொதுமக்கள் விழிப்புணர்வு பெற்றுவிடாதிருப்பதற்காக அரசு இயந்திரங்கள் மேற்கொண்டு வரும் சதி நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசிய அவர்கள், இப்போராட்டம் வெறுமனே காயல்பட்டினத்திற்கு மட்டுமானதல்ல; ஒட்டுமொத்த தமிழகத்தின் பாதுகாப்பிற்குமானது என்பதால், இந்த ஆலைக்கெதிரான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாங்களும், தாங்கள் சார்ந்த அமைப்புகளும் உறுதுணையாக இருக்கப் போவதாகவும் உறுதியளித்தனர்.
ஒருவருக்கொருவர் துணை நிற்க உறுதி!:
தொடர்ந்து பேசிய KEPA செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், டி.சி.டபிள்யு. ஆலைக்கெதிரான போராட்டங்கள் அனைத்திலும் துணை நிற்கப் போவதாக பேச்சாளர்கள் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்ததோடு, அண்மையில் - தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விஷவாயுக் கசிவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடியில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டனப் பேரணியில், KEPA அமைப்பின் சார்பிலும், காயல்பட்டினம் நகரின் அனைத்து அமைப்புகள் சார்பிலும் 25 பேர் வரை கலந்துகொண்ட தகவலைத் தெரிவித்து, மக்கள் நலன் காக்கும் இதுபோன்ற அம்சங்களில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்போம் என்று கூறினார்.
இறப்புச் சான்றிதழுக்காக பதிவு செய்வோர், இறப்பிற்கான காரணம் புற்றுநோய் எனில், “புற்றுநோயால் இறந்தார்” என தவறாமல் குறிப்பிடுமாறும், வேறு நோய்களால் இறந்திருப்பின் - அந்தந்த நோய்களை தயங்காமல் குறிப்பிடுமாறும், இவ்வாறு குறிப்பிடப்படும் தகவல்கள் அடிப்படையிலேயே அரசு ஆவணங்கள் அமையும் என்பதால், மக்கள் நலன் கருதி இதைத் தவறாமல் செய்யுமாறும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, சிறப்பு விருந்தினர்கள் இருவர் குறித்தும், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் துணைச் செயலாளர் எம்.எம்.முஜாஹித் அலீ, எம்.ஏ.முஹம்மத் இப்றாஹீம் ஆகியோர் அறிமுகவுரையாற்றினர்.
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் துணைத்தலைவர் டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் கூட்ட தீர்மானங்களை முன்மொழிய, அனைவரும் தக்பீர் முழக்கத்துடன் அதை வழிமொழிந்தனர். (தீர்மானம் தனிச்செய்தியாக வெளியிடப்படும்.)
எம்.ஏ.புகாரீ நன்றி கூற, புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்காகவும், அதன் காரணிகளைக் களைவதற்காகப் போராடுவோர் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்ட பின், ஸலவாத் - கஃப்பாராவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
ஏற்பாட்டுப் பணிகள்:
மனித சங்கிலி போராட்டம், விளக்கப் பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்குமான ஏற்பாடுகளை, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் துணைத்தலைவர்களான டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், என்.எஸ்.இ.மஹ்மூது, துணைச் செயலாளர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், பொருளாளர் ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், நிர்வாகிகளான தமிழன் முத்து இஸ்மாஈல், ஏ.எஸ்.புகாரீ, எம்.எல்.ஹாரூன் ரஷீத், பி.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ், யு.நவ்ஃபல், சாளை நவாஸ், எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
பங்கேற்ற பிரமுகர்கள்:
அனைத்து நிகழ்வுகளிலும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை துணைத்தலைவர் எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, அதன் ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, நகரப் பிரமுகர்களும் - ஜமாஅத் நிர்வாகிகளுமான ஆர்.எஸ்.அப்துல் காதிர், கே.எம்.தவ்லத், ஏ.கே.யாஸீன் மவ்லானா, எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, பல்லாக் லெப்பை, எஸ்.இப்னு ஸஊத், எஸ்.எம்.அமானுல்லாஹ், எல்.கே.கே.லெப்பைத்தம்பி, வி.பி.எம்.இக்பால், வாவு சித்தீக், வாவு எஸ்.அப்துல் கஃப்பார்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், அதன் காயல்பட்டினம் நகர நிர்வாகிகளான வாவு நாஸர், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், மன்னர் பாதுல் அஸ்ஹப், எம்.எச்.அப்துல் வாஹித், தமுமுக நிர்வாகிகளான ஜாஹிர் ஹுஸைன், முர்ஷித் முஹ்ஸின், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி ஷம்சுத்தீன்,
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் செயலாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், இக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.கே.முஹம்மத் முகைதீன், ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், மார்க்க அறிஞர்களான பந்தே நவாஸ் மிஸ்பாஹீ, முத்துச்சுடர் ஸாலிஹ் மஹ்ழரீ, எஸ்.ஐ.காதர், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் முஹம்மத் முஹ்யித்தீன்,
காக்கும் கரங்கள் நற்பணி மன்ற துணைத்தலைவர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர தலைவர் ஷம்சுத்தீன், நிர்வாகி ஜப்பான் சுலைமான், சாளை முஹம்மத் அப்துல் காதிர், அரிமா சங்க நகர நிர்வாகி ஏ.எல்.முஹம்மத் நிஸார், காயல்பட்டினம் நல அறக்கட்டளை (KWT) தலைவர் எஸ்.ஐ.அபூபக்கர், ஐ.ஐ.எம். நிர்வாகக் குழு உறுப்பினர்களான எம்.ஏ.அப்துல் ஜப்பார், எஸ்.எச்.லுத்ஃபீ, மதிமுக தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், ஜாவியாவைச் சேர்ந்த இப்றாஹீம் கலீல்,
ஜாவியா அரபிக்கல்லூரியின் பேராசிரியர்களான மவ்லவீ சுல்தான் ஸலாஹுத்தீன் மழாஹிரீ, மவ்லவீ ஹாஃபிழ் அப்பாஸ் காஷிஃபீ, ஊழல் எதிர்ப்பு இயக்க நகர தலைவர் பாளையம் அப்துர்ரஹ்மான், ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்களான கலாமீ யாஸர், ஏ.எஸ்.முஹ்யித்தீன், ஜெய்ப்பூர் காயல் நல மன்ற தலைவர் எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர், ரியாத் காயல் நற்பணி மன்ற முன்னாள் தலைவர் எம்.இ.எல்.நுஸ்கீ, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் முன்னாள் தலைவர் எம்.எம்.எஸ்.காழி அலாவுத்தீன்,
எழுத்தாளர் ஏ.லெப்பை ஸாஹிப், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் நகர நிர்வாகி கண்டி ஸிராஜ், வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் நிறுவனர் அலீ ஃபைஸல் உள்ளிட்ட பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
இரவு நடைபெற்ற விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேச அழைக்கப்பட்டிருந்த ஜி.சுந்தராஜன், மாலையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு தானாக முன்வந்து கலந்துகொண்டதுடன், ஊடகங்களுக்கு பேட்டியும் அளித்தார்.
கருப்புக் கொடி:
போராட்ட நாளான ஜூன் 20 அன்று, டி.சி.டபிள்யு. ஆலை விரிவாக்கத்திற்கு அரசு அனுமதியளிக்கப்பட்டதைக் கண்டித்து - காயல்பட்டினத்தின் முக்கிய வீதிகளில் ஜூன் 20ஆம் நாளன்று கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
மனித சங்கலி போராட்டம், விளக்கப் பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |