காயல்பட்டினம் நெய்னார் தெரு, ஆஸாத் தெரு, அப்பாபள்ளித் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில், IUDM திட்ட நிதி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் நகராட்சி பொதுநிதியைக் கொண்டு புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வந்தது.
இச்சாலைப் பணிகளில் முறைகேடுகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும், உயரதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்யுமாறும், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், நெய்னார் தெருவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, இதுவரை அமைக்கப்பட்டுள்ள சாலைப் பணிகளில், 2 லட்சத்து 12 ஆயிரத்து 321 ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிகிறது என சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஆணையத்திற்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆய்வறிக்கை அனுப்பியிருந்தார்.
இம்முறைகேட்டிற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில், சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஆணையத்திற்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, நெய்னார் தெரு சாலைப் பணி மட்டும் நிறைவேற்றி முடிக்கப்படாமல் அரைகுறையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இடைக்காலத்தில் அதிகாரிகளாலும், நெல்லை பொறியியல் கல்லூரி மாணவர் குழுவினராலும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், தற்போது நெய்னார் தெருவில் புதிய சாலை அமைக்கும் பணி நிறைவுபடுத்தப்பட்டுள்ளது. இம்மாத் 16ஆம் நாளன்று நடைபெற்ற சாலைப் பணிகளின்போது பதிவு செய்யப்பட்ட படக்காட்சிகள்:-
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
நெய்னார் தெரு சாலை அமைப்புப் பணி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |