சஊதிஅரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 79-வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை : -
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 79-வது செயற்குழு கூட்டம் கடந்த 06.06.2014 வெள்ளி இரவு மக்ரிபுக்குப் பின் ஜித்தா – ஷரஃபிய்யாவில் அமைந்துள்ள இம்பாலா கார்டன் உணவகத்தில் நடந்தேறியது. கூட்டதிற்கு சகோ. பொறியாளர் எஸ்.செய்யது பஷீர் தலைமை ஏற்க, சொளுக்கு எஸ்.எம்.ஐ.செய்யது முஹம்மது சாஹிபின் மகன் இளவல் அபூபக்கர் ஸித்திக் இறைமறை ஓத, சகோ.எம்.என்.முஹம்மது ஷமீம் அனைவரையும் வரவேற்க கூட்டம் ஆரம்பமானது.
மன்ற செயல்பாடுகள்:
விடுப்பில் தாயகம் சென்று வந்த மன்றச்செயலர் சகோ.சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான் நகரின் நடப்புகள், நகர் நல மன்றப்பணிகளின் செயல்பாடுகள், உலக காயல் நல மன்றங்களின் கூட்டமைப்பான “இக்ரஃ” மற்றும் “ஷிஃபா” வில் நடைபெற்ற செயற்குழுவில் கலந்து கொண்ட செய்திகள் மற்றும் ஏனைய நிகழ்வுகள் குறித்து விபரமாக எடுத்துச்சொன்னார்.
தொடர்ந்த மன்றச்செயலர் சகோ.எம்.ஏ.செய்யிது இப்ராஹீம் இம்மன்றம் இதுவரை வழங்கிய உதவிகள், செயல்பாடுகள் மற்றும் நிறைவேற்றிய பணிகள் குறித்த தெளிவான பார்வையை செய்தியாக தந்தார்.
நிதி நிலை:
மருத்துவத்திற்கான நிதி ஒதுக்கம், அன்றைய சந்தா மற்றும் நன்கொடைகளின் வரவு இருப்பு மற்றும் விடுப்பு விபரங்களை பட்டியலிட்டார் பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம்.
மருத்துவ உதவி:
“ஷிஃபா” அமைப்பு மூலம் மருத்துவ உதவி வேண்டிவந்த விண்ணப்பங்கள் வாசிக்கப்பட்டு மன்றத் துணைத்தலைவர் சகோ. மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாது பரிசீலனை மற்றும் பரிந்துரைக்குப்பின் எலும்பு முறிவு, மூளை, நீரழிவு, இருதயம் மற்றும் கண் அறுவை சிகிச்சை என ஐந்து பயனாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்க முடிவு செய்து, அவர்களின் பூரண உடல் நலத்திற்கும் இறையிடம் பிரார்த்திக்கப்பட்டது.
இக்ரஃ”, “ஷிஃபா” நிர்வாக செலவிற்கு நிதி உதவி:
உலக காயல் நல மன்றங்களின் கல்வி கூட்டமைப்பான “இக்ரஃ” மற்றும் மருத்துவ கூட்டமைப்பான “ஷிஃபா” ஆகிய அமைப்பிற்கு ஓராண்டு நிர்வாக செலவிற்கு தலா ரூபாய் 15,000/= வீதம் மொத்தம் ரூபாய் 30,000/= வழங்கிட முடிவு செய்யப்பட்டது.
இமாம், முஅத்தினுக்கு சிறப்பு நிதி உதவி:
தாய்லாந்து காயல் நல மன்றத்தின் முயற்சியில் நமதூர் இறைஇல்லங்களில் பணியாற்றும் இமாம் மற்றும் முஅத்தினுக்கு ரமலான் மாத சிறப்பு நிதி உதவி அளிப்பு ரமளானில் நடந்து வருகிறது. அந்நிகழ்வில் நம் மன்றம் சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு சற்று கூடுதலாக நிதி வழங்கிட முடிவு செய்துள்ளது.
விழிப்புணர்வு முகாம்:
மருத்துவம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மூலம் நடத்தலாமென்றும், அதில் கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தி சிறப்பு மருத்துவர் மூலம் நம் நகர் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற உரிய ஆலோசனைகளையும், சீரிய கருத்துக்களையும் மன்ற உறுப்பினர்கள் எடுத்துரைத்தார்கள்.
தீர்மானங்கள்:
1 – உலக காயல் நல மன்றங்களின் கல்வி கூட்டமைப்பான “இக்ரஃ” கல்வி சங்கத்திற்கு சுழற்சி முறையில் இவ்வாண்டிற்கான தலைமைக்கு பொறுப்பேற்றிருக்கும் ரியாத் காயல் நல மன்றத் தலைவர் சகோ.ஷெய்க் தாவூது அவர்களுக்கு இம்மன்றம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
2 - இவ்வாண்டு நடைபெற்ற பத்து மற்றும் பனிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று, தான் பயின்ற பள்ளிக்கும், பிறந்த ஊருக்கும் நற்பெயர் பெற்றுத்தந்த மாணவ, மாணவிகளையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த நிர்வாகம் மற்றும் ஆசிரியப்பெருந்தகைகளையும், அவர்களை கண்போல் கண்காணித்து உயரிய ஊக்கமளித்த பெற்றோர்களையும் இம்மன்றம் மனதார வாழ்த்தி பாராட்டுகிறது.
3 - எதிர்வரும் நோன்புப்பெருநாள் விடுமுறையில் அல்லது டிசம்பர் மாத இறுதியில் இன்ஷாஅல்லாஹ் நம்நகரில் மருத்துவ மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாமை நடத்த இம்மன்றம் முடிவெடுத்துள்ளது.
4 - மன்றத்தின் 80-வது செயற்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 11.07.2014 வெள்ளி மாலை புனித ரமலான் நோன்பு இஃப்தார் நிகழ்வோடு நடாத்திட முடிவு செய்யப்பட்டது.
சகோ.ஏ.எம்.செய்யது அஹ்மது நன்றி நவில சகோ.எஸ்.எஸ்.ஜாபர் சாதிக் துஆ கஃப்பாரா ஓதிட செயற்குழு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!
இந்நிகழ்வின் இறுதியில் சகோ.பொறியாளர் எஸ்.செய்யது பஷீர் அனுசரணையுடன் இரவு உணவு பரிமாறப்பட்டது.
தகவல்:
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
20.06.2014
|