காயல்பட்டணம்.காம் இணையதளத்தை நிர்வகித்தும், காயல்பட்டினம் நகரில் பல்வேறு கல்விப் பணிகளைச் செய்தும் வருகின்ற தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்பின் 6 அறங்காவலர்களுள் ஒருவரான - காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவைச் சேர்ந்த எம்.டி.ஷகீல் ரஹ்மான், இம்மாதம் 19ஆம் நாள் வியாழக்கிழமையன்று அதிகாலையில், சஊதி அரபிய்யா ஜித்தாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 45.
ஜித்தாவிலுள்ள ருவைஸ் பள்ளியில் மறுநாள் (ஜூன் 20) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின், ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அப்பள்ளியின் மையாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நல்லடக்கம் நிறைவுற்ற பின்னர், மறைந்தவருக்காக இறைப்பிரார்த்தனை செய்யப்பட்டது. எஸ்.எஸ்.ஜாஃபர் ஸாதிக் துஆ இறைஞ்சினார்.
பின்னர், மறைந்தவரின் நற்பண்புகள் மற்றும் சேவைகளை நினைவுகூர்ந்து, ஜித்தா காயல் நற்பணி மன்ற செயலாளர் எம்.ஏ.செய்யித் இப்றாஹீம் உரையாற்றினார்.
மறைந்த ஷக்கீல் ரஹ்மான், தன் வாழ்நாளில் யாருக்கேனும் கடன் வைத்திருப்பின் குடும்பத்தாரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறும், அவருக்கு யாரேனும் கொடுக்க வேண்டியதிருப்பின் குடும்பத்தாரிடம் அளிக்குமாறும், குடும்பத்தார் சார்பில் ஏ.எம்.செய்யித் அஹ்மத் அறிவிப்புச் செய்தார்.
நல்லடக்க நிகழ்வுகளில், ஜித்தா - மக்கா மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பணியாற்றும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.
நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகளில் துவங்கி - நல்லடக்கம் நிறைவுறும் வரை, மறைந்த ஷகீல் குடும்பத்தினர், அவர் பணியாற்றிய நிறுவன அங்கத்தினர், இ.டி.ஏ. நிறுவன அங்கத்தினர், ஜித்தா காயல் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர் ஆகியோர் அனைத்து ஏற்பாடுகளையும் இணைந்து செய்திருந்தனர்.
ஜித்தாவிலிருந்து...
தகவல்:
M.W.ஹாமித் ரிஃபாய்
படங்கள்:
Y.M.முஹம்மத் ஸாலிஹ்
[குடும்பத்தார் வேண்டுகோளுக்கிணங்க ஒரு படம் தவிர்க்கப்பட்டுள்ளது @ 22:59 / 27.06.2014] |