காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை முன்னாள் தலைவர் மற்றும் நடப்பு கவுரவ தலைவரும், காயல்பட்டினம் நாட்டாண்மை முஸ்லிம் முத்துச்சாவடி பொருளாளரும், நெல்லை முஸ்லிம் அநாதை நிலையத்தின் (MOC) முன்னாள் துணைத்தலைவரும், ‘மரைக்கார் இன்டஸ்ட்ரீஸ்’ எனும் பெயரில் - கோல்கத்தா, சென்னை, தூத்துக்குடி நகரங்களில் தொழிற்சாலை நடத்தி – பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கியவருமான - காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹாஜி எம்.எஸ்.எம்.முஹம்மத் பாஜுல் அஸ்ஹப் என்ற பாஜுல் அஸ்ஹப் ஹாஜியார், இம்மாதம் 16ஆம் நாளன்று 15.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93. அன்னாரின் ஜனாஸா, மறுநாளன்று காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறைவை முன்னிட்டு, ஐக்கிய அரபு அமீரகம் - துபை நகரில் ஙாயிப் ஜனாஸா தொழுகையும், அதன் தொடர்ச்சியாக இரங்கல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஙாயிப் ஜனாஸா தொழுகையை, அபூதபீ காயல் நல மன்றத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ வழிநடத்தினார். பின்னர் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தின் துவக்கமாக, கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு, மறைந்த ஹாஜி எம்.எஸ்.எம்.முஹம்மத் பாஜுல் அஸ்ஹப் அவர்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது. பின்னர், அன்னாரின் சேவைகளை நினைவுகூர்ந்து, மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.சுலைமான் லெப்பை மஹ்ழரீ இரங்கல் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிகளில், DNSM Timber Trading LLC உரிமையாளர் ரமீஜ் எஸ்.தைக்கா உட்பட, அமீரகம் வாழ் காயலர்கள் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
பிரபு முஹம்மத் முஸ்தஃபா
பிரபு மாஹிர் மவ்லானா
(மறைந்த பாஜுல் அஸ்ஹப் ஹாஜியின் பேரர்கள்) |