ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் மார்க்க விழாக்கள் இன்று அதிகாலையில் மாணவர் முதற்கட்ட நகர்வலத்துடன் துவங்கியுள்ளது. விபரம் வருமாறு:-
பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு மார்க்க அடிப்படைக் கல்வியைப் பயிற்றுவிக்கவும், திருமறை குர்ஆனை மனனம் செய்விக்கவும், காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் கட்டிடத்தில் இயங்கி வரும் நிறுவனம் அல்மத்ரஸத்துல் ஹாமிதிய்யா.
இக்கல்வி நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்க்க விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு விழாக்கள், இம்மாதம் 21, 22, 23 நாட்களில் (சனி, ஞாயிறு, திங்கள்) நடைபெறுகின்றன. இதுகுறித்த விளக்கப் பிரசுரம்:-
திட்டமிட்ட படி, ஹாமிதிய்யா மார்க்க விழாக்கள் இன்று அதிகாலை 06.00 மணியளவில், மாணவர் முதற்கட்ட நகர்வலத்துடன் துவங்கியது. நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியை, ஹாஃபிழ் பி.ஏ.முஹம்மத் உக்காஷா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் இசட்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் இறைமறை குர்ஆன் வசனங்களை கிராஅத்தாக ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் வரவேற்புரையாற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற மத்ரஸாவின் கொடியேற்ற நிகழ்ச்சியில், இவ்வமர்விற்குத் தலைமை தாங்கிய ஹாஜி ஒய்.எஸ்.முஹம்மத் உமர் ஃபாரூக் கொடியேற்ற, உறுதிமொழி முன்மொழியப்பட்டு, அனைத்து மாணவர்களாலும் வழிமொழியப்பட்டது.
ஹாஃபிழ் எம்.ஐ.கே.செய்யித் அபூதாஹிர் வர்ணனையுடன் மாணவர் அணிவகுப்பு மற்றும் உடற்பயிற்சி நடைபெற்றது.
ஹாஃபிழ் ஊண்டி செய்யித் முஹம்மத் ஸாலிஹ் நன்றி கூற, காயல்பட்டினம் கடைப்பள்ளி இமாம் செய்யித் முஹம்மத் புகாரீ தங்ஙள் துஆவுடன் மேடை நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. பின்னர், நிகழ்ச்சித் தலைவர் பச்சைக் கொடியசைத்து, மாணவர் முதற்கட்ட நகர்வலத்தைத் துவக்கி வைத்தார்.
காயல்பட்டினம் முத்துவாப்பா தைக்கா தெரு, ஸீ-கஸ்டம்ஸ் சாலை, சித்தன் தெரு, நெய்னார் தெரு, சதுக்கைத் தெரு உள்ளிட்ட வழித்தடங்களில் மாணவர் நகர்வலம் சென்று திரும்பினர். ஆங்காங்கே, மத்ரஸாவின் முன்னாள் மாணவர்கள் - அபிமானிகளின் இல்லத்தார் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இன்று காலை முதல் மாணவர் பல்சுவைப் போட்டிகள் நடைபெறவுள்ளன. முன்னதாக, இம்மாதம் 15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று முன்னோடியாக சில போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் சார்பில் கடந்தாண்டு (2013) நடத்தப்பட்ட மார்க்க விழாக்களின் துவக்க நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |