காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில், உலக மனநல நாள் - இம்மாதம் 10ஆம் நாளன்று கொண்டாடப்பட்டது.
துளிர் செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை தலைமை தாங்கினார். தன்னார்வலர் எம்.என்.சுலைமான் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
துளிர் பள்ளி ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஸான் துளிர் பற்றிய அறிமுகம், மனநலக் குறிப்புகள் ஆகிய அம்சங்களை உள்ளடக்கி துவக்கவுரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம்:
உலக அளவில் சுமார் 5 கோடி மக்கள் மனச்சிதைவு பாதிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் 70 லட்சம் பேர் அடங்கும். இதில் 10 சதவீதம் பேர் தற்கொலையால் இறக்கின்றனர்.
மனநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் குறைவானோர்தான் மருத்துவ உதவியை நாடுகின்றனர். ஆதரவின்றி தெருக்களில் திரியும் பெரும்பாலான மனநோயாளிகள் மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோர்தான். சாதகமற்ற வாழ்கைச் சூழல், மன - உடல் நீதியான பாதிப்பு போதைப் பழக்கங்கள், கலாச்சார மாற்றங்கள் போன்றவை மரபணுக்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இந்த மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களே மனச்சிதைவு நோய் ஏற்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
தற்கொலையில் இறப்போர் எண்ணிக்கை, கொலைகள் மற்றும் போர்களில் மூலம் உயிர் இழப்பவர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. குறிப்பாக 15 முதல் 19 வயதுக்குட்பட்ட இளைய சமூகத்தினர் 1 லட்சம் பேர் ஒவ்வோர் ஆண்டும் தற்கொலை செய்கின்றனர். கடந்த ஆண்டுகளில் தற்கொலை நிகழ்வுகள் 10 சதவீதம் அதிகரித்துள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
துளிர் மறுவாழ்வு திட்டப் பணிகள் தலைவர் அ.வஹீதா, வழக்கறிஞர்கள் எட்வர்ட், சாதிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து, வாழ்த்துரையாற்றினர்.
வழக்கறிஞர் இ.சாதிராஜ் உரைச் சுருக்கம்:
உலக மனநல நாளான இன்று இந்த துளிர் பள்ளியின் மனநல நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்நிறுவனம் இந்த வட்டாரத்தில் உள்ள இயாலாநிலைக் குழந்தைகள் பயன்பெறும் வகையில் இந்தப் பள்ளியை எங்கள் நண்பர் வழக்கறிஞர் எச்.எம்.அஹமது நிறுவி, அதன் தலைவராக இருந்து நடத்தி வருவதையெண்ணி, வழக்கறிஞர்களாகிய நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
வழக்கறிஞர் எட்வர்ட் உரைச் சுருக்கம்:
மனச்சிதைவு நோய் மருந்துகளால் குணப்படுத்தக் கூடியது. ஆரம்ப கட்டத்திலேயே நோய் கண்டறியப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டால் எளிதில் கட்டுப்படுத்தலாம். ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மருந்துவமனைகள், அரசு தலைமை மருந்துவமனைகளில் மனநல மருந்துவர் மற்றும் சமூக நலப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தூத்துக்குடி மாவட்ட உரிமையியல் நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான கு.விவேகானந்தா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம்:
நான் பதவிக்கு வந்த நான்கு ஆண்டுகளில் மனநல நாளில் பல இடங்களுக்கு சென்றுள்ளேன். இது போன்ற இல்லங்களுக்கும் சென்றிருக்கிறேன். ஆனால் இந்த மாற்றுத்திறன் பள்ளிக்கு வந்தது மனத்திற்கு இதமான ஒருவகை அமைதியைத் தருகிறது.
சமூகத் தொண்டு ஆற்றுவதனால் மட்டுமே மனநலம் காக்க முடியும். இந்தக் குழந்தைகளுக்கு யாரையும் ஏமாற்ற தெரியாது யாருக்கும் துரோகம் செய்ய மாட்டார்கள். யாரையும் பழிவாங்கும் எண்ணம் இருக்காது. சில இயலாமைகள் இருந்தாலும் நம்மிடம் இல்லாத சிறப்பு குணங்கள் இக்குழந்தைகளிடம் நிறைய உண்டு.
இந்த தெய்வக் குழந்தைகளுக்கு நம்மால் முடிந்த சேவையைச் செய்ய வேண்டும். குழந்தைகளின் பெற்றோருக்கு “எங்கள் காலத்திற்கு பிறகு இவரை யார் கவனிப்பார்கள்?” என்ற கவலை இருக்கும். இந்தச் சூழ்நிலையில் குழந்தைகளின் உடன் பிறந்த உறவுகளை அழைத்து, இக்குழந்தைகளை ஒதுக்காமல் எப்படி கவனித்துக் கொள்ளவேண்டும் என்பது குறித்து கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். இது போன்ற குழந்தைகளின் நலனுக்காக தொண்டு புரியும் அனைவருக்கும் இறைவன் என்றும் துணை இருந்து உதவி புரிவார்.
இவ்வாறு அவர் பேசியதோடு, பள்ளியின் சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி, வினாடி-வினா நிகழ்ச்சிகள் மனதைக் கவர்வனவாக இருந்ததாகவும், இக்குழந்தைகளுக்குள்ளும் இத்தனை திறமைகள் இருப்பதைப் பார்த்து தான் வியப்பும், பெருமிதமும் அடைந்துள்ளதாகவும் கூறினார்.
மேடையில் அங்கம் வகித்த அனைவருக்கும் துளிர் நிர்வாகத்தின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது. நிறைவில், நிகழ்ச்சி தலைவர் எம்.எல்.ஷேக்னா லெப்பை பேசினார். நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
தகவல் & படங்கள்:
சித்தி ரம்ஸான்
ஒருங்கிணைப்பாளர்
துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி
துளிர் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |