அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 120 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
அரசு புறம்போக்கு நிலங்களில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்யும்பட்சத்தில், அதனை அகற்றக் கோரும் மனுக்களை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் தாக்கல் செய்யலாம்.
இந்த மனுக்களைப் பெற்றுக்கொண்ட பின்பு மனுவில் குறிப்பிடும் அரசு புறம்போக்கு நிலத்தில், ஆக்கிரமிப்பு உள்ளதா, இல்லையா என முடிவு செய்திட வருவாய் ஆய்வாளர், நில அளவர் மூலம் தணிக்கை செய்யப்படும். ஆக்கிரமிப்பு இருக்கும்பட்சத்தில் ஆக்கிரமிப்பு சட்டப்பிரிவு 7இன் படி ஆக்கிரமிப்புதாரர்களுக்கு ‘காரணம் கோரும் அறிவிப்பு’ சம்பந்தப்பட்ட துறையினரால் வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து மேற்படி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி சட்டப்பிரிவுகளின் படி தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆக்கிரமிப்பு அகற்றக் கோரிய மனுவிற்கு, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, அதன் விபரத்தை - மனுதாரருக்கு - மனு பெற்ற 60 தினங்களுக்குள், எடுத்த நடவடிக்கை விபரத்தினை வட்டாட்சியர் தெரிவிக்க வேண்டும்.
வட்டாட்சியர் தெரிவிக்கும் பதில் திருப்தி இல்லையென்றாலும் (அல்லது) எடுத்த நடவடிக்கை திருப்தி இல்லையென்றாலும் (அல்லது) உரிய நாட்களுக்குள் பதில் கொடுக்கவில்லையென்றாலும், கோட்ட அளவில் செயல்படும் வருவாய் கோட்டாட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் நில அளவைத் துணை ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய மேல்முறையிட்டுக் குழுவிடம் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு மனுக்களை சார் ஆட்சியர் / கோட்டாட்சியர்களிடம் அளிக்க வேண்டும்.
மேற்படி மேல்முறையீட்டு மனுவினை பெற்ற பின்பு கோட்ட அளவிலான குழு மாதம் ஒருமுறை கூடி, ஆக்கிரமிப்பு அகற்றக் கோரும் மேல்முறையீட்டு மனுக்களை தனித்தனியாக விசாரணைக்கு எடுத்து, மனுதாரர் தரப்பு நியாயங்களை தெரிவிக்க அவருக்கு வாய்ப்பு அளித்து, தேவைப்படும் பட்சத்தில் இடத்தினை தணிக்கை செய்தும், மேல்முறையீட்டுக் குழுவின் முடிவினை மேல்முறையீடு வரப்பெற்ற 30 தினங்களுக்குள் மனுதாரருக்குப் பதிலாக தெரிவிக்கவேண்டும்.
மேற்படி மேல்முறையீட்டுக் குழு வழங்கிய பதில் (அல்லது) நடவடிக்கை திருப்தி அளிக்காதபட்சத்திலும் (அல்லது) உரிய நாட்களுக்குள் பதில் வழங்காவிட்டாலும், மாவட்ட அளவில் மாவட்ட வருவாய் அலுவலர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் உதவி இயக்குநர் (நில அளவை) ஆகியோர் அடங்கிய சீராய்வுக் குழுவிடம் சீராய்வு மனுத்தாக்கல் செய்யலாம். மேற்படி சீராய்வு குழு மாதம் ஒருமுறை சீராய்வு மனுவின் பெயரில் உரிய விசாரணை செய்து சீராய்வு மனுப் பெற்ற 30 தினங்களுக்குள் சீராய்வுக் குழுவால் பதில் வழங்கப்படும்.
மேற்படி ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பாக புகார் மனுக்கள் மற்றும் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கோட்ட / மாவட்ட அளவிலான குழு வழங்கிய பதில்களை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் இயங்கும் மாவட்ட அளவிலான ஆக்கிரமிப்பு அகற்றுதல் குழுவின் பரிசீலனைக்கு வைக்கப்படும்.
எனவே அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு இருப்பின், பொதுமக்கள் அதனை அகற்றிட கோரி மனுக்களை வருவாய் வட்டாட்சியரிடம் தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |