காயல்பட்டினத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நகரின் நிலத்தடி நீர்மட்டம் தரையளவுக்கு உயர்ந்துள்ளது. நடப்பு மழைக்காலத்தில், நகரில் பல பள்ளிவாசல்களில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் பெரும் அவதியுள்ளது.
இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்வதற்காக மண்ணறை தோண்ட முற்பட்டால், தரையளவில் நீர்மட்டம் இருந்து வருகிற காரணத்தால் தோண்ட இயலவில்லை. எனவே, தரைக்கும் மேல் இரண்டடி அளவுக்கு மணல் மேட்டை அமைத்து, அதில் ஓரடி அளவுக்கு மண்ணறை தோண்டப்பட்டு, ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும் நிலையுள்ளது.
காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியைப் பொருத்த வரை, அது தாழ்வான பகுதி என்பதால் - சாதாரண மழைக்காலங்களிலேயே அங்குள்ள மையவாடியில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையிருக்க, நடப்பு தொடர்கனமழை காரணமாக, மையவாடியின் பெரும்பகுதி நீண்ட நாட்களாக பெருமளவில் தண்ணீர் தேங்கிய நிலையில் காணப்படுகிறது.
இவ்வாறான காலகட்டங்களில் யாரேனும் மரணித்து, அடக்கம் செய்வதில் அவதி ஏற்படுவதைத் தவிர்த்திடுவதற்காக, அப்பள்ளியின் மையவாடியில் ஒரு பகுதியை மேடாக்கி, இதுபோன்ற அவசர காலகட்டங்களில் மட்டும் ஜனாஸா நல்லடக்கம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வகைக்காக தாராள நிதியுதவி செய்திடுமாறு, அப்பள்ளி மஹல்லா ஜமாஅத்தினருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில், அறிவிப்புப் பலகை மற்றும் கரும்பலகையில் பின்வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது:-
மையவாடிகளை மணல் மேடாக்க - அந்தந்த மஹல்லா ஜமாஅத் நிர்வாகத்தின் முறையான அனுமதியைப் பெற்று உதவிடுமாறு, காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, சில நாட்களுக்கு முன் குத்பா பெரிய பள்ளியில் பொதுமக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குருவித்துறைப் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினத்தில் மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |