காயல்பட்டினத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நகரின் நிலத்தடி நீர்மட்டம் தரையளவுக்கு உயர்ந்துள்ளது. நடப்பு மழைக்காலத்தில், நகரில் பல பள்ளிவாசல்களில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் பெரும் அவதியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 23ஆம் நாளன்று காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளியில் - இறந்த ஒருவரின் உடலை நல்லடக்கம் செய்வதற்காக மண்ணறை தோண்ட முற்பட்டபோது, அக்காலகட்டத்தில் தொடர்மழை இடைவிடாது பெய்துவந்த நிலையில், தரையளவில் நீர்மட்டம் இருந்த காரணத்தால் தோண்ட இயலவில்லை.
பின்னர், தரைக்கும் மேல் இரண்டடி அளவுக்கு மணல் மேட்டை அமைத்து, அதில் ஓரடி அளவுக்கு மண்ணறை தோண்டப்பட்டு, ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
பின்னர், இறந்தவரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறும் நிகழ்ச்சியின்போது - காயல்பட்டினத்தில் மரணித்தவர்களின் உடலைக் குளிப்பாட்டி அடக்கம் செய்வது வரை தன்னார்வத்துடன் செய்து வரும் - காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை பின்வருமாறு பேசினார்:-
அன்பார்ந்த சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
நமதூரில் மழைக்காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துவிடுவதால், பெரும்பாலான பள்ளிவாசல்களில் ஜனாஸாக்களை அடக்குவதில் பெரும் அவதி உள்ளது. தற்போது பெய்து வரும் தொடர்மழையால், நகரின் எந்தப் பள்ளிவாசலிலும் ஜனாஸாவை அடக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
நகரின் அனைத்து தெருக்களிலும் சாலைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் உயர்த்தி போடப்பட்டு வந்ததால், பள்ளிவாசல்களின் மையவாடிகள் மிகவும் தாழ்ந்து காணப்படுகிறது. இதனால், சாதாரணமாக மழை பெய்தாலும் மையவாடிகளில் ஜனாஸாவை அடக்க முடிவதில்லை. இதுபோன்ற தொடர் கனமழைக் காலங்களில், ஒரு மஹல்லாவில் ஜனாஸாவை அடக்க இயலாமல், மேட்டுப் பகுதியிலுள்ள வேறு மஹல்லாவிலுள்ள மையவாடிக்குச் சென்று அடக்கும் நிலையுள்ளது.
இக்குறையைப் போக்க வேண்டியது நம் ஒவ்வொருவர் மீதும் கட்டாயக் கடமை. நாம் இந்த உலகில் குடியிருக்கும் வீடுகளுக்கு சிறிய பாதிப்பு என்றாலும் கூட பல ஆயிரங்களைச் செலவழித்து உடனடியாகச் சரிசெய்து விடுகிறோம். ஆனால், மறுமையில் நாம் எழுப்பப்படும் வரை தங்கியிருக்க வேண்டிய இந்த மையவாடிகளில் இத்தனை அவதிகளைக் கண்ணால் கண்ட பிறகும் அதுபற்றி அக்கறையற்று இருக்கிறோம்.
எனவே, கடமையெனக் கருதி - உங்கள் மஹல்லா ஜமாஅத் நிர்வாகத்தின் முறையான அனுமதியைப் பெற்று, தயவுசெய்து உங்களாலியன்ற அளவுக்கு மணல் வழங்குமாறும், தனிப்பட்ட முறையில் செய்ய இயலாதவர்களும் - குழுவாக இணைந்து மணல் வழங்கி, மையவாடிகளை மேடாக்கிட உதவிடுமாறும் உங்கள் யாவரையும் பணிவுடன் வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். அதன் தொடர்ச்சியாக, நகரின் சில பள்ளிவாசல்களில் சிலர் தாமாக முன்வந்து மணலையோ அல்லது மணலுக்குத் தேவையான பணத்தையோ கொடுத்து வருகின்றனர்.
படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
காயல்பட்டினத்தில் மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |