டிசிடபிள்யூ தொழிற்சாலைக்கு எதிராக விஷம பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆறுமுகநேரி நகர் நல மன்றம் மற்றும் வட்டார தொழில் வளர்ச்சி பாதுகாப்பு சங்க தலைவர் பூபால்ராஜன், செயலாளர் சண்முக வெங்கடேசன், பொருளாளர் காந்தி, பாதுகாப்பு சங்கம் சற்குரு மற்றும் விவசாயிகள் சிலர் ஆட்சியரிடம் அளித்த மனு:
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி மற்றும் அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்கள் விவசாய மற்றும் உப்பள தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். அவர்களது வாழ்க்கைத் தரம் முன்னேற வேண்டும், இந்த பகுதி வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 1959ல் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் கோசல்ராம், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோரின் முயற்சியால் அன்றைய முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் டிசிடபிள்யூ தொழிற்சாலையை தொடங்கி வைத்தார்.
அந்த தொழிற்சாலை தொடங்கி 55 ஆண்டுகளில், சுற்றுவட்டார பகுதி மக்கள் வேலைவாய்ப்பு மற்றும் பொருளதார வளர்ச்சி அடைந்துள்ளனர். அந்த தொழிற்சாலை சார்பில் காயல்பட்டினம் மீனவ மக்களுக்கு சமுதாய கூடம், விவசாய சங்கங்கள் மூலம் வடிகால் தூர்வாறும் பணி, மழை காலத்தில் உதவி, சிறு உப்பு உற்பத்தியாளர்களிகளிடம் உப்பு கொள்முதல் போன்ற பல வகைகளில் இந்நிறுவனம் உதவி செய்து வருகிறது.
ஆனால் சமீபகாலமாக காயல்பட்டினம் சுற்றுசூழல் பாதுகாப்பு என்ற பெயரில் சிலர் இந்த தொழிற்சாலைக்கு எதிராக பொய்ப் பிரச்சாரம் செய்து, ஆலையை மூடவேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். வெளிநாட்டினரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்து உள்நாட்டில் இயங்கி வரும் தொழிற்சாலைக்கு எதிராக விஷம பிரச்சாரத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்களின் போக்கு சுற்றுவட்டார மக்களிடம் பகைமை உணர்வை எற்படுத்துகிறது. அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுவட்டார மக்களின் வாழ்வைத் தரம் உயர்வதற்கு உறுதுனையாக இருக்கும் டிசிடபிள்யூ தொழிற்சாலைக்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
www.tutyonline.com
|