காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் இயங்கி வரும் மக்தப் மக்தூமிய்யா, ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளியில் இயங்கி வரும் மக்தப் ஹாஃபிழ் அமீர் ஆகிய நிறுவனங்களில் பயிலும் தீனிய்யாத் மக்தப் மாணவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்ச்சி, இம்மாதம் 13ஆம் நாள் சனிக்கிழமை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் துவங்கி, காலை 07.30 மணி வரை, மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நடைபெற்றது.
மக்தப் மக்தூமிய்யா மாணவர் பீ.எஸ்.முஹம்மத் லெப்பை கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். தொடர்ந்து இறைவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
மக்தப் மக்தூமிய்யாவின் முதல்வரும், தமிழ்நாடு தென்மண்டல பொறுப்பாளருமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.முஹம்மத் அபூபக்கர் ஷாதுலீ ஃபாஸீ, மக்தப் மக்தூமிய்யாவின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களான மக்கீ நூஹுத்தம்பி, ‘செம்பருத்தி’ இப்றாஹீம், மக்தப் ஹாஃபிழ் அமீர் ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச்.அப்துர்ராஸிக், அதன் ஆசிரியர் மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ ஆகியோர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு, இவ்விரு மக்தப்களும் துவக்கப்பட்ட பின்னர் மாணவர்களிடமும் - அவர்கள் சார்ந்த பகுதிகளிலும் ஏற்பட்ட மாற்றங்கள், பெற்ற பயன்கள் குறித்து விளக்கிப் பேசினர்.
நகரின் இரு பகுதிகளில் தற்போது நடைபெற்று வரும் இந்த மக்தப் மத்ரஸா, அனைத்துப் பகுதிகளிலும் துவக்கி, நடத்தப்பட வேண்டும் என்றும், அதன் மூலம் முழு ஊருக்கும் பயன்கள் நிறைவாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே இலட்சியம் என்றும் உரையாற்றினோர் தமதுரையில் கூறினர்.
இரு மக்தப்களின் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டனர். மக்தப் மக்தூமிய்யா ஆசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் அலீ ஃபாஸீ, மவ்லவீ முஹம்மத் அப்பாஸ் காஷிஃபீ, மவ்லவீ ஹாஃபிழ் ஷேக் உஸ்மான் அலீ ஃபைஜீ, அதன் ஒருங்கிணைப்புக் குழுவினரான ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், மக்தப் ஹாஃபிழ் அமீர் ஆசிரியர் அஷ்ரஃப் அலீ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மக்தப் மக்தூமிய்யா குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மக்தப் ஹாஃபிழ் அமீர் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மகுதூம் ஜும்ஆ பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |